புதன், 14 அக்டோபர், 2020

மிஷன் ‘K’: K என்றால் KUSHBOO அல்ல ‘KOLLYWOOD’!

minnampalam : 2020ஆம் ஆண்டின் டிரெண்டிங்கில் கொரோனாவைத் தவிர்த்து எதை சேர்ப்பீர்கள் என்று கேட்டால், பாஜக கட்சியில் இணைந்த தமிழக பிரபலங்கள் என்பதைக் கண்டிப்பாகக் கூறலாம். அந்த அளவுக்கு பாஜகவில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதிலும், தமிழகத்தில் சீரியஸாக இந்த வேலை நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் குஷ்பு இணைவதற்கு முன்னரே பரபரப்பைக் கிளப்பிய செய்தி ‘விஷால் பாஜகவில் இணைகிறார்’ என்பதுதான்.

மிஷன் ‘K’: K என்றால் KUSHBOO அல்ல ‘KOLLYWOOD’!பாஜகவின் தேசிய தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைய அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார் விஷால் என்ற செய்தியை, ‘நாங்கள் யாரிடமும் அப்பாயின்ட்மென்ட் கேட்கவில்லை’ என்று விஷால் தரப்பு மறுத்தது. விஷால் இணைப்புத் தகவலை வெளியிட்ட பலரும், ‘எங்கள் தகவல் உண்மையாகும் காலம் வரும் காத்திருந்து பாருங்கள்’ என்று அப்போது கூறினர். அதற்கான காலம் வந்துவிட்டதாக இப்போது கூறுகின்றனர். அது என்னவென்று விசாரித்தபோது... “தமிழக பாஜகவில் விஷால் சேர்வது கிட்டத்தட்ட முடிவான ஒன்று. பாஜகவின் தலைவர்களைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்கவில்லை என்று விஷால் தரப்பு சொன்னதே தவிர, பாஜகவில் சேரமாட்டார் விஷால் என்று கூறவில்லை. 

விஷாலின் பாஜக இணைப்புக்கு சரியான தருணம் வரட்டும் என்று காத்திருக்கின்றனர். 2021ஆம் வருட சட்டமன்றத் தேர்தல்தான் டார்கெட். மற்ற கட்சியினர் திரையுலகங்களைப் பிடித்து, அவற்றின் மூலம் மாநில தேர்தலில் எப்படி புரமோஷன் செய்தார்களோ, அதுபோலவே இப்போதும் களமிறங்கியிருக்கின்றனர். தமிழ் சினிமாவுடன் தொடர்பில் இருந்துகொண்டு பாலிவுட்டிலும் தொடர்பிலிருந்த பலர் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றனர். பாஜகவுக்கு எலெக்‌ஷனில் உதவும் நடிகர்களுக்கெல்லாம் தங்கள் கைகாட்டும் தயாரிப்பாளர்கள் படமெடுத்துக் கொடுப்பதாகவே இந்தத் திட்டம். இது கொரோனா காலம் முடிந்து சினிமா தொழில் முழு வீச்சில் தொடங்கிய பிறகு தான் தெரியும் எனக் காத்திருந்தோம். இப்போது, இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தை அறிவித்திருக்கிறார்கள். அதன் தயாரிப்பாளர் யார் என்றும், அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றும் பார்த்தாலே விஷயம் விளங்கிவிடும்” என்கின்றனர்.

ஆனந்த் ஷங்கர் அறிவித்துள்ள விஷால் - ஆர்யா இணையும் மல்டிஸ்டார் திரைப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் வினோத் குமார் பாஜக ஆதரவாளராக அறியப்பட்டவர். “தமிழ் சினிமாவில் இவர் தலைகாட்டியபோது, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் ஆதரவாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். எனவே, இவரை யாரும் பெரியதாகக் கண்டுகொள்ளவில்லை. புரொடக்‌ஷன் கம்பெனியின் அனைத்து வேலைகளும் முடிந்ததும், தற்போது விஷாலை வைத்துப் படமெடுப்பதாக அறிவித்திருக்கிறார்” என்கின்றனர் வினோத் குமாரை தாணு தரப்பு என்று நம்பியவர்கள்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாஜக இதே திட்டத்தை தான் கடைப்பிடிக்கிறது என்றாலும், தமிழகத்தில் இந்த ஃபார்முலாவை ஆக்டிவேட் செய்ய பாஜகவுக்குப் பெரிய பிரச்சினைகள் இருக்காது என்பது தான் உண்மை.


திரைப்பட நடிகையும், சமீபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டவருமான குஷ்புவைக் கடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனது அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்தவர் விஷால். அதே ஃபார்முலாவை அடுத்த தேர்தலிலும் விஷால் தொடர்ந்தால் இப்போது தாணு Vs விஷால் என்று சென்றுகொண்டிருக்கும் தேர்தல் போட்டி, தாணு Vs பாஜகவின் குஷ்பு என்று மாறிவிடும். சங்கத்தில் குஷ்புவை எதிர்ப்பது, பொதுவில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு சமம். இந்தப் பிரச்சினையை தமிழ் சினிமா எப்படி கையாளப்போகிறது என்பதே அடுத்த சில வருடங்களில் கோலிவுட் எப்படி இருக்கப்போகிறது என்பதை முடிவு செய்யும். ஆனால் தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் இதுவரை பிரிக்கப்பட்டதே இல்லை என்பதால் நாமும் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-முத்து-

கருத்துகள் இல்லை: