எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற 61 எம்எல்ஏக்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறப்படுவதால், ஹரீஷ் ராவத் வெற்றி பெறக் கூடும் என உறுதியாக நம்பப்படுகிறது.
உத்தரகண்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் அவர்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தார்.
இதற்கிடையே, ஹரீஷ் ராவத் அரசைக் கலைத்துவிட்டு உத்தரகண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால், இதனை ரத்து செய்து உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால் உத்தரகண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி தொடர்ந்தது.
இதனிடையே, ஹரீஷ் ராவத்தின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் மே 10-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்யவும், அவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க அனுமதிக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
இந்நிலையில், உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏதுவாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் இரண்டரை மணி நேரத்துக்கு குடியரசுத்தலைவர் ஆட்சி நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, அவைக்காவலர்களின் பலத்த பாதுகாப்புக்கு இடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
யாருக்குச் சாதகம்?: மொத்தம் 71 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப்பேரவையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவர் ஆகியோரைத் தவிர்த்து 61 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
இதில் பீம்லால் ஆர்யா என்ற பாஜக எம்எல்ஏ காங்கிரஸுக்கு ஆதரவாகவும், ரேகா ஆர்யா என்ற காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.
"பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இருவர், சுயேச்சைகள் மூவர், உத்தரகண்ட் கிராந்தி தளம் (பி) கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தோம்' என்று சுயேச்சை எம்எல்ஏ ஹரீஷ் சந்திர துர்காபால் தெரிவித்தார்.
இந்த 6 பேரையும் சேர்த்து காங்கிரஸுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளதாகவும், எனவே, தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ரீட்டா ஆர்யா கூறினார்.
இதனிடையே, தங்கள் தரப்புக்கு ஆதரவாக 28 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
"அரசியல் மோதல் போக்கை கைவிடுங்கள்'
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுவிட்டதாக உறுதியாக நம்பப்படும் நிலையில், அரசியல் மோதல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ஹரீஷ் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு உடனடியாக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அவர் வெற்றியுரை ஆற்றினார்.
அப்போது, தமக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஹரீஷ் ராவத் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நான் ஒரு சிறிய மாநிலத்தின் முதல்வர் என்பதை எப்போதும் கூறி வந்துள்ளேன். வறுமைக்கு எதிராகவும், மக்களின் பின்தங்கிய நிலைக்கு எதிராகவும் போராடுவதே எனது பணி.
இந்தச் சூழலில், அரசியல் மோதல் போக்கை கைவிட மத்திய அரசு முன்வர வேண்டும். வளர்ச்சியை நோக்கி உத்தரகண்ட் மாநிலத்தைக் கட்டமைப்பதில் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றார் அவர் தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக