வியாழன், 23 மே, 2019

பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !

பேராசிரியர் சாய்பாபா -  மனைவி
vinavu.com - அனிதா : ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அண்டா செல் எனப்படும் கொடுஞ்சிறையில் உள்ள பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கும்படி அண்மையில் ஐ.நா.-வின் மனித உரிமை அதிகாரிகள் கோரியிருந்தனர்.
பேரா. சாய்பாபாவின் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐநா அதிகாரிகளின் விசாரணைகளுக்கு அரசு தரப்பில் எந்தவித பதிலும் தரப்படவில்லை.



இந்தச் சூழலில் கடந்த வாரம் அவரைச் சிறையில் சந்தித்த அவருடைய சகோதரர் ஜி. ராம்தேவ், சிறையில் போதிய உணவுகூட தரப்படாமல் சாய்பாபா மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அண்டா செல்லில் உள்ள அவர், கடுமையான வெயில் காரணமாக மேலும் மோசமான அவதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இதுகுறித்து எழுதியுள்ள ஜி. ராம்தேவ், நாக்பூர் உயர்நீதிமன்ற அமர்வு மீண்டும் பிணை மறுத்துள்ள நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச சலுகைகள் கூட மறுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
“சனிக்கிழமை (11-05-2019) அன்று என்னுடைய சகோதரர் ஜி.என். சாய்பாபாவை மருந்துகள் மற்றும் சில புத்தகங்களைக் கொடுக்க சிறையில் சந்தித்தேன். சிறையில் தடுப்புகளுக்குக்கிடையே அமைக்கப்பட்ட தொலைபேசியின் வழியாக நாங்கள் பேசினோம். இதனால் அவருடைய உடல்நலம் குறித்து சரியாக விளக்கம் கேட்க முடியவில்லை. ஆனபோதும் அங்கிருக்கும் நிலைமை குறித்த சுருக்கமான அறிக்கையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
நான் சந்தித்த அன்று நாக்பூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாய்பாபா வைக்கப்பட்டிருக்கும்  உயர் பாதுகாப்பு சிறையான அண்டா செல்லில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வெயில் நேரடியாக படும். அண்டா செல்லில் அத்தகைய வெயில் கொடுமையை தாங்க முடியவில்லை என்றார் அவர். குளிர்விப்பானை கேட்டிருந்தபோதும், அதை நிர்வாகம் செய்யவில்லை என்றார்.
படிக்க:
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் !
♦ பேராசிரியர் சாய்பாபா …!
சிறை அதிகாரிகள், டாக்டர் சாய்பாபாவின் உதவிக்கு இருவரை நியமித்திருப்பதாக தொடர்ச்சியாகக் கூறினர். அந்த இருவரும் சாய்பாபாவுடன் அதே வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்கள். அவர்கள் இருவரும் அப்பாவிகளாக இருப்பதோடு, சிறை அதிகாரிகளின் அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், தங்களது குடும்பத்தை நினைத்து  அச்சமடைவதாகவும் சாய்பாபா தெரிவித்துள்ளார். இதனால் சாய்பாபாவுக்கு போதிய உதவி கிடைப்பதில்லை.
நாக்பூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள் இதய பிரச்சினைகள் உள்ளதால் கோடை காலத்தில் அதிக வெப்ப தாக்குதல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறியிருந்தனர்.
ஆனால், தொடர்ந்து வெயிலின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதால் அவரால் சிறுநீர் கழிக்கவோ மலம் கழிக்கவோ இயலவில்லை. இதனால் சிறுநீரகம் பாதிகப்பட்டிருக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் உள்ளதாகவும் அவர் சொல்கிறார்.
அவரால் உணவைக்கூட உண்ண முடியவில்லை. எந்த உணவை உண்டாலும் அது ஜீரணம் ஆகாமல் வலியை உண்டாக்குவதாக, வயிற்று எரிச்சல் அதிகமாக உள்ளதாகவும் சொன்னார். அதுபோல, தோலில் அரிப்பும் எரிச்சலும் உள்ளது.
அவருடைய இடது கை செயல்படாத நிலையில், அவருடைய வலது கையும் தன்னுடைய செயல்திறனை இழந்துவருகிறது. இரண்டு கைகளும் கடுமையாக நடுங்குகின்றன. கை நடுக்கம் காரணமாக ஸ்பூனில் உண்பதுகூட முடியாமல் போகிறது.
நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தினமும் பிசியோதெரபி பயிற்சிகள் தர வேண்டும் என சொல்லியிருந்தார்கள். ஆனால், பாதுகாப்பு படையினர் இல்லாத நிலையில் தாமாக சக்கர நாற்காலியில் அமர்ந்து மருத்துவமனைக்குச் செல்வதும்,   அவருக்கு மிகக் கடுமையாக உள்ளது.
அதோடு, மருத்துவர்கள் ஆறு தலையனைகளை பயன்படுத்தும்படியும் குளிர் மற்றும் வெப்ப ஒத்தடங்களை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தியிருந்தனர். அதுவும் இதுநாள் வரை அளிக்கப்படவில்லை.
நாக்பூர் உயர்நீதிமன்ற அமர்வு பிணையை மறுத்துள்ள நிலையில், முட்டை, பால் போன்ற சிறப்பு உணவுகளை வழங்குவதையும் சிறை நிர்வாகம் ரத்து செய்துவிட்டது.
முன்னதாக, நாக்பூர் சிறையிலிருந்து ஹைதராபாத் மத்திய சிறைக்கு சாய்பாபாவை மாற்றக் கோரிய உறவினர்களின் வேண்டுகோளை சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
”நாளுக்கு நாள் அவருடைய உடல்நலம் மோசமாகி வருகிறது. மகாராஷ்டிர அரசும், மகாராஷ்டிர மாநில ஆளுநரும் சாய்பாபாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை நாக்பூர் சிறையிலிருந்து ஹைதராபாத் மத்திய சிறைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும். ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் அவருடைய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.  நானும் என் தாயாரும் ஹைதராபாத்தில் வசிப்பதால், தேவையான மருந்துகளையும் தார்மீக ஆதரவையும் எங்களால் தர முடியும்” என தன்னுடைய முகநூலில் எழுதியிருக்கிறார் பேரா. சாய்பாபாவின் சகோதரர் ஜி. ராம்தேவ்.
மக்களுக்காகப் போராடும் முற்போக்காளர்களை பொய்க் குற்றம்சாட்டி கருப்புச் சட்டங்களின் கீழ் சிறையில் தள்ளி சித்திரவதை செய்து அவர்களை முடக்கும் வழிமுறையைக் கடைபிடித்து வருகிறது இந்த அரசு. உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் அவர்களை சித்திரவதை செய்யும் போலீசின் வழிமுறை இது. சட்டத்தின் ஆட்சி என்பதெல்லாம் வெறும் கானல்நீர்தான் என்பதை பேராசிரியர் சாய்பாபாவுக்கு நிகழ்த்தப்படும் இக்கொடுமைகள் நிரூபிக்கின்றன.
அனிதா
– அனிதா
நன்றி : அவானி நியூஸ் 

கருத்துகள் இல்லை: