வியாழன், 10 மே, 2012

EMAILலில் ஜெயலலிதா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

 Bomb Threat Meenakshi Amman Andal Temples
 
மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் மிரட்டல் வந்துள்ளது.
நேற்று இரவு 10 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்தது. அதில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், போயஸ் கார்டன் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர்களுடன் சென்று கோவிலில் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பதை உணர்ந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலும் நேற்று இரவு 11 மணிக்கு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கோவில் மூலஸ்தானத்தை மட்டும் திறக்காமல் மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இது யாரோ பொய்யாக விடுத்த மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
  Read:  In English 
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் பாஜக மாநில மாநாடு நடக்கும் நேரத்தில் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1ம் தேதி மதுரை அண்ணா நகர் ராமர் கோவில் அருகே சைக்கிள் வெடிகுண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: