அதனால் தற்போது பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக துரைமுருகன் தரப்பில் இன்னும் தீவிரமாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்கிறார்கள் வேலூர் திமுக வட்டாரத்தில். பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதன் மூலமாக, தேர்தலுக்குப் பிறகு திமுக அரசு அமையும் பட்சத்தில் தனக்கான முக்கியத்துவத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று கருதுகிறார் துரைமுருகன். அதுவும் இந்த முயற்சிக்கான ஒரு காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். எனவே துரைமுருகனுக்கு பாமக உள்ளே வரவேண்டும் என்ற விருப்பமிருக்கிறது.
அதேநேரம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருமான எ.வ. வேலு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஸ்டாலினிடமே தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. வேலுவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் என்ன கசப்பு?
“எ.வ.வேலு திருவண்ணாமலையில் ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மட்டுமல்ல, அதுக்கும் மேல என்ற வகையில்தான் தனது பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர், இவர் சொன்னால் ஸ்டாலின் தட்டமாட்டார் என்றெல்லாம் திமுகவில் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளிடையேயும் வேலுவை பற்றி ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறது.
ஆனால் சிறுத்தைகளின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரான பு.செல்வம், சித்தாந்த ரீதியாக நிறையப் படித்தவர். பண வசதி மிக்கவர். யாருக்கும் தலைவணங்காமல் அரசியல் செய்பவர். நானும் ஒரு கட்சியின் மாசெ, வேலுவும் ஒரு கட்சியின் மாசெ என்ற ரீதியில் வேலுவிடம் கம்பீரமாகப் பழகுபவர். மாவட்டத்தில் மற்ற நிர்வாகிகள் போல வேலுவிடம் அனுசரித்துச் செல்வதை விரும்பாதவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இந்த சுயமரியாதை வேலுவை உறுத்தியிருக்கிறது. அதனால் இந்த மாசெவை மாற்ற வேண்டும் என்று அவர் சிறுத்தைகளின் தலைமை வரைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். நம் கட்சியின் மாவட்டச் செயலாளரை நீக்குமாறு நம்மிடமே அழுத்தம் கொடுத்திருக்கிறாரே என்று அதிர்ந்துபோயிருக்கிறார் திருமாவளவன். ஆனால் இதற்கு உடன்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் சிறுத்தைகளே கூட்டணிக்கு வேண்டாம் என்று ஸ்டாலினிடம் வேலு பேசியிருப்பதாக சொல்கிறார்கள்” என்கிறார்கள் சிறுத்தைகள் வட்டாரத்தில்.
இதுகுறித்து எ.வ.வேலு தரப்பில் பேசும்போது, “அந்த செல்வம் வரும் தேர்தலில் செங்கம் தொகுதியை குறிவைத்துள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். ஆனால் தற்போது திமுக வசமுள்ள இத்தொகுதியை மீண்டும் திமுகவே கைப்பற்ற வேண்டும் என்று கருதுகிறார் வேலு. இங்கே இதுதான் பிரச்சினை” என்கிறார்கள்.
-ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக