புதன், 9 மே, 2012

ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து! பாகம் – 2

அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமைசமச்சீர் கல்வி வழக்கில் தமிழக (ஜெயா) அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், “தமிழக அரசைச் சட்டரீதியாகச் சரியாக வழிநடத்தும் ஆளில்லை” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அந்த வழக்கில் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, தோற்றுப்போன பிறகாவது பார்ப்பன பாசிச ஜெயாவுக்குப் புத்தி வந்திருக்க வேண்டாமா? அடாவடியான பல முடிவுகள் எடுத்து, பல வழக்குகளில் மூக்கறுபட்டும் ஜெ திருந்துவதாக இல்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இழுத்தடித்து, ஜெயாசசி கும்பலைக் காப்பாற்றி வந்த வழக்கறிஞர் ஜோதிக்குத் தக்க பரிசு (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி) தரமறுத்து, நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டனர். இதன் விளைவாக அவர் தி.மு.க.வுக்கு ஓடிப் போனார். பிறகு அந்த வழக்கை ஒரு ஐந்தாண்டு காலம் இழுத்தடித்த “பட்டை போடும்” நவநீதகிருஷ்ணனுக்கு நன்றிக் கடனாக தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பதவியை வழங்கியது ஜெயா அரசு.
ஜெயலலிதா-ஆட்சிஜோதிக்குப் பிறகு, “வாய்தா ராணி” பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஜெயாவுக்கு விசுவாசமாக உழைத்த நவநீத கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளிலும் தண்டனிட்டு, கூனிக் குறுகி நிற்கிறார்.
அரசை நடத்துவதற்கு அரசு நிர்வாகத் திறமை, தகுதி தேவையில்லை;  மக்களை ஒடுக்கி ஒட்டச் சுரண்டுவதோடு, போலீசு அதிகாரிகளும், அரசு உயர் அதிகாரிகளும் செய்வதற்கு எல்லாம் தலையாட்டினால் போதும், அதைவிட முக்கியமாக அரசியல் பழிவாங்குதலில் அவர்களை ஏவிவிட்டால் போதும் என்று கருதி செயல்படுகிறது, ஜெயா அரசு.
“எது குறித்தும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கும் ஜெயலலிதா அரசு, கடந்த பல ஆண்டுகளில் வேறெந்த அரசும் காணாத அளவு நீதிமன்றங்களின் தொடர்ச்சியான நிராகரிப்புகளினால் முகத்தில் கரிபூசிக் கொண்டு நிற்கிறது. “தமிழ்நாட்டில் இன்று தறிகெட்டு மூக்கணாங்கயிறு இல்லாத மாடாக ஓடிக் கொண்டிருக்கும் மாநில நிர்வாகத்தை அவ்வப்போது நீதித்துறைதான் சாட்டையைச் சுழற்றி வழிக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது” என்று சில ஏடுகள் எழுதுகின்றன.
ஆனால், அரசுக்கு எதிரான, உறுதியான நிலைப்பாடு எடுத்து முற்றிலும் நியாயமான தீர்ப்புகளை நீதித்துறை வழங்கி விடுகிறது என்று சொல்லிவிட முடியாது. சில வழக்குகளில் பொதுநிர்பந்தத்தைக் கணக்கில் கொண்டு அரசின் முடிவுகளை மாற்றும் வகையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், பெரும்பாலானவற்றில் வழக்குகளை இழுத்தடித்து, எச்சரிக்கை விடுப்பதைப் போல ஒருபுறம் நடித்துக் கொண்டே, மறுபுறம் அரசுக்குச் சாதகமாக மழுப்புகிறது.
ஜெயலலிதா-ஆட்சி
எடுத்துக்காட்டாக, வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ் கொலை வழக்கில், சி.பி.ஐ. விசாரணைக்கு விட்டும் கூட கொலையாளிகளான போலீசு அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. கோவை வழக்குரைஞர் அனந்தீஸ்வரன் தாக்கப்பட்ட வழக்கில் இதேபோல குற்றவாளிகளான போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருக்கோவிலூர் அருகே 4 இருளர் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவிய  போலீசுக்காரர்கள் கைது செய்யப்படவில்லை. இப்படிப் பல வழக்குகள் மீது உயர் நீதிமன்றம் அரசு வழக்குரைஞரிடம் எச்சரிக்கை, கண்டனம், வெறும் உருட்டல் மிரட்டலுக்கு மேலே போக மறுக்கிறது.
அதேசமயம், ஜெயலலிதா அரசு சாதாரண சட்ட அறிவு கூட இல்லாமல் பல வழக்குகளிலும், குறிப்பாக அரசியல் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் படுதோல்விகளைக் கண்டுள்ளது. சமச்சீர் கல்வியை ரத்து செய்தது, புதிய தலைமைச் செயலகத்தை அதிநவீன மருத்துவமனையாக மாற்றும் செய்கை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவு; ஆளுங்கட்சிக்காரன் வசமுள்ள தோட்டக்கலை சங்கத்திற்கு அரசு நில ஒதுக்கீடு செய்தது; தி.மு.க.வின் ஸ்டாலின், டி.ஆர். பாலு அலுவலகங்களைப் பறிக்க முயன்றது; தி.மு.க. பிரமுகர்கள் மீது ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் போட்டுச் சிறையிலடைத்தது, அந்த வழக்குகள் நிற்காத போது பலரைக் குண்டர்கள் சட்டத்தில் சிறையிலடைத்தது; பின்னர் எல்லா வழக்குகளிலிருந்தும் அவர்கள் விடுதலை பெற்றது; 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும் வேலை நீக்கம் செய்தது; தமிழ்நாடு அரசுப் பணி நியமன ஆணைய உறுப்பினர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள மூன்று பேரின் கருணை மனுக்கள் விவகாரத்தில் மாறி மாறிப் ‘பல்டி’ என்று சட்டநீதித்துறை அறிவின்றி முட்டாள்தனமாக ஜெயா அரசு சிக்கிக் கொண்ட பட்டியல் நீளமானது.
நில அபகரிப்பு என்பது 1991இல் ஜெயா-சசி துவக்கி வைத்த மிகப் பெரும் அளவிலான கிரிமினல் குற்றம். சிறுதாவூர், கொடநாடு தொடங்கி தென் தமிழகத்தில் நெல்லைச் சீமை வரை நகர்ப்புற, கிராமப்புற நிலங்களை ஏராளமாகக் குவித்தது அக்கும்பல்; அதற்கு எதிரான மக்கள் ஆத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. பிறகு, ராமதாசு, திருமாவளவன் கட்சிகள் வரை ஓட்டுக்கட்சிகள் என்றாலே நில அபகரிப்பு மோசடி வாடிக்கையாகி விட்டது. ஆனால், ஜெயா அரசோ, எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கவும், அரசியல் பிரச்சாரத்துக்காகவும் நில அபகரிப்பு மோசடி வழக்குகளை அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்துவதற்கென்றே தனிப் போலீசு பிரிவை உருவாக்கி ஏவிவிட்டது.
எதிர்க்கட்சிப் பிரமுகர்களைக் கைது செய்து நாளேடுகளில் “விளம்பரம்” செய்வது என்ற நோக்கத்திற்குமேல் இந்த வழக்குகள் நகராதபோது, குண்டர்கள் சட்டத்தை ஏவியது, ஜெயா அரசு. ஆனால், மு.க. அழகிரியின் அல்லக்கைகளான பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி, அட்டாக் பாண்டி, மின்னல் கொடி, ஒச்சு பாலு, வி.கே. குருசாமி மற்றும் பூண்டி கலைவாணன், குடமுருட்டி சேகர், சென்னை ப.ரங்கநாதன் என்று குண்டர் சட்டம் பாய்ந்த அனைவரும் அநேகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஜெயலலிதா அரசும் போலீசும் சட்டப்படி செயல்படவில்லை; அரசியல் உள்நோக்கப்படிதான் செயல்படுகின்றனர் என்று மீண்டும் மீண்டும் தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொண்டனர்.
ஜெயலலிதா-ஆட்சி
தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான சந்தேகப் பிராணிகள், எம்.ஜி.ஆரும், அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவும்தான். இவர்கள் முண்டு தமது  இடுப்பில் இருப்பதைக்கூட நம்பாத பேர்வழிகள் என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரம் போலீசு உளவுத்துறையை, மற்றெவற்றை விடவும் தம் அமைச்சரவை மற்றும் கட்சிப் பிரமுகர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்துவதைக் கூறலாம். அதனாலேயே அமைச்சர்களும் அதிகாரிகளும் பந்தாடப்படுகின்றனர். குறிப்பாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதாசசி சொத்துக் குவிப்பு வழக்குக் குற்றவாளிகள் நேரடி வாக்குமூலம் அளிக்கும் நிலையை எட்டியுள்ளதால், ஜெயலலிதா தனக்குச் சாதகமாக, தனது பங்காளிகள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்பதற்காக போலீசையும் உளவுத்துறையையும் பயன்படுத்திக் கொள்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா தனது கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சசிகலாவையும் அவரது நெருங்கிய 13 உறவினர்களையும் திடீரென கட்சியில் இருந்து நீக்கம் செய்தார். இந்நடவடிக்கைக்குக் காரணம், அவர்களின் கட்சி விரோதச் செயல்கள் என்ற ஒருவரிச் செய்திக்கு மேல் எதுவும் கூறவில்லை; சில வாரங்களுக்குப் பின் நடந்த கட்சிப் பொதுக்குழுவில், தனக்குத் துரோகமிழைப்பவர்களுக்கு இதுதான் கதி; அவர்கள் மன்னிக்கப்படவே மாட்டார்கள் என்று எச்சரித்தார். ஜெயலலிதாவின் பாதந்தாங்கிகளான பார்ப்பனச் செய்தி ஊடகங்கள் இது பற்றி பலவாறான கிசுகிசு, வதந்திகளைப் பரப்பின. சசி கும்பல் அளவுக்கு மீறி, ஜெயலலிதாவுக்குத் தெரியாமல், ஜெயாவுக்கு எதிராகவே அரசியல் தலையீடுகளிலும் துரோகங்களிலும், நஞ்சு வைத்து ஜெயாவைக் கொல்லவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பல சதிவேலைகளில் ஈடுபட்டதாக கிசுகிசுக்களைப் பரப்பின.
ஜெயா ஆட்சியில் நடக்கும் எல்லா இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகளுக்கும் சசி கும்பல்தான் காரணம் என்றும், முப்பதாண்டு கால நட்பையும், பாசத்தையும் துணிந்து தியாகம் செய்து அவர்களை வெளியேற்றி விட்டதாகவும், இனி தூய்மையான, திறமையான நிர்வாகம் நடக்கும் என்றும் பார்ப்பன மற்றும் ஜெயாவின் எடுபிடி ஊடகங்களும் புளுகித் தள்ளின. இதை மூன்று மாதங்கள், பொதுமக்களை ஏய்க்க ஒரு பொதுப் பிரச்சாரம் மூலம் அறுவடை செய்து கொண்டபிறகு, ஜெயாசசி கும்பல் நாடகத்தை முடித்துக் கொண்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தவறிக்கூட ஜெயலலிதாவுக்குப் பாதகமாக சசிகலா வாக்குமூலம் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அவரது நெருங்கிய உறவினர்கள் மீது வழக்குகள், கைது, சிறை என்ற உருட்டல் மிரட்டல் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் ஜெயாவின் அரசியல் வசனகர்த்தாக்கள் எழுதிக் கொடுத்த சசியின் தன்னிலை விளக்கத்தை ஏற்று, ஊடல் காட்சிகள் முடித்துக் கொள்ளப்பட்டு, இணைபிரியா தோழிகள் மீண்டும் ஐக்கியமாயினர்.
ஜெயாசசியின் ஊடல்-கூடல் நாடகங்கள் முழுக்கவும் போலீசுஉளவுத்துறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சசிகலா உறவினர்கள் மீதான நடவடிக்கைகளில் போலீசும், சொத்துக் குவிப்பு வழக்குக்காக சசிகலாவின் தயாரிப்பு, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, நட்சத்திர விடுதி வசதிகள், ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க உளவு அறிக்கைகள் முதலியவற்றுக்கு உளவுத்துறையும் ஈடுபடுத்தப்பட்டன. அதேசமயம், சசிகலாவின் உறவினர்களிடமிருந்து இலஞ்சஊழல் அதிகாரமுறைகேடுகள் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்கள், செல்வங்களைக் கைப்பற்றுவது, கட்சிக்காரர்கள் அவர்களுடன் கொண்டுள்ள இரகசிய உறவுகளைக் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவை எதுவும் நாட்டின் முதன்மையான செய்தி ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத அதேசமயம், ஜெயலலிதாவின் திறமையும், தியாகமும் போற்றப்பட்டன. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா அப்பாவி என்றும் கருணாநிதியின் அரசியல் பழிவாங்கலே காரணம் என்றும் குற்றங்களுக்கெல்லாம் தாமே பொறுப்பு என்றும் சசிகலா கொடுத்த வாக்குமூலம் சட்டப்படி மதிப்பில்லாதது என்றாலும், ஆளுங்கும்பலின் அரசியல் பிரச்சாரத்துக்கு நன்றாகவே பயன்படுத்தப்பட்டது.
“தி.மு.க.காரர்களின் இயலாமை, திறமையின்மை, அக்கறையின்மை, லட்சியமின்மை இவையெல்லாம் சேர்ந்து தமிழகத்தைக் குட்டிச் சுவராக்கி இருக்கிறது. இதன் விளைவுதான் கடுமையான மின்வெட்டு. இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றலும் தகுதியும் முதல்வருக்கு உண்டு. எனவே, ஒரு நல்ல நிலையைத் தமிழகம் விரைவில் அடையும்” என்று ஜெயாவின் அரசியல் சகுனி “சோ” புளுகித் தள்ளுகிறார்.
ஜெயலலிதா-ஆட்சிகருணாநிதி ஆட்சியிலும் அதன்பிறகு எட்டு மாதங்களாகவும் நீடித்திருந்த மின் உற்பத்தி அளவைப் பராமரிக்கத் தவறி, மின்வெட்டு 2,3 மடங்கு அதிகரிக்குமளவு சீர்கேடடையச் செய்தது, ஜெயாவின் நிர்வாகமே.  201112ஆம் ஆண்டுகளில் 3000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தியைத் தரும் அளவிலான மின் திட்டங்களை முந்தைய ஆட்சியில் வகுத்து செயல்பட வைத்தும் அவற்றையும் நிறைவு செய்யத் தவறியதும் தேவையான நிதி திரட்டி மத்திய, தனியார்துறையிடமிருந்து மின் வழங்கலைப் பெறத் தவறியதும் ஜெயாவின் நிர்வாகமே. கடும் மின்கட்டண உயர்வைத் திணிக்கவும், கூடங்குளம் அணுஉலையைத் திறக்கச் சாதகமான சூழலை உருவாக்கவும் இவ்வாறு மின்உற்பத்தி சீரழிவதற்கு வேண்டுமென்றே விடப்பட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய மின் பற்றாக்குறை 3000 மெகாவாட்; ஆனால், 500 மெகாவாட் கூட உற்பத்தி செய்யாது, அதிலும் மொத்த உற்பத்தியில் கால் பங்கு கூட தமிழகத்திற்கு வழங்கப்படமாட்டாது என்றாலும் கூடங்குளம் அணுஉலை திறப்பால் தமிழக மின்வெட்டு  பற்றாக்குறை பிரச்சினை தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் அனைத்துக் கட்சி, அனைத்து ஊடகத் துணையுடன் நடத்தப்பட்டது.
ஜெயலலிதா-ஆட்சிநாலாந்தர நடிகைக்குரிய தகுதி கூட இல்லாத ஜெய லலிதா, எம்.ஜி.ஆரின் தயவால் முன்னணி நாயகியாகி விட்டதைப் போலவே, அரசியலிலும் அதிகார வர்க்கத்தினர், வல்லுநர்கள், நிபுணர்கள் தயாரித்துக் கொடுக்கும் உரைகள், அறிக்கைகள், திட்டங்களை வாசித்தே “புரட்சித் தலைவி’’யாகவும் திகழ்கிறார். அந்தவகையில் இந்த ஆண்டு சட்டப்பேரவையின் வரவுசெலவுக் கூட்டத்தொடருக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக 2023 ஆண்டுக்கான “தொலைநோக்குத் திட்டம்” என்ற உலக வங்கி அதிகாரிகளின் தயாரிப்பு ஒன்றை வழக்கமான “ஜெயா புகழ்பாடி பூங்கொத்து வழங்கும்” விழாவில் வெளியிட்டார். அடுத்தநாளே, போலீசுக்கு பல நவீனமய, நலத்திட்ட நிதி ஒதுக்கீடுகள், பதவிகள் அறிவித்தார். கூடவே, கல்வியில் கணினிமயமாக்கம், புதிய பேருந்துகள் வருமென அறிவித்தார். வரவுசெலவுத் திட்ட சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு வெளியே திட்ட அறிவிப்புகள் செய்வதை, கருணாநிதியும், ஸ்டாலினும் கண்டித்த மறுநாளே வழக்கம்போலத் திடீர் பல்டி அடித்தார்; இந்த அறிவிப்புகள் எதுவும் புதிதில்லை; செய்தி ஏடுகள் தவறாக எழுதிவிட்டன என்று குப்புறவிழுந்து தனது அரசியல் “திறமை’’யை வெளிப்படுத்தினார். ஆனால், ஜெயாவின் துதிபாடிகளான இந்து, தினமணி, தினமலர் ஆகிய பார்ப்பன ஏடுகளோ, ஜெயாவின் “திட்ட அறிவிப்புகள்” என்ற சாதனையாகத்தான் செய்தி வெளியிட்டிருந்தன. மு.க. குடும்பத்தின் அற்பமானதொரு அரட்டலுக்கே மிரண்டுபோய் விட்ட ஜெயாவின் ‘துணிச்சலை’ என்ன சொல்ல!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பை விட 20 சதவீதம் கூடுதலாக, அதாவது அடுத்த 11 ஆண்டுகளில் 11 சதவீதம் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பு இருக்கும் என்று ஜெயலலிதாவின் 2023ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்; குடிசைப் பகுதிகளும் ஓலைக் குடிசைகளும் இருக்காது என்று நம்பச் சொல்கிறது.
ஆனால், இந்தத் தொலைநோக்குத் திட்டம் என்பது, உள்நாட்டு, வெளிநாட்டு தரகு கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் நலன்களுக்காக, பல இலட்சம் கோடி ரூபாய் அரசுப் பணத்தை வாரி இறைப்பதுதான். அவற்றின் தொழில் முதலீடு மற்றும் முன்னேற்றத்துக்கான அடிப்படைக் கட்டுமானங்களை அமைத்துக் கொடுப்பது, கூட்டு விவசாயம், ஒப்பந்த விவசாயம் என்று விவசாயத்தை முழுவதும் கார்ப்பரேட் நிறுவனச் சேவைக்கானதாக மாற்றுவதுதான் இந்தத் “தொலைநோக்குத் திட்டம்’’. இனிவரும் காலத்தில் ஜெயலலிதா தனது புதிய “உடன்கட்டை” நரேந்திர மோடியின் அடியொற்றி நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைக்கும் பாதையில் துணிந்து நடைபோடுவார் என்பதை இந்தத் தொலைநோக்குத் திட்டம் தெட்டத் தெளிவாக்குகிறது.
(முற்றும்)

கருத்துகள் இல்லை: