ஆனால் இந்து மக்களின் மிக முக்கிய வைணவத் திருத்தலமான ஸ்ரீரங்கம் கோவிலை பாஜக தனது கட்சிக் கூடாரமாக ஆக்கி ஒட்டுமொத்த இந்துக்களையும் இழிவுபடுத்திவிட்டதாக அந்த பாஜக மீதே ஆக்ரோஷமாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வைணவ செயற்பாட்டாளர் ரங்கராஜ நரசிம்மன்.
ஸ்ரீ ராம பானம் என்ற அமைப்பை நடத்தி வரும் ரங்கராஜ நரசிம்மன், ஸ்ரீரங்கம் கோவிலில் அரசு நிர்வாகத்தின் அத்துமீறல்கள், திருப்பணி என்ற பெயரில் டிவிஎஸ் நிறுவனம் நடத்திய அத்துமீறல்களை எல்லாம் எதிர்த்து களத்திலும் சட்ட ரீதியாகவும் போராட்டம் நடத்தி வரும் வீர வைணவர். இவர் தமிழக பாஜக மீது குற்றம் சாட்டியதற்காக இந்து மத நம்பிக்கக்காக போராடும் அவருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘எனக்கு ஏதேனும் ஆயிற்று என்றால் அதற்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான். இதை எனது வாக்குமூலமாகவே எடுத்துக் கொள்ளுங்கள்”என்று தொடர்ந்து அவர் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
என்ன நடந்தது?
நவம்பர் 5 ஆம் தேதி கேதார் நாத்தில் பிரதமர் மோடி ஆதி சங்கரர் சிலையை நிறுவி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடக்கி வைத்து உரையாற்றினார். இதை தமிழக பாஜகவினர் பலரும் பல்வேறு ஆலயங்களில் பிரதமர் மோடியின் உரையை ஸ்க்ரீன் கட்டி ஒளிபரப்பி இந்து மத கோவில்களை தங்களது அரசியல் மையங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வகையில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் வீடியோ ஸ்க்ரீன் அமைத்து அதை தனது கட்சியினரோடு அமர்ந்து பார்த்திருக்கிறார்.
இப்படி பாஜக தனது அரசியல் களமாக தமிழக கோயில்களைப் பயன்படுத்தியதை தமிழகத்தில் இருக்கும் திமுக அரசோ, கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத் துறையோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் தொன்மைக்காகவும் தூய்மைக்காகவும் தொடர்ந்து போராடும் வைணவர் ரங்கராஜ நரசிம்மன், பாஜகவை எதிர்த்து பெரும் கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.
அவர் இதுகுறித்து தமது ராம பானம் ஃபேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 6 ஆம் தேதி ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், “பாரதப் பிரதமர் மோடி நவம்பர் 5 ஆம் தேதி கேதார்நாத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த விழாவில் கோயில்கள் நமது தேசத்தின் பெருமிதங்கள் என்று மோடி பெருமைப்பட்டார். ஆனால் அதே நாளில் தமிழக பாஜக மத ஸ்தலங்களை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்தியிருக்கிறது.
தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்கு வந்திருக்கிறார். பெருமாளை தரிசனம் செய்ய அவர் வந்திருந்தால் அதை செய்துவிட்டு அவர் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் கோவிலை பெருமிதமாக பார்க்க வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி ஒருபக்கம் சொல்லும்பொழுது அதே நேரத்திலே அதே நிகழ்ச்சியை அண்ணாமலை ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் தாயார் சன்னதி எதிரில் இருக்கும் கருத்துரை மண்டபத்தில் ஒரு அரசியல் களமாக, தம்முடைய கட்சியின் கூட்டத் தளமாக மாற்றியிருக்கிறார். கோவிலை இழிவுபடுத்தும் வகையில் கோவிலுக்கு உள்ளே கட்சிக்காரர்களை கூட்டிக்கொண்டு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை அங்கே ஒரு டிவி ஸ்கிரீன் வைத்துக்கண்டு கேதார்நாத்திலே பாரத பிரதமர் நடத்திய நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார். இது கோவிலா அல்லது இவர்களுடைய கமலாலயமா என்று எனக்குத் தெரியவில்லை.
மத வழிபாட்டு தளத்திலே கட்சிக்காரர்களை கூட்டி வைத்துக் கொண்டு நாட்டில் பிரதமர் சொல்லும் விஷயத்தை இங்கே கேட்பீர்கள் என்றால், நாளை வேறு ஒருவர் இங்கே வந்து இதே போல கட்சி கூட்டத்தை கூட்டுவேன் என்று சொன்னால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது திமுக. சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். இப்படி இருக்கும்போது பாஜக கோவிலுக்குள் சென்று அந்த கோவிலுடைய மண்டபத்தை பெருமாளுடைய மண்டபத்தை இவர்களுடைய கட்சி கூடாரமாக மாற்றி அங்கே ஒரு தமாஷா நடத்துவது என்றால் பாஜகவிற்கு திமுக விற்கும் என்ன வித்தியாசம்?
இந்த கோவில் இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்? ஒரு கோவிலிலே வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்படும் போது ஒரு நாலு பேர் வந்து பஜனை செய்தால் போலீஸ்காரன் பின்னாடி வந்து நிற்கிறான். இதே ஸ்ரீரங்கத்தில் பாகவதர்கள் அனைவரும் தெருவிலே பஜனை செய்து கோவிலுக்கு உள்ளே நுழையும்போது போலீஸ்காரர்கள் வந்து அவர்களை தடுத்து திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆனால், அதே கோவிலிலே கோவிலிலே இப்போது எப்படி பாஜகவுக்கும், அதன் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் அவருடைய கூட்டத்தாருக்கும் சேர்ந்து கட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது? இது சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் செயல். இது என்ன கொடுமையான செயல்.
பாஜகவினால் கோயில்களுக்கு இம்மியளவு பிரயோஜனம் கிடையாது. இத்தனை நாள் இதே ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவிலில் மூலவர் விக்கிரகத்தின் திருவடிகளை சிதைத்து மாற்றி அமைத்தது பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கும் வக்கில்லாத பாஜகவினர், அதே பெருமாளுடைய கோவிலில் எந்த தைரியத்தில் எந்த ஆணவத்தில் தங்களுடைய கட்சித் கூடாரமாக மாற்றினார்கள் என்பதற்கு கோவில் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். இது இது ஒரு சட்ட விரோதமான செயல் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல். இது போன்ற செயல்களை பாஜக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
இந்துத்வா என்று சொல்லிக் கொண்டு, உத்தரகண்டில் இருக்கும் கோயில்களை எடுத்துக்கொண்டது. பிறகு இங்கே ஸ்ரீரங்கத்தில் வந்து இவர்களுடைய கட்சி கூடாரமாக கோவிலை மாற்றுகிறது/ நாளை திமுகவினரோ திகவினரோ கோவிலில் கூட்டம் செய்ய வேண்டும் என்று வந்தால் இந்த கோயிலின் ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து என்ன செய்வார் அனுமதிப்பாரா.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகிறோம் என்று பிரதமர் மோடி பெருமிதமாக சொல்லுகிறார். ஆனால் அந்த ராமபிரான் வழிபட்ட ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் விக்கிரகத்தை சிதைத்தது பற்றி ஒரு வார்த்தை பேசாத பாஜகவினர் இப்போது அதே பெருமாள் கோவிலில் எந்த முகத்தை வைத்துக்கண்டு கூட்டத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்? அண்ணாமலை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக கையில் கோயில்கள் சென்றால் இப்போது இருப்பதை விட மிக மோசமாகிவிடும் என்பதற்கு இதுவே சான்று” என்று சரமாரியாக தாக்கியிருக்கிறார் ரங்கராஜ நரசிம்மன்.
இந்த வீடியோவை வெளியிட்ட பிறகு பரம ஆன்மிக வாதியான ரங்கராஜ நரசிம்மனுக்கு பாஜகவினர் தொலைபேசி செய்து கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மீண்டும் பதிவிட்டுள்ள ரங்கராஜ நரசிம்மன், “சட்டத்திற்கு யாரும் அப்பார்பட்டவர்கள் இல்லை. ஆனால் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை தன்னை சட்டத்திற்கும் மேலாக நினைத்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத ஸவாமி கோவிலில் கோவில் வழிபாடுகளுக்கு துளியும் சம்பந்தமில்லாத அரசியல் கூட்டத்தை ஆன்மீக கூட்டம் என்கிற போர்வையில் 5.11.2021 அன்று நடத்தினார். வேணு சீனிவாசன், அதிமுக அரசு, திமுக அரசு சட்டவிரோத செயலில் ஈடுபட்டபோது அதை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்து அது குறித்து காணொளி வெளியிட்ட போது, பாராட்டியவர்களுக்கு ஏனோ அண்ணாமலை செய்த சட்ட விரோத செயலைச் சொன்னால் மூக்குக்கு மேலே கோபம் வருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு! அப்படி மட்ட புத்தியை உடைய அண்ணாமலை அடிப்பொடிகள் என்னை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனக்கு ஏதும் நிகழ்ந்தால் அதற்கு முழு பொறுப்பையும் அண்ணாமலை தான் ஏற்க வேண்டும். இந்த காணொளியில் என்ன சட்டங்களை அவர் மீறினார் என்றும், இந்துக்களுக்கு ஆதவாக இருப்பவராக அவர் நிரூபிக்க நினைத்தால், வேதாரண்யம் ஸ்ரீ வேதபுரீஸ்வரருக்கு சொந்தமான 2426 ஏக்கர் நிலத்தை (அதற்கு மேலுள்ள நிலங்களையும்) மீண்டும் கோவில் பெயருக்கே எழுதி வைக்க ஒரு சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயலைச் செய்ய வேண்டும் என்று சவால் விடுகிறேன்! அப்படி செய்யவில்லை என்றால், "அரசியலில் எல்லா கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே" என்பதை அவர் நிரூபித்ததாக நீங்கள் கொள்ளலாம். போலிகளுக்கு உங்கள் ஆதரவை கொடுக்காதீர்கள். நம் சுதந்திரத்தை பறிக்கும் செயலைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நம் சநாதன தர்மத்திற்கு எதிரியே”என்று கூறியிருக்கிறார் ரங்கராஜ நரசிம்மன்.
தமிழகத்தில் கோயில்களில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய செய்தி மழைவெள்ளத்தில் ஊடகங்களில் இருந்து அடித்துச் செல்லப்பட்டிருந்தது. அதை இப்போது ரங்கராஜ நரசிம்மனின் போராட்டம் மீட்டெடுத்திருக்கிறது.
பாஜக என்ன சொல்லப் போகிறது?
-ராகவேந்திரா ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக