புதன், 10 நவம்பர், 2021

எதிர்பார்த்ததை விட அதிக வேகம்.. வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனி புயலாக மாறுமா?

 Shyamsundar  -   Oneindia Tamil : s சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் தீவிர மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. நேற்று பிற்பகல் 12 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?
இதையடுத்து இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 36 மணி நேரத்தில் உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டது.


நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே இது உருவெடுத்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

மிக வேகமாக வலிமை அடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, குறைந்த தாழ்வு பகுதியில் இருந்து ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் வெப்பநிலை, நீர் ஆவியாதல் உள்ளிட்ட காரணங்களால் அங்கு தாழ்வு பகுதி வேகமாக வலுப்பெற்று வருகிறது. நினைத்ததை விட வேகமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகிறது.

 இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். ஆனால் அதன்பின் இது புயலாக உருவெடுக்குமா என்று கணிக்க முடியாது. இப்போது இருக்கும் நிலவரப்படி புயல் உருவாவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவவில்லை. காற்றழுத்த தாழ்வு பகுதி அதற்கு முன்பாக கரைக்கு அருகே வந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய பின் புயலாக மாறுமா என்பது சந்தேகமாக உள்ளது. 

இப்போதைக்கு புயலாக மாற வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனாலும் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: