நாடார் சமூகத்தினர், நல்ல உடை அணிவதற்கு தடை
விதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடுப்புக்கு மேலே ஆடை என்பது
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு கனவாக இருந்திருக்கிறது. அவர்கள்
சமூகப் பெண்களே மார்பை மறைக்க வேண்டுமானால், அதற்கு தனி வரி செலுத்த
வேண்டும் என்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டார்கள் என்று வரலாற்றிலேயே
ஆதாரப்பூர்வமாக பதிவாகியிருக்கிறது.
எண்பதுகளின் தொடக்கத்தில் தீபாவளி ஷாப்பிங் தி.நகரில்தான். ஒரு தீபாவளிக்கு
‘வேட்டைக்காரன்’ எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கவுபாய் டிரெஸ். மற்றொரு முறை
வாத்தியாரின் ‘காவல்காரன்’ படத்துக்கு tribute ஆக போலிஸ் டிரெஸ். அதற்கு
மேட்ச்சாக பர்மாபஜாரில் ஒரிஜினல் ரிவால்வர் மாதிரியே தோற்றமளிக்கும் துப்பாக்கி. அப்பா, ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். தீபாவளிக்கு
தீபாவளி என்னை கோமாளி ஆக்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை கலகக்குரல் எழுப்பி
ப்ரூஸ்லீ படம் வரையப்பட்ட பச்சை கலர் பனியன் ஒன்றை அடம்பிடித்து வாங்கி
அவரை எரிச்சலுக்கு உள்ளாக்கினேன்.அப்போதெல்லாம் தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் மளிகைக்கடையாகவோ, பாத்திரக்கடையாகவோ இருந்திருக்கலாம். உண்மையில் ரங்கநாதன் தெரு ஷாப்பிங் ஸ்ட்ரீட் ஆகவெல்லாம் இல்லை. உஸ்மான் ரோடுதான் ஃபேமஸ். ஷாப்பிங்குக்கு எல்லாரும் பூக்கடைக்குதான் போவார்கள். பிராட்வே போகும் பஸ்களில் கூட்டம் கும்மும். பூக்கடையை ஒப்பிடும்போது உஸ்மான்ரோடில் விலைவாசி ஒரு பத்து சதவிகிதம் அளவுக்காவது கூடுதலாக இருக்கும். எனவே, தி.நகரில் நெரிசலே இல்லாமல் ஷாப்பிங் செய்யலாம். நம்புங்கள். எண்பதுகளில் அப்படிதான் இருந்தது.
சரவணாவுக்கு முன்பாக அங்கே முருகன் டெக்ஸ்டைல்ஸ்தான் பிரபலமாக இருந்தது. ‘வாங்க வாங்க முருகன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று ஒரு கியூட்டான குழந்தை அழைக்கும் விளம்பரம் நினைவிருக்கிறதா? எனினும் சரவணாவோடு விலை விஷயத்தில் போட்டியிட முடியாமல் பலரும் பிசினஸை ஏறக்கட்டினார்கள். பிரபலமாக இருந்த ‘குமரன் டிரெஸ்ஸஸ்’, பனகல் பார்க் ‘குமார் சர்ட்ஸ்’ எல்லாம் காலி. பாரம்பரியமாக ராசியான துணிக்கடையென பெயரெடுத்த ‘நல்லி’ மாதிரி ப்ளேயர்ஸ் மட்டுமே சரவணாவையும் தாண்டி தாக்குப்பிடிக்க முடிந்தது.
கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க துணிமணிகளோடு மற்றப் பொருட்களையும் சரவணா அதே மலிவுவிலை டெக்னிக்கில் விற்க ஆரம்பித்தது. சரவணா என்கிற பிராண்ட் துணிக்கடையின் மூலம் பிரபலமாக ஏற்கனவே இருந்த பாத்திரக்கடை பிரும்மாண்டமாக உருவெடுத்தது. நகைக்கடையும் திறந்தார்கள். தொண்ணூறுகளின் இறுதியில் அண்ணாச்சி செல்வரத்தினத்தை அந்த பாத்திரக்கடை வாசலில் எப்போதும் பார்க்கலாம். கொஞ்சம் அழுக்காக கதர் வேட்டி, முரட்டுத் துணியில் தைக்கப்பட்ட வெள்ளைச் சட்டை என்று வியர்வை கசகசக்க நின்றுக்கொண்டே ஊழியர்களை வேலை வாங்கிக் கொண்டிருப்பார். கஸ்டமர்களை கண்டதும் கஷ்டப்பட்டு சிரிப்பார். யாராவது கம்ப்ளையண்ட் சொன்னால் அவரால் தாங்க முடியாது. ஊழியர்களிடம் கன்னாபின்னாவென்று கத்துவார். கஸ்டமர்கள்தான் அவருக்கு கடவுள்.
ஸ்தாபனம் கொஞ்சம் வளர்ந்ததும் ரேடியோ மற்றும் டிவியில் விளம்பரங்கள் தர ஆரம்பித்தார்கள். டிவி விளம்பரத்தின் மாடல் அண்ணாச்சியேதான். ‘நம்பிக்கை, நாணயம், கைராசி... உங்கள் சரவணா ஸ்டோர்ஸ்’ என்று theme signature வரும்போது அண்ணாச்சி கைகூப்பியபடியே வருவார். எனவே, இப்போது அண்ணாச்சியின் சகோதரர் மகன் சரவணன் விளம்பரத்தில் தோன்றுவது என்பது சரவணாவின் வரலாற்றில் புதியதல்ல. அண்ணாச்சியின் திடீர் மரணத்துக்குப் பிறகு சரவணா ‘பிரும்மாண்டமாய்’ மாறிய பிறகுதான் நடிக, நடிகையர்களை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டன.
விஜிபியில் இருந்து பிரிந்து தனிக்கடை போட்ட வசந்த் & கோ, வசந்த் அண்ணாச்சியும் கூட டிவி விளம்பரங்களில் அவரேதான் நடித்தார். தொண்ணூறுகளில் டிவி பார்த்தவர்கள், இன்னமும் அந்த அதிர்ச்சியில் இன்று மீண்டிருக்க மாட்டார்கள். அண்ணாச்சி வசந்த், நீட்டான கோட் & சூட்டில் ஒரு பெரிய காரில் இருந்து இறங்குவார். கல்லூரி இளம்பெண்கள் சூழ்ந்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்பது மாதிரி கிரியேட்டிவ்வான விளம்பரம் அது. முரண் என்னவென்றால் வசந்த் அண்ணாச்சியின் சொந்த அண்ணாச்சியான குமரி ஆனந்தன் தீவிர காந்தியவாதி. கதர் தவிர வேறெதையும் அணிய மாட்டார்.
இந்த முதலாளிகளின் சுயவிளம்பரப் பெருமையாக மட்டும் இதை பார்க்காமல், சமூக உளவியல் காரணிகளோடு இந்தப் போக்கை பொருத்திப் பார்க்க வேண்டும். நாடார் சமூகத்தினர், நல்ல உடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடுப்புக்கு மேலே ஆடை என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு கனவாக இருந்திருக்கிறது. அவர்கள் சமூகப் பெண்களே மார்பை மறைக்க வேண்டுமானால், அதற்கு தனி வரி செலுத்த வேண்டும் என்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டார்கள் என்று வரலாற்றிலேயே ஆதாரப்பூர்வமாக பதிவாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக