வியாழன், 2 ஜூன், 2022

செங்கல்பட்டு யோகா உயர்வு மையத்திற்கு திருமூலர் பெயர் .. முதல்வர் ஸ்டாலினுக்கு அறிஞர்கள் வேண்டுகோள்

May be an image of text that says 'தமிழக அரசே..! செங்கல்பட்டு யோகா உயராய்வு மையத்திற்கு திருமூலர் பெயரைச் சூட்டுக..!'

Sundaravadivel Balasubramanian :  My letter to the Honorable Chief Minister of Tamil Nadu regarding the naming of the International Yoga and Naturopathy Medical Science Centre in Chengalpattu, Tamil Nadu.
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்!
என் பெயர் சுந்தரவடிவேல். நான் தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைத் துறையில் பணிபுரிகிறேன்.
எனது ஆராய்ச்சி உயிரணுக்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியது.
அதனோடுகூடவே மூச்சுப்பயிற்சி முறைகளையும் ஆராய்ச்சி செய்துவருகிறேன். எங்களது ஆராய்ச்சியானது, முதன்முதலாக தமிழ்ச் சித்தர்களில் ஒருவரான திருமூலர் அவர்களின் திருமந்திர நூலில் இருக்கும் மூச்சுப்பயிற்சி முறைகளை ஆராய்ந்து அதன் விளைவாக உடலில் ஏற்படும் வேதிமாற்றங்களை எடுத்துக் கூறியது.
குறிப்பாக நரம்புகளை வளர்க்கும் புரதங்களும், உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை உண்டாக்கும் புரதங்களும், மன அழுத்தத்தைக் குறைக்கும் புரதங்களும் மாறுபடுவதைக் கண்டறிந்தோம்.



இவை உலகின் சிறந்த அறிவியல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. ஆராய்ச்சி உலகினரும், யோக விற்பன்னர்களும் உணர்ந்து போற்றும் வகையில் எமது ஆராய்ச்சி அமைந்துள்ளது. இவ்வாராய்ச்சியின் பயன்களை உடல்நலம் காக்க விரும்பும் யாவரும் பெறும் வகையில் பரப்பி வருகிறோம். இதனை தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகம் வாயிலாகவும், எமது பிராணாசயன்ஸ் நிறுவனம் வாயிலாகவும் செய்து வருகிறோம். குறிப்பாகத் தற்போது தேசிய நலக் கழக (National Institutes of Health, NIH) அமைப்பால் நிதியுதவி பெற்று, புற்றுநோயாளிகளுக்காக மூச்சுப்பயிற்சி முறைகளை வடிவமைத்து ஆராய்ந்து வருகிறோம். எனது ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளைக் குறித்து நூல்களை எழுதியும் உரைகளை நிகழ்த்தியும் வருகிறேன். குறிப்பாக எனது இரு நூல்கள் அண்மையில் சென்னையில் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களால் வெளியிடப்பட்டன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.  
தமிழ்நாட்டில் தாங்கள் முன்னெடுத்து வரும் ஆக்கப்பணிகளை அமெரிக்கத் தமிழர்களுடன் இணைந்து நானும் வரவேற்கிறேன். தங்கள் பணிகள் மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சித்த மருத்துவத்தின் பயன்பாடுகளை கோவிட் தொற்றுச் சூழலில் தமிழ்நாடும் உலகில் பலரும் உணர்ந்துகொண்டனர்.

கோவிட் மட்டுமல்லாது 4448 நோய்களுக்கும் மருந்துகளையும், மனம் சிறப்புற இயங்க, வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க, உடலை விட்டுச் செல்லும் தறுவாயிலும் மகிழ்ந்து இருக்க எளிய வழிகளைச் சித்தர்கள் காட்டியுள்ளனர். “மறுப்பது சாவை மருந்து எனலாமே” என்பார் திருமூலர். இத்தகைய சித்தர்களின் தத்துவங்களை இப்போதுதான் அறிவியல் உலகம் புரிந்துகொள்ள முற்படுகின்றது. மூச்சுப் பயிற்சிகளுக்கும் நரம்பு மண்டலத்துக்குமான தொடர்புகளைத் திருமூலர் கூறியிருந்தாலும், அவற்றை இப்போதுதான் அறிவியல் கருவிகளின் துணையோடு நாம் புரிந்துகொள்ள இயலுகிறது. நரம்பியல் நிபுணர்களும் அறியாத சில உண்மைகள் நமது திருமந்திரத்திலும் ஏனைய சித்தர்களின் பாடல்களிலும் காணக் கிடைக்கின்றன. அமெரிக்காவின் சிறந்த மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்றில் பணிபுரிந்தாலும், எனது உணர்வும், அறிவும் தமிழால் நிரம்பியிருப்பதும், தமிழ் நூல்களில், குறிப்பாக சித்தர் பாடல்களில் தொடர்ந்து தேர்ச்சியும் நுணுக்கமான பார்வையும் கொண்டிருப்பதாலும் என்னால் தொன்மையான திருமூலருக்கும், தற்போதைய அறிவியலுக்குமான தொடர்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனை ஒரு அரிய வாய்ப்பாகவும், தமிழ் எனக்குக் கொடுத்த மாண்புமிகு கொடையாகவும் நான் பார்க்கிறேன்.

இந்த வகையில் சித்தர்களின் மருத்துவக் கொடை உலகிற்குப் பயன்படும் வகையில் தங்களின் அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவது போற்றுதற்குரியது. உலகிற்கு இது பற்பல நூற்றாண்டுகளுக்கு நலத்தை வாரி வழங்கும் என்பது திண்ணம். இது குறித்துத் தங்களின் உயர்பணிகள் வெல்ல வேண்டும் என உளமாற வேண்டுகிறேன். இவ்வகையில் எனக்கு ஒரு வேண்டுகோள் உண்டு. அதனைக் கனிவாகப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.  தற்போது செங்கல்பட்டில் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையத்திற்கு, திருமூலரின் பெயரைச் சூட்டுமாறு தங்களை அன்போடும், பணிவோடும், தொலைநோக்குப் பார்வையோடும், வரலாற்று முக்கியத்துவத்தோடும் வேண்டிக் கொள்கிறேன். திருமூலரின் அறிவியல் நோக்கையோ, அவரது பாடல்களையோ தவிர்த்துவிட்டு யோகத்தினைப் புரிந்துகொள்வது என்பது முழுமையாகாது என்பதைத் தங்களின் மேலான பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். யோகம்  மட்டுமல்லாது, சரியை, கிரியை, ஞானம் என்ற மற்ற நெறிகளையும் ஆழ்ந்து அறிந்து திருமந்திரம் வாயிலாக நமக்கு அறியத் தருகிறார் திருமூலர்.

உலகம் முழுமைக்குமான நல்வாழ்வினைப் போதித்தவர் என்ற வகையில் திருமூலர் பெயரினை அந்த மையத்திற்குச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்பதைப் பல்வேறு அறிஞர்களும் தங்களிடம் வேண்டுகோளாக வைக்கின்றனர். இதனைக் கனிவுடன் கருத்தில் ஏற்று, திருமூலர் பெயரைச் சூட்டுவீர்கள் என உறுதியாக நம்புகிறோம். தாய்த் தமிழ்நாட்டில் நிகழும் ஒவ்வொரு தமிழ் சார்ந்த ஆக்கமும், என்னைப் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும், மேலும் பற்பல ஆக்கங்களைச் செய்யத் தூண்டும். உலகிற்குத் தமிழின் பெருமையை மேன்மேலும் எடுத்துச் சொல்லவைக்கும். அடுத்த முறை நான் தமிழ்நாட்டிற்கு வரும்போது திருமூலரின் பெயரைத் தாங்கி நிற்கப் போகின்ற அந்த நிறுவனத்திற்கு வந்து எனது யோக ஆராய்ச்சி உரையினை நிகழ்த்த வேன்டும் என்பது எனது அவா, கனவு, வேண்டுகோள். இது குறித்துத் தங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்படின் அளிக்கத் தயாராக உள்ளேன்.
தமிழுக்குத் தங்கள் தொண்டு செழிக்க உளமாற வாழ்த்தும்
அன்பன்
சுந்தர் பாலசுப்ரமணியன்

கருத்துகள் இல்லை: