வெள்ளி, 13 மே, 2016

பொதுச்சொத்துக்கள் விற்பனைக்கு : Airports,Roads,Habors,நிலங்கள், உருக்கு - சிமென்ட் ஆலைகள், எரிஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்…

இந்திய முதலாளிகள் இரண்டு பத்தாண்டுகளாக ஆட்டையைப் போட்ட பொதுச்சொத்துக்களை எல்லாம் விற்று காசாக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார்கள், இப்போது. “பொதுத்துறையில் நிர்வாகம் சரியில்லை, நஷ்டம் அதிகம், தனியார் துறையில்தான் திறமை” என்று உதார் விட்டு பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச்சொத்துக்களையும், இயற்கை வளங்களையும் கைப்பற்றிய இந்தத் தரகர்களில் பலர் இன்று மஞ்சள் கடிதாசி கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். லண்டனுக்கு ஓடிப் போன விஜய் மல்லையாவும், திஹார் சிறையில் வசிக்கும் சஹாரா சுப்ரதா ராயும் இந்த மோசடி பேர்வழிகளில் சிக்கிக் கொண்ட இரண்டு பேர் மட்டுமே. “ஓ, விஜய் மல்லையாதானே” என்று நினைக்காதீர்கள்?
லண்டனுக்கு ஓடிப் போன விஜய் மல்லையாவும், திஹார் சிறையில் வசிக்கும் சஹாரா சுப்ரதா ராயும் இந்த மோசடி பேர்வழிகளில் சிக்கிக் கொண்ட இரண்டு பேர் மட்டுமே. 5 லட்சம் கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தில் மஞ்சள் குளித்து இன்று வரை சட்டத்துக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கும் முதலாளிகளின் பட்டியலில் சின்ன அம்பானி அனில் முதல் நேர்மை திலகம் டாடா வரை உண்டு.

மல்லையா, சுப்ரதா ராய்20 ஆண்டுகளாக நமது பணத்தை வைத்து இவர்கள் சூதாடினார்கள். “சாலைபோடுகிறோம், துறைமுகம் கட்டுகிறோம், வெளிநாட்டில் சுரங்கம் வாங்குகிறோம்,வெளிநாட்டு கம்பெனியை வாங்கி கொடி நாட்டுகிறோம்” என்று மினுக்கித் திரிந்தார்கள். லட்சக்கணக்கான விவசாயிகளின் உயிரை பலிவாங்கும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கை இவர்களது இலாப வெறிக்கு, வறட்டு கவுரவத்துக்கு இரை போட்டுக் கொண்டிருந்தது. நம் விவசாயிகளுக்கு மறுக்கப்பட்ட பாசன வசதிகளுக்கான தொகையும், விளைபொருட்களுக்கான நியாயமான விலையும் இந்த முதலாளிகளின் உலகமய கனவுகளுக்கு எரிபொருளாக பயன்பட்டன.
ஆனால், சூதாடிகளின் கணக்கு தீர்க்கப்பட வேண்டிய கட்டம் வந்திருக்கிறது. இதற்கு மேலும் வெட்டுவதற்கு ஏதுமில்லை, இதற்கு மேலும் கொள்ளை அடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர் இந்தத் தரகர்கள். மேலும் மேலும் வெறியோடு “தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்து”, “நிலக் கைப்பற்றல் சட்டத்தை மாற்று”, “மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்க ஜி.எஸ்.டி-யை கொண்டு வா” என்று மோடி அரசுக்கு இந்த தரகர்கள் உத்தரவு
போட்டாலும், மோடி அவற்றை சிரமேற்கொண்டு நிறைவேற்ற முயற்சி செய்து வந்தாலும், பலவற்றை அவசர அவசரமாக நிறைவேற்றி விட்டாலும் முதலாளிகளின் மலச்சிக்கல் தீர்ந்த பாடில்லை.
குறிப்பாக, முதலாளிகளின் பேராசைக்கும் சூதாட்டத்துக்கும் இரையாக இயற்கை வளங்களை பறி கொடுப்பதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், தொழிலாளர் சேமிப்பை கைப்பற்றும் முயற்சிக்கு தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எதிர்ப்பு என கொள்ளைக்கு எதிரான போராட்டங்களும் அதிகரிக்கின்றன.
ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜனை பொறுத்தவரை இந்தியப் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு ஏற்ப செயல்படும் வகையில் பராமரிக்க வேண்டும்
இந்தச் சூழ்நிலையில் சூதாடிகளின் சட்டையைப் பிடித்து பணத்தை வசூலிக்கா விட்டால் உள்ள முதலுக்கே மோசம் என்று உணர்ந்த ரிசர்வ் வங்கி கவர்னர ரகுராம் ராஜன் “5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை தீர்க்கும் வழியை பாருங்கள்” என்று பொதுத்துறை வங்கிகள் மீது சவுக்கைச் சுழற்ற இந்த சூதாடிகளின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறியுள்ளன. ரகுராம் ராஜனை
பொறுத்தவரை இந்தியப் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு ஏற்ப செயல்படும் வகையில் பராமரிக்க வேண்டும். இப்போது இந்திய தரகு முதலாளிகள் மீதான இந்த நடவடிக்கைகள் மூலம் பெரும் அளவில் அவர்கள் வசம் இருக்கும் நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களால் கைப்பற்றப்படுவது நடக்கப் போகிறது. அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டு சொத்துக்களை வாங்குவதற்கு அனுமதிக்கும் திருத்தங்களை மோடி அரசு ஏற்கனவே செய்து முடித்திருக்கிறது.
மேலும், கடன்காரர்களாக, பொதுச்சொத்துக்களை பொறுப்பாக நிர்வகிக்க முடியாதவர்களாக, நஷ்டத்தில் மூழ்கி கோவணத்தோடு நிற்கும் இந்த ஊதாரிகளின் நிலைமை இப்படி இருக்கையில்தான் மோடி அரசு, “இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது” என்று மோசடி செய்து கொண்டிருக்கிறது.
அப்படி என்ன நெருக்கடி? 09-05-2016 திங்கள் கிழமை தி ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில தகவல்களை பார்க்கலாம்.
அனில் அம்பானி
மோசடிகளின் திலகம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மொபைல் சேவை நிறுவம் RCOM திவால் நிலையில்
1.    அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 1.21 லட்சம் கோடி. ஆண்டு தோறும் கட்ட வேண்டிய வட்டி ரூ 8,299 கோடி. (கணக்கு போட்டு பாருங்கள். அனில் அம்பானி கட்டும் வட்டி வீதம் சுமார் 6.85%தான், உங்கள் வீட்டுக் கடனுக்கு வட்டி வீதம் என்ன?)
i.  கடனை கட்ட அம்பானி விற்கவிருக்கும் சொத்துக்கள் – (Rcom) ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் தகவல் தொடர்பு கோபுரங்கள் (ரூ 22,000 கோடி மதிப்பு), ஆப்டிக் இழை கட்டுமானங்கள் (ரூ 8,000 கோடி மதிப்பு).
மேலே சொன்ன மதிப்பீடுகள் எல்லாம் வெறும் பேப்பரில் இருப்பவையே. இந்தச் சொத்துக்களை இந்த விலைக்கு வாங்குவதற்கு ஆள் கிடைத்தால்தான் கம்பெனி உயிர் பிழைக்கும்.
இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ 40,000 கோடி, ஆனால் அதன் சந்தை மதிப்பீடு வெறும் ரூ 13,440 கோடி. அதாவது கம்பெனியையே விற்றாலும் கடனை அடைக்க முடியாது.
ii.    ரிலையன்ஸ் இன்ஃப்ரா (R-Infra)-ன் மொத்தக் கடன் ரூ 25,000 கோடி.
மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தன் கைவசம் வைத்திருக்கும் மின்சார உற்பத்தி, வினியோக தொழிலில் 49 சதவீதத்தை கனடா நிறுவனத்துக்கு விற்றிருகிறார் சின்ன அம்பானி. “நான் திறமையாக மின்சாரம் உற்பத்தி செய்வேன்” என்று நமது பணத்தை நமது வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி, சொத்துக்களை கைப்பற்றி விட்டு இப்போது அதை வெளிநாட்டு கம்பெனியிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்.
இது போலவே, இந்நிறுவனத்தின் வசம் இருக்கும் சாலைகளையும் சுமார் ரூ 9,000 கோடிக்கு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்கத் தயாராகி வருகிறார் சின்ன அம்பானி.
இந்த நிறுவனம் ஆண்டு தோறும் கட்ட வேண்டிய வட்டித் தொகை ரூ 1,974 கோடி, ஆனால் விற்பனையில் மொத்த லாபம் ரூ 1,686 கோடி மட்டுமே. அதன் சந்தை மதிப்பான ரூ 14,476 கோடி அதன் மொத்தக் கடன்களை விட ரூ 10,000 கோடி குறைவு. அதாவது, கம்பெனியையே மொத்தமாக விற்றாலும் கடனை அடைக்க முடியாத நிலைமை.
iii.   ரிலையன்ஸ் கேபிடல் தனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை
ஜப்பானிய நிறுவனத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக விற்று இப்போது நிப்பன் லைஃப்
இன்சூரன்சின் கையிருப்பு 49% ஆக உயர்ந்திருக்கிறது.
இந்திய கார்ப்பரேட்டுகளின் கடன்சுமை
இந்திய கார்ப்பரேட்டுகளின் கடன்சுமையும் விற்பனை செய்யவிருக்கும் சொத்துக்களின் மதிப்பும் (படம் நன்றி thehindu.com)
iv.   இந்தியாவில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியார் மயமாக்குவதில்
தனது கையை நனைக்கலாம் என்று நாக்கைச் சப்பிக் கொண்டு அனில் அம்பானி
ஆரம்பித்த நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ 6,800 கோடி, அதன் சந்தை மதிப்போ
வெறும் ரூ 4,895 கோடி. இதன் வருமானமும் வட்டி கட்டுவதற்கு போதாத நிலையில்
உள்ளது.
2.   எஸ்ஸார் குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 1.01 லட்சம் கோடி
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் 50% பங்குகளை ரூ 25,000 கோடிக்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கின்றனர் முதலாளிகள் சசி ரூயாவும், ரவி ரூயாவும். இன்னொரு சுத்திகரிப்பு ஆலையின் 49% பங்குகளை ரூ 25,000 கோடிக்கு வாங்கவும் ஆள் தேவை. தனது துறைமுக தொழிலையும் விற்க தயாராகியிருக்கின்றனர் இந்த சகோதரர்கள்.
3.    மோடியின் புரவலர் கவுதம் அதானியின் மொத்தக் கடன் ரூ 96,031 கோடி
தான் கைப்பற்றி வைத்திருக்கும் நிலக்கரி சுரங்கங்கள், துறைமுகம், ரயில் பாதை ஆகியவற்றை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார் அதானி. சென்ற ஆண்டு இந்திய முதலாளிகளுக்கு கொடுத்த கடனை எல்லாம் திருப்பி வாங்கி விடுவது என்று முடிவு செய்த ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அதானிக்குக் கொடுத்த $250 கோடி (சுமார் ரூ 17,000 கோடி) கடனை ரத்து செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு மோடியுடன் போய் அந்த நாட்டில் சுரங்கத்தை வாங்குவதற்கு இந்திய ஸ்டேட் வங்கியிடம் $100 கோடி கடன் பெறும் ஒப்பந்தத்திலும் அங்கேயே கையெழுத்திட்டார் அதானி. இப்போது அதற்கான கடன் கொடுப்பத்தற்கு ஸ்டேட் வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் பின் வாங்கி விட்டன. அதானிக்கு உதவுவதற்கு மோடி வேறு மோசடிகளில்தான் இறங்கியாக வேண்டும்.
4.  ஜெய்பீ குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 75,000 கோடி
தன் வசமிருந்த முக்கியமான சிமென்ட் ஆலையை ரூ 15,900 கோடிக்கு விற்றிருக்கிறார் அதன் முதலாளி மனோஜ் கவுர். கைவசம் இருக்கும் இன்னொரு சிறிய சிமென்ட் ஆலை, 3 அனல் மின்நிலையங்கள், 1 நீர்மின் நிலையம், யமுனா அதிவிரைவு சாலை, மற்றும் கைப்பற்றி வைத்திருக்கும் பல்வேறு நிலங்களை நல்ல விலைக்கு விற்க தயாராக இருக்கிறார். ஆனால், வாங்குவதற்குத்தான் ஆளில்லை.
சென்ற ஆண்டு கடன் தவணை கட்டத் தவறியிருக்கிறது இந்த நிறுவனம்.
5.    ஜி.எம்.ஆர் குழுமம்
இரண்டு ஆண்டுகளில் ரூ 11,000 கோடி மதிப்பிலான சாலைகள், மின் நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்களை விற்றிருக்கிறது. அதற்குப் பிறகும் அதன் கடன் ரூ 47,738 கோடியாக உள்ளது. இது போக கைப்பற்றி வைத்திருக்கும் நிலங்களையும், விமான நிலைய பிரிவின் பங்குகளையும் விற்க திட்டமிட்டிருக்கிறது.
6.    லான்கோ குழுமம்
சென்ற ஆண்டு உடுப்பி ஆலையை ரூ 6,300 கோடிக்கு விற்றிருக்கிறது. அதன் பிறகும் கடன் 6 சதவீதம் அதிகமாகி ரூ 47,102 கோடியை தொட்டிருக்கிறது. மின்துறை சொத்துக்களையும், 2011-ல் ஆஸ்திரேலியாவில் $75 கோடி கொடுத்து வாங்கிய நிலக்கரி சுரங்கத்தில் மூன்றில் ஒரு பங்குகளையும் விற்க முயற்சித்து வருகிறது.
7.   வீடியோகான் குழுமம்
மொசாம்பிக்கில் வாங்கிப் போட்ட எரிவாயு வயல்களை ரூ 15,000 கோடிக்கு விற்ற பிறகும் கடன் தொடர்ந்து அதிகரித்து ரூ 45,405 கோடியை தொட்டிருக்கிறது. தான் பிடித்து வைத்திருந்த அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல்லுக்கு ரூ 4,600 கோடிக்கு விற்றிருக்கிறார் முதலாளி வேணுகோபால் தூத். நிறுவனத்தின் கடனில் சுமார் ரூ 21,000 கோடி பிரேசில், இந்தோனேசியா, மற்றும் உலகின் பிற பகுதிகளில் எண்ணெய் எரிவாயு கண்டுபிடிப்பதற்கான பணிகளில் முதலீடு
செய்யப்பட்டது.
மோடி
ஏகாதிபத்தியங்களின் கையில் மெழுகு பொம்மைகளாக இந்திய பிரதமர்கள் (மோடி)
8.   ஜி.வி.கே குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 34,000 கோடி. அதன் விமான நிலைய கிளை நிறுவனத்தை விற்க முயற்சித்து வருகிறது. பெங்களூரு விமான நிலையத்தில் அதன் 33 சதவீதம் பங்கை Fairfax India Holdings Corp என்ற கனடாவின் நிதி முதலீட்டு நிறுவனத்துக்கு ரூ 2,149 கோடிக்கு
விற்றிருக்கிறது.
அன்னிய நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மோடி திறந்து விட்ட கதவின் வழியாக “கைப்புள்ள” இந்திய முதலாளிகளின் சொத்துக்களை மலிவு
விலையில் வாங்கி போடுகின்றன உலக நிதி மூலதன நிறுவனங்கள்.
ஆஸ்திரேலியாவில் அதன் ரயில் மற்றும் துறைமுக நிறுவனத்திலும் பங்குகளை விற்க முயற்சித்து வருகிறது.
டாடா கோரஸ்
நமது பணத்தில் இங்கிலாந்தில் திறமை காட்டி இப்போது தோற்றுத் திரும்பியிருக்கும் டாடா
9.  டாடா ஸ்டீல்
மொத்தக் கடன் $1007 கோடி (சுமார் ரூ 65,000 கோடி). கடன்களை சமாளிக்க இங்கிலாந்தில் வாங்கிய கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை விற்க முயற்சித்து வருகிறது.
தனது தனியார் திறமையைக் காட்ட இங்கிலாந்து போன டாடா, “இங்கிலாந்து அரசு மானியம் கொடுக்கவில்லை”, “தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கிறது”, “சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு செலவிட வேண்டியிருக்கிறது”, “அதனால் நஷ்டம் ஏற்பட்டு விட்டது” என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிறது. இங்கிலாந்தில் நிறுவனத்தை விற்றாலும்,  மக்கள்
வரிப்பணத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு, தொழிலாளர்களுக்கு குறைந்து கொண்டே
போகும் ஊதியம், சுற்றுச் சூழல் பற்றி கவலைப்படாத ஊழல் நிர்வாகம் என்று அதற்கு சாதகமான இந்தியாவில் அதன் கொள்ளை தொடரும்.
10. ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனத்தின் கடன் தொகை ரூ 46,000 கோடி.
11. டி.எல்.எஃப் – சுமார் 2 கோடி சதுர அடி அலுவலக தளத்தை சொந்தமாக வைத்துள்ள தனது நிறுவனத்தில் 40% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்க முயற்சித்து வருகிறது.
 முகேஷ் அம்பானி
பொதுப்பணத்தை கடனாக எடுத்துதான் அம்பானி தனியார் “திறமை” காட்காட்டி வரும் பெரு முதலை முகேஷ் அம்பானி
இவை போக சஹாரா குழுமத்தின் 86 ரியல் எஸ்டேட் திட்டங்கள், ஃபார்மூலா ஒன் பந்தய அணியில் 42% பங்குகள், 4 விமானங்கள், மும்பை சஹாரா ஹோட்டல், லண்டன் க்ரோஸ்வேனர் ஹவுஸ், நியூயார்க் பிளாசா ஹோட்டல், நியூயார்க் தி டிரீம் ஹோட்டல் ஆகியவை சந்தைக்கு வாங்குவோர் தேடி வந்திருக்கின்றன.
விஜய் மல்லையாவின் அனைத்து சொத்துக்களும் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், அவர் விட்டுச் சென்ற அழுக்கு உள்ளாடைகள் வரை விற்றாலும் வங்கிகளால் தாம் கொடுத்த கடனை வசூலிக்க முடியாது என்பதுதான் நமது பரிதாப நிலைமை.
முதலீட்டு ஆலோசகர் எஸ்.பி துல்சியான் இந்தக் கடன்களையும் சொத்துக்களையும்
உடலின் அழுகிப் போன உறுப்புகள்” என்கிறார். அதாவது, வங்கிக் கடனை வாங்கி, பொதுச்சொத்துக்களை கைப்பற்றி பொறுப்பில்லாமல் நாசமாக்கி விட்ட இந்த பொறுப்பற்ற, உதவாக்கரை, ஊதாரி தரகு முதலாளிகள் கிடைத்த விலைக்கு பண மூட்டையோடு வரும் யாருக்கும் விற்கத் தயாராகி உள்ளனர். அதற்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் கொள்கைகளை மாற்றி, சட்டங்களை திருத்தி வைத்திருக்கின்றன முந்தைய மன்மோகன் அரசும், இப்போதைய மோடி அரசும்.
இந்த யுத்த பூமியில் சொத்துக்களை வாங்கி போடும் முதலாளிகளும் இருக்கின்றனர். குமார மங்கலம் பிர்லாவின் யூனிடெக் – ஜெய்பீ குழுமத்தின் சிமென்ட் ஆலையை ரூ 15,900 கோடிக்கும், ரூ 4,800 கோடிக்கு அனில் அம்பானியின் சிமென்ட் ஆலையையும் வாங்கியிருக்கிறது. ஏர்டெல் வீடியோகான் வசம் இருந்த அலைக்கற்றையை வாங்கி போட்டிருக்கிறது.
இந்தக் கடன்கார முதலைகளில் பெரிய முதலை பெரிய அம்பானி முகேஷ். அவரது ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 1.87 லட்சம் கோடி. இதில் ரூ 1.5  லட்சம் கோடி ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசி சேவையை ஆரம்பிப்பதற்கான கடன். இப்படி பொதுப்பணத்தை கடனாக எடுத்துதான் அம்பானி தனியார் “திறமை” காட்டி வருகிறார்.
இவ்வாறாக, ஏகாதிபத்திய நிதிச் சூதாட்டத்தில் தவிர்க்க இயலாமல் வெடிக்கும் நெருக்கடிகள் உழைக்கும் மக்கள் மீது சுமைகளை ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் பல முதலாளிகளை திவாலாக்கி, ஒரு சில முதலாளிகளிடம் சொத்துக்களை குவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிக் கடன்களையும், அரசு எந்திரத்தையும் “கையாள்வதில்” தொடர்ந்து “திறமை”யாக செயல்படும் முதலாளிகள் ஏகபோக ஆதிக்கத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் நிதிச் சூதாடிகளின் களமாக, மக்களின் உழைப்பை வீணடிக்கும் ஊதாரியாக, அனைவருக்கும் வேலை, கல்வி, மருத்துவம், சுகாதாராத்தை உத்தரவாதம் செய்ய முடியாத கையாலாகாத ஒன்றாக திவாலாகி, நெருக்கடியில் சிக்கி நிற்கிறது முதலாளித்துவம். தாம் உருவாக்கிய இந்தநெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கு உழைக்கும் மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்ற முயற்சித்து வருகின்றனர் முதலாளிகள்.
இதை எதிர்த்து விடாப்பிடியாக போராடுவதும், 1% ஆளும் வர்க்கத்துக்கு மட்டும் சேவை செய்யும் 99% மக்களை கொடூரமாக சுரண்டும் இந்த சமூக அமைப்பையே தூக்கி எறிந்து மக்களுக்கு சேவை செய்யும் சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான பணியில் ஈடுபடுவதும்தான் தொழிலாளி வர்க்கத்தின், படித்தவர்களின் இப்போதைய கடமை.
– அப்துல் வினவு.com

கருத்துகள் இல்லை: