BBC Tamil :தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் அக்காவே காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளதோடு, அந்த அக்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சோகம் அவ்வப்போது நடக்கிறது. விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் பல மணி நேர பெரு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.
ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவோர் அதனை உரிய முறையில் மூடாமல் செல்வதற்கு தண்டனை விதிக்கவேண்டும் என்று ஒருபுறம் குரல்கள் எழுகின்றன. மறுபுறம் இப்படி விழும் குழந்தைகளை மீட்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும் கருவிகள் கூட இந்த பிரச்னையில் பெரிய அளவில் பயன்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில்,
அப்படி ஒரு அபாயகரமான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தம் தங்கையை உடனடியாக,
சமயோசிதமாக செயல்பட்டு அந்தக் குழந்தையின் அக்கா மீட்டதாக கூறப்படும்
சம்பவம் பலருக்கும் ஆசுவாசத்தையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர
ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வெட்டுக்காட்டு கிராமத்தில் நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரின் மூன்று பெண் குழந்தைகளில் இரு மகள்கள் தேவிஸ்ரீ (14) ஹர்சிணி (9) இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்க சென்றனர்.
அங்கே இருந்த ஒரு கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் 'அக்கா காப்பாற்று' என்ற அலறலோடு விழுந்துள்ளார் ஹர்சினி. கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு, ஆனால், தண்ணீர் இல்லாததால் கைவிடப்பட்ட கிணறு அது.
தங்கையின் அலறலைக் கேட்டவுடன் உடனடியாக செயல்பட்ட தேவிஶ்ரீ குழிக்குள் விழுந்த தங்கையின் தலைமுடியை பிடித்து மேலே தூக்கியபடியே, அவரும் சப்தமிடவே, அருகிலுள்ளவர்கள் வந்து சிறுமியை மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெற்றி வரை போர் குழிக்குள் இறங்கிய சிறுமி மீட்கப்பட்ட சம்பவம், கிராம மக்களிடம் அதிர்ச்சியையும் மகிழ்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வருவாய் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உடனடியாக ஆழ்துளை கிணற்றை மூடி அதன் மீது முட்செடிகளை போட்டு விட்டு சென்றுள்ளனர்.
ஆழ்துறை கிணறு மூடப்படாதது ஏன்?
இச்சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிறுமியின் தந்தை பிரபு, "கடந்த ஓராண்டுக்கு முன் கண்மாய் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் போதுமான அளவு தண்ணீர் வரத்து இல்லாததால் அந்த ஆழ்துளை கிணறு முறையாக மூடப்படாமல் தற்காலிகமாக பைப் ஒன்றை வைத்து அடைத்தனர்," என்றார்.
"நேற்று எங்களுக்கு சொந்தமான ஆடுகளை எனது மகள்கள் பள்ளி விடுமுறை என்பதால் கண்மாய் பக்கம் மேய்ச்சலுக்காக அழைத்து சென்று விட்டு வீடு திரும்பும் போது முறையாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றுள் எனது இளைய மகள் ஹர்சினி விழுந்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த என் மகளை அருகில் இருந்த என மூத்த மகள் தேவிலவகமாக மீட்டுள்ளார்."
"இது மாதிரியான பயனற்ற ஆழ்துளை கிணறுகள் எங்கள் பகுதியில் ஆங்காங்க உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக பயன்பாட்டில் இல்லாமல் முறையாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எனது குழந்தை போல் பல குழந்தைகள் குழிக்குள் சிக்க நேரிடும் எனது மகள் துரிதமான செயல்பட்டதால் ஒரு உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.
முறையாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் பல உயிர்களை இழக்க நேரிடும். என் மகளுக்கு நடந்த விபத்தை முன்னுதாரணமாக எடுத்து விபத்துகள் நடைபெறுவதற்கு முன் ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்கிறார் பிரபு.
ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி ஹர்சினி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். நேற்று எங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்பதற்காக கண்மாய்க்கு அழைத்து சென்று விட்டு வீட்டுக்கு திருப்பி அழைத்து சென்ற போது வழியில் பெரிய கல்லொன்று கிடந்தது. கல்லில் கால் பட்டு அருகே இருந்த குழிக்குள் தவறி விழுந்து விட்டேன். உடனே அருகே சென்ற எனது அக்கா தேவியை நோக்கி, என்னை காப்பாற்று என கத்தினேன்," என்றார்.
"முகம் அளவுக்கு குழிக்குள் போன என்னை எனது அக்கா மிகவும் கஷ்டப்பட்டு காப்பாத்தி மேலே இழுத்தால் உயிர் பிழைத்தேன்," என்றார் சிறுமி ஹர்சினி.
சிறுமியை மீட்ட தேவி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நேற்று மாலை ஆடு மேய்த்து விட்டு திரும்பும்போது எனது தங்கை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டால். என் தங்கையின் கதறல் சத்தம் மட்டும்மே கேட்டது. ஆனால் என் தங்கையை காணவில்லை உடனடியாக அங்கிருந்த குழிக்குள் பாhத்தபோது தலை அளவு குழிக்குள் இருந்தாள். உடனடியாக தலைமுடியை பிடித்து மேலே கஷ்டப்பட்டு தூக்கி விட்டேன். மழை பெய்ததால் குழியை சுற்றிலும் உள்ள மண்கள் இடிந்து குழிக்குள் விழ ஆரம்பித்தது. நான் சுதாரித்து எனது தங்கையை லவகமாக இழுத்து மேலே போட்டு விட்டேன்," என்றார் தேவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக