எந்தவொரு இன வன்முறையிலும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை போலீசார் பதிவுசெய்வதில்லை. விசாரணை சரியாக நடைபெறுவதில்லை, போதுமான ஆதாரங்களை சேகரிப்பதில்லை, இறுதியாக, முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
பலவீனமான பிரிவு மக்களுக்கு எதிராக போலீஸ் அமைப்பில் ஒரு பாகுபாடு நிலவுவதாகவும், சாதி அதில் ஒரு முக்கிய அங்கம் என்றும் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
1997 ல் பிகாரில் லக்ஷ்மண்பூர் பாத்தேயில் 58 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டது, 2011ல் ஹரியானாவின் மிர்ச்பூரில் தலித் சமூதாயத்தை சார்ந்தவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்ட விவகாரம் அல்லது 2016ல் குஜராத்தின் உனாவில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை என்று எதுவாக இருந்தாலும், இந்த வழக்குகள் அனைத்திலும் காவல்துறை , சாதிவாத பாகுபாட்டுடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
2018ஆம் ஆண்டு உபியில் 14 வயது தலித் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் காவல்துறை எவ்வாறு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் பிபிசி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளன.
போலீஸ் அமைப்பில் இனச் சார்பு?
2004 ல் வெளியான மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில், காவல்துறையினருக்குள் ஒரு இனச் சார்பு இருப்பதாக தெளிவாகக் கூறப்பட்டது. பட்டியல் சாதியினரிடம் போலீஸ் நடந்துகொள்ளும்விதமானது அவர்களுக்குள்ளே ஆழ்ந்த சாதி சார்பு இருப்பதை காட்டுகிறது.
நீதிக்கான தேசிய தலித் இயக்கத்தின் ராகுல் சிங் கூறுகையில், பட்டியல் சாதியினருக்கான நீதிக்கான வழி, முதல் கட்டத்தில் மூடப்பட்டுவிடுகிறது. அதாவது அவர்களின் புகார் கூட பதிவு செய்யப்படுவதில்லை என்கிறார்.
தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் 2015 அறிக்கையில், பட்டியல் சாதியினருக்கு எதிராக இழைக்கப்பட்ட 6009 குற்ற வழக்குகளில், எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்று எஸ்சி-எஸ்டி ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கான காரணமும் கொடுக்கப்படவில்லை. இதை மாநில அரசுகள் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆராய வேண்டும் என்று ஆணையம் கூறியது.
இந்த அறிக்கையில் காவல்துறை புகார் கிடைத்தவுடன், அதை எஃப்.ஐ.ஆராக மாற்றுவதற்கு முன், ஆரம்பகட்ட விசாரணை செய்யப்படவேண்டும் என்று சொல்வதாக ஆணையம் கண்டறிந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட ஷெட்யூல்ட் வகுப்பினர், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு கொண்டு வர வேண்டும். அதே நேரத்தில், முதலில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை கூறியுள்ளது.
அடுத்துவரும் விஷயம், தவறான பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வது. தலித்துகள் மீதான கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பல முறை இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955 மற்றும் எஸ்சி-எஸ்டி சட்டம் 1989 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
விசாரணையின் போது நடைமுறை பின்பற்றப்படவில்லை
வழக்கின் விசாரணை 60 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதே நேரத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் எஸ்சி / எஸ்டி சட்டம் கூறுகிறது. ஆனால் இது பெரும்பாலும் நடைமுறையில் காணப்படுவதில்லை.
சட்டத்தின் 7 வது பிரிவில், டிஎஸ்பி பதவிக்கு கீழே உள்ள ஒரு அதிகாரி இந்த வழக்குகளில் விசாரணை நடத்தக்கூடாது என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய இயக்கத்தின் அறிக்கையானது, இதுவும் பின்பற்றப்படுவதில்லை என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 14 வழக்குகள் ஆராயப்பட்டன. அவற்றில் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. இல்லை.
பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா?
கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே கைது செய்யப்படும் நடவடிக்கையை, 2018 மார்ச் மாதம், உச்சநீதிமன்றம் தனது ஒரு தீர்ப்பின் மூலம் நீக்கியது. மாறாக, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு, வழக்கை பதிவு செய்வதற்கு முன் ,பூர்வாங்க விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
அப்பாவி குடிமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்காக இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் கருதியது.
இந்த உத்தரவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அரசு இதை செயல்படுத்தவில்லை.
காவல்துறையினர் குற்றவாளிகளைக் காப்பாற்ற விரும்பும் இடத்தில், வேண்டுமென்றே வழக்குகளின் விசாரணை மெதுவாக நடப்பதாக தலித் நல சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். காவல்துறையின் ஒத்துழைப்பின்மை மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக, பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர் , ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வழக்கை நடத்துகிறார். ஆனால் அதன் பின்னர் வழக்கை கைவிட்டுவிடுகிறார்.
இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம், சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களின் முறிவு, நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் சரியான முறையில் வழக்கு நடத்தாதது போன்ற காரணங்களாலும் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசின் பிரமாணப் பத்திரம் தெரிவிக்கிறது.
"சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் சட்டம் மற்றும் நடைமுறை சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை" என்று போபாலில் வழக்கறிஞராக பணியாற்றும் நிகிதா சோனவனே கூறுகிறார்.
பொய்யான வழக்குகள் இருக்கும்பட்சத்தில் காவல்துறையினர்தான் அவற்றை செய்திருப்பார்கள் என்று நிகிதா கூறுகிறார். இதன் பின்னணியில் இனப் பாகுபாடுகளை அவர் காண்கிறார்.
"தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான திருட்டு வழக்குகளில், முஸ்லிம்கள் மற்றும் குறிக்கப்பட்ட பழங்குடியினர் மீது அதிகமான வழக்குகளை நீங்கள் காண்பீர்கள். ஒரு குறிப்பிட்ட சமூகம் இதுபோன்ற குற்றத்தைச் செய்கிறது என்ற தவறான எண்ணம் காவல்துறைக்கு உள்ளது. இந்த வகை குற்றங்களை இந்த சமூகத்தினர்தான் செய்திருப்பார்கள் என்று அவர்கள் வகைப்படுத்துகின்றனர். எந்த சமூகம் எந்த குற்றங்களை செய்யும் என்றும் அவர்கள் தீர்மானித்துவிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
தலித்துகளும் ஆதிவாசிகளும் பிறவியிலேயே குற்றவியல் போக்குடையவர்கள் என்று காவல்துறைக்குள் ஒரு சார்பு உள்ளது என்பது தேசிய மனித உரிமைகள் ஆணைய அறிக்கையிலும் (2004), குறிப்பிடப்பட்டுள்ளது என்று நிகிதா சொல்கிறார்.
இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு என்னவென்றால், 2019 ஆம் ஆண்டில், குறிக்கப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த ஆறு பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. முன்னதாக 10 ஆண்டுகளுக்கு முன்னர், நாசிக் நகரில் கொள்ளை, பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் இந்த 6 பேரையும் தூக்கிலிடுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. காவல்துறையினர் பொய்யாக வழக்குத் தொடுத்ததாகவும், உண்மையான குற்றவாளிகளை அவர்கள் தப்பவிட்டதாகவும் கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. மகாராஷ்டிரா அரசு, தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இது ஒரே உதாரணம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் சமூகம் ஒரு பழங்குடி இனமாகும். 2014 ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில், இந்த சமூகத்தைச் சேர்ந்த 14 பேரை கைது செய்து சித்திரவதை செய்ததாக போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. 63 நாட்கள் அவர்களை தடுப்பு காவலில் போலீஸார் வைத்தனர். இவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவார்கள்.
2018 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரி பாக்யஸ்ரீ நவ்டகேயின் ஒரு வீடியோ வைரலாகியது. அதில் அவர், எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் புகார் செய்ய விரும்பிய 21 தலித்துகள் மீது பொய்யான வழக்குகளை தான் பதிவு செய்துள்ளதாக கூறுவதை கேட்கமுடிகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் எளிதில் ஜாமீன் பெற முடியாத வகையில் , கொலை முயற்சி பிரிவின் கீழ் தான் குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறினார். அவர் மீது விசாரணையும் நடத்தப்பட்டது.
காமன் காஸ் மற்றும் சி.எஸ்.டி.எஸ்ஸின் 2019 ஆய்வறிக்கையும், காவல் துறையின் பாகுபாடுகளை வெளிப்படுத்துகிறது. அதன்படி ஐந்து போலீஸ்காரர்களில் ஒருவர், எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பொய்யானவை என்று கருதுகின்றனர். பெரும்பாலான உயர் சாதி போலீசார் அவ்வாறு நினைக்கிறார்கள்..
தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளின் விகிதம் மிகக் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டத்தின் கீழ் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகள் மிகக் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்,
2009 முதல் 2018 வரை சிறப்பு நீதிமன்றத்த்தை எட்டிய வழக்குகளில் 25.2% மட்டுமே தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிக்கான தேசிய தலித் இயக்கத்தின் ராகுல் சிங் கூறுகிறார். அதே நேரத்தில், 62.5 சதவிகித வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இன ரீதீயிலான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ.நா குழுவும், தலித்துகள் மீது கொடுமை நடந்த வழக்குகளில் காவல்துறை, புகார்களை பதிவு செய்வதில் பெரும்பாலும் தவறிவிடுகிறது , விசாரிக்கவும் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த காரணத்தினால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை விகிதம் அதிகமாக உள்ளது மற்றும் தண்டனை விகிதம் குறைவாக உள்ளது.
'போலீஸ் அமைப்பில் சாதியின் பங்கு இல்லை'
பல முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரிகள் இந்த அமைப்பில், சாதி சார்புகளை மறுக்கின்றனர்.
"காவல்துறையில் சாதி சார்பு இல்லை. நாங்கள் சீருடை அணிந்தவுடன், சாதி முதலியவற்றை கவனிப்பதில்லை," என்று உத்தரபிரதேச முன்னாள் போலீஸ் தலைமை டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) பிரிஜ்லால் மிகத் தெளிவாக பிபிசியிடம் கூறினார்.
இது அவரது அதிகாரபூர்வ நிலைப்பாடுதானா என்று மீண்டும் அவரிடம் கேட்டபோது, இது சரியான நிலைப்பாடுதான் என்று கூறினார்.
பிரிஜ்லால், உத்தரபிரதேசத்தில் மாயாவதி அரசில், டி.ஜி.பி யாக இருந்தார். பணி ஓய்வு பெற்ற பின்னர் 2015 ல் பாஜகவில் சேர்ந்தார். 2018 ஆம் ஆண்டில், அவர் உத்தரப்பிரதேசத்தின் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
அதே நேரத்தில், போலீஸ் சீர்திருத்தத்திற்காக நீண்ட காலமாக பணியாற்றி வரும் முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங்கும், காவல்துறையில் சாதி சார்பை மறுக்கிறார்.
"நிர்வாகத்தில் காணப்படும் பாகுபாடு, காவல்துறையில் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, மாயாவதி ஆட்சிக்கு வரும்போது, தலித்துகள் மீதான அட்டூழியங்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை. அதற்கு மாறாக தலித்துகளே ஆட்டூழியம் செய்வதான பேச்சு அடிபடுகிறது. யாதவ் அட்சியில் அமரும்போது, யாதவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். "என்று அவர் கூறுகிறார்.
"காவல்துறையில் அனைத்து சாதியினரும் உள்ளனர். இடஒதுக்கீடு காரணமாக, எஸ்சி / எஸ்டி நபர்கள் அதிகமாக பணியில் சேர்ந்துள்ளனர். பலர் அதிகாரிகளாகவும் உள்ளனர். எதுவும் புரியாத போது, சாதி சார்பு மற்றும் பாகுபாடு என்று கூறிவிடுகின்றனர்."என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும், 2016 ல் ஹரியானாவில் நடந்த ஜாட் போராட்டத்தின் போது நடந்த வன்முறைக்குப் பின்னர் அரசு , பிரகாஷ் சிங் குழுவை நியமித்து அறிக்கை தருமாறு பணித்தது.
"காவல்துறை அதிகாரிகள், அரசின் ஆதரவு கிடைக்காது என்ற பயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது தங்கள் 'சாதி சார்பு' காரணமாக கண்டிப்பைக் காட்டவில்லை. இதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படவில்லை. அவர்கள் குற்றவாளிகளுக்கு உடந்தையாக காணப்பட்டனர். அவர்கள் பணி செய்யாமல் ஓடிவிட்டதாக தெரிந்தது . கலகக்காரர்களை ஊக்குவிப்பதாக அவர்கள் நடவடிக்கை இருந்தது. " என்று இந்த அறிக்கையில், அவர் எழுதினார்.
மகளிர் அதுவும் தலித்
உத்தரபிரதேசத்தின் ஹாத்ரஸில் ஒரு தலித் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான வழக்கு பல நாட்களாக தலைப்புசெய்திகளில் அடிபடுகிறது. இது குறித்து பாரபங்கியைச் சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீவாஸ்தவாவின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் , "இது ஒரு காதல் விவகாரமாக இருந்ததால் பெண் , பையனை தினை வயலுக்குள் அழைத்திருக்க வேண்டும். எல்லாமே சமூக வலைதளங்களிலும், சேனல்களிலும் உள்ளது. இவர்கள் பிடிபட்டிருக்க வேண்டும். இது பெரும்பாலும் வயல்களில் நடக்கும். இது போல இறக்கும் பெண்கள் சில இடங்களில் தான் காணப்படுகிறார்கள். " என கூறுகிறார்
"இந்திய சமுதாயத்தில் பெண்ணாக அதுவும் தலித் சமூக பெண்ணாக இருப்பது, இருமடங்கு பிரச்சனையான நிலையாகும். தலித் பெண்கள் தங்கள் பொருளாதார நிலை காரணமாக வெளியே வேலை செய்கின்றனர். மற்றவர்களின் வயல்களில், மற்றவர்களின் வீடுகளில் பணி செய்கின்றனர். அங்கு அவர்கள் மீது ஏராளமான பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன. இதுபோன்ற செயல்கள் தவறான காரியமல்ல என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த மனநிலையுள்ளவர்கள் காவல்துறையிலும் உள்ளனர், "என்று முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி தெரிவிக்கிறார்.
காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
எஸ்சி-எஸ்டி அல்லாத மற்றும் இந்த சட்டம் பற்றி தெரிந்திருந்தும் கடமையைச் செய்யாத எந்தவொரு அரசு அதிகாரிக்கும் தண்டனை விதிக்கப்படலாம் என்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 கூறுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றம், அதன் ஒரு தீர்ப்பில், ஒரு தலித்தின் புகாரை பதிவு செய்ய மறுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு, விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
பட்டியல் சாதியினரின் வழக்குகளை பதிவு செய்வதில் காவல்துறை எந்த தாமத்தையும் செய்வதில்லை. ஏனெனில் புகார் அளிக்கப்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று எல்லா அறிக்கைகளும் இருந்தபோதிலும், முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் கூறுகிறார்.
"இப்போது காவல்துறையினர் பட்டியல் சாதியினரை பார்த்து பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு பொய் புகாரை அளித்தால், கைது செய்வதும் கட்டாயமாகும்" என்று அவர் கருதுகிறார்.
"பகடை சிறிதே திரும்பிவிட்டது." என்கிறார் அவர்.
இருப்பினும், முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி, எஸ்.ஆர்.தாராபுரி இந்தக்கூற்றை ஏற்கவில்லை. மேலும் அவர் காவல்துறையினருக்கு உள்ளிருத்து கிடைக்கும் ' நடவடிக்கை எடுக்க முடியாத வசதி ' குறித்தும் கூறுகிறார்.
தாராபுரி கூறுகிறார், "காவல்துறையினரின் ஏபிஆர் (வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வில்) ஒருபோதும் எதிர்மறையாக எழுதப்படுவதில்லை. பட்டியல் சாதியினர் தங்கள் பிரச்சினைகள் குறித்து மனித உரிமைகள் ஆணையம் அல்லது எஸ்சி-எஸ்டி ஆணையத்திற்குச் சென்றால், இந்த அமைப்புகளும் பலவீனமாக உள்ளன. அவை மாநில அரசுகளுக்கு புகார்களை அனுப்புகின்றன. மாநிலஅரசு , எஸ்.பி.க்களை அனுப்பும். மிக குறைவான வழக்கில்தான் ஒருவருக்கு தண்டனை கிடைக்கிறது. பிரச்சினை தீர்க்கும் வழிமுறை, தலித்துகள் மற்றும் தலித்துகள் அல்லாதவர்களுக்கும் மிகவும் மோசமாகவே உள்ளது, "
போலிஸ் பயிற்சி ஒரு பிரச்சனையா?
போலீஸ் பயிற்சியில் இன மற்றும் பாலினம் தொடர்பான பாகுபாட்டை ஊக்குவிக்காமல் இருப்பது என்ற விஷயம் இடம்பெற்றுள்ளது .ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இதுகுறித்த பயிற்சி, ஒரு கண்துடைப்பு என்று எஸ்.ஆர்.தாராபுரி கருதுகிறார்.
"காவல்துறையில் சாதிவாதம் உள்ளது. இந்த தவறான எண்ணங்கள் எளிதில் மறைவதில்லை. அதற்கு வலுவான மற்றும் முறைப்படியான பயிற்சி தேவைப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியில் 'இளமையில் பிடிக்க வேண்டும்' என்று ஒரு கோட்பாடு இருந்தது, அதாவது 21 வயதுக்குள்ளாக காவல்துறையில் ஆட்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது ஐபிஎஸ் பிரிவில், 29 வயது முதல் 34 வயது வரை நுழைகின்றனர். இந்த வயதில், மனித சிந்தனை மிகவும் உறுதியாகிவிடுகிறது. முறையான பயிற்சியால் மட்டுமே அதை மாற்ற முடியாது" என்று அவர் சொல்கிறார்.
வாக்கு வங்கி மற்றும் நோட்டு வங்கி
தலித் மனித உரிமைகள் சங்க தேசிய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விமல் தோரத், பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் காவல்துறையினரின் சாதி பாகுபாட்டு என்ணம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை விளக்குகிறார்.
"சோனிப்பத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் நடவடிக்கைக்காக நாங்கள் மறியல் செய்ய வேண்டியிருந்தது. பல சந்தர்ப்பங்களில், உயர் சாதி மக்கள் ஒரு தலித் காலனிக்கு தீ வைக்கும்போது, இழப்பீட்டிற்காக அவர்கள் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள். பெண்களின் கை, கால்கள் உடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், இவர்கள் தாங்களே அவற்றை உடைத்துக் கொண்டதாக காவல்துறை கூறுகிறது. "என்று அவர் சொல்கிறார்.
இந்த வழக்குகளில் போலீஸ் பணிகளில் அரசியல் தலையீடு குறித்தும் அவர் பேசுகிறார்.
"அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, உயர் சாதி மக்கள் வாக்கு வங்கி மற்றும் நோட்டு வங்கியாக உள்ளனர். பட்டியல் சாதியினர் இதில் வரமாட்டார்கள். அவர்கள் ஏழைகள், பின்னர் உயர் சாதியிலிருந்து வரும் குற்றவாளிகளுக்கு பல முறை அரசியல் ஆதரவும் உள்ளது. காவல்துறையினர் முறையான விசாரணையை நடத்துவதை, அரசியல் தலையீடு தடுக்கிறது, "என்று பேராசிரியர் விமல் தோரத் மேலும் தெரிவிக்கிறார்.
’போலீஸ் அமைப்பின் தோல்வியால் அதிகரித்த இன ஆணவம்’
டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், தலித் சிந்தனையாளருமான சுகுமார் நாராயண் கூறுகையில், "காவல்துறை அமைப்புமுறை தோல்வியுற்றால், இன ஆணவம் அதிகரிக்கிறது . ஏனென்றால் கொடுமை இழைத்தவர்கள், பாலியல் வல்லுறவு குற்றம் புரந்தவர்கள், குற்றத்தைச் செய்துவிட்டு பாதிக்கப்பட்டவருக்கு முன்னால் கிராமத்தில் சுற்றித் திரிகின்றனர். எவராலும் எதுவும் செய்ய முடிவதில்லை, " என்கிறார்.
"சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு இடையே பரஸ்பர உறவு உள்ளது. ஒரு தலித் , அரசியல் தொடர்புகளுடன் பணம் படைத்தவராகவும் இருந்தால், அவருக்கு நீதி கிடைக்க உதவாவிட்டாலும், காவல் துறையினர் அவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்பார்கள்," என்று பேராசிரியர் நாராயண் மேலும் தெரிவிக்கிறார்.
காவல்துறையில் உள்ள தலித் அதிகாரியும் பல முறை அமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறார் . அரசியலமைப்பு இருப்பதால் மட்டுமே, சிலரால் கேள்விகளை கேட்க முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"மக்கள் காவல்துறையை அச்சத்துடனேயே பார்க்கிறார்கள். குறிப்பாக தலித்துகள் , காவல்துறையினருக்கு அருகில் செல்லும்போது தாம் ஏதாவது சிக்கல்களில் மாட்டிக்கொள்வோமோ என்று பயப்படுகிறார்கள். காவல்துறை ,உயர் சாதி மக்களையே ஆதரிக்கும் தங்களை அல்ல என்று அவர்களின் இதயத்தில் ஒரு பயம் இருக்கிறது," என்று பேராசிரியர் நாராயண் சுட்டிக்காட்டுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக