வியாழன், 10 மே, 2012

ஹஜ் யாத்திரைக்கு மானியம் பெறுவது முஸ்லிம் மதத்துக்குரியது அல்ல


ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அரசு படிப்படியாகக் குறைத்து, நீக்கிவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, முஸ்லிம் அமைப்புகள் பலவும் வரவேற்றுள்ளன.  கடந்த பதின் ஆண்டுகளாகவே இந்தப் பிரச்னை பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. தங்களை இஸ்லாமிய நாடு என்று வர்ணித்துக்கொள்ளும் நாட்டில்கூட இல்லாத ஒரு புதிய மரபை வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா ஏற்படுத்தியது என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று.  இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சலுகைபோலப் பெருவாரியான இந்துக்களுக்கும் ஏன் அமர்நாத் யாத்திரை போன்ற தீர்த்தாடனங்களுக்கு மானியம் வழங்கப்படக் கூடாது என்று இந்து மத அமைப்புகள் கேட்கத் தொடங்கின. அதன் அடுத்த கட்டமாகக் கிறிஸ்தவ வாக்கு வங்கியைக் குறிவைத்து ஜெருசலேம் போக மானியம் என்பதுவரை இந்தப் பிரச்னை நீண்டுகொண்டிருக்கிறது.  ஹஜ் மானியம் ஒரு பிரச்னையாக மாறியபோதே, முஸ்லிம் மதத் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் இந்த மானியம் தேவையில்லை என்பதை அறிக்கைகள் மூலமும், பேட்டிகள் மூலமும் மற்றவர்களுக்கும் அரசுக்கும் தெரிவித்தனர். ஆனால், அரசு அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதான் உண்மை.  சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆற்காடு இளவரசர் இது தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்தில், ஒரு முஸ்லிமின் மதக் கடமையான ஹஜ் யாத்திரை, நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ள நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இஸ்லாமிய நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ""ஹஜ் மானியம் உலகின் எந்த நாட்டிலும் - முஸ்லிம் நாடுகள் உள்பட - வழங்கப்படுவதில்லை. ஓர் இந்திய அரசியல் தலைவர் என்னிடம், மானியம் வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். இது தவறா என்பதைவிட இது சரியில்லை என்றுதான் நான் சொல்வேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.  பாகிஸ்தானில், லாகூர் உயர் நீதிமன்றத்தில் 1997-இல் இதேபோன்ற வழக்கில், ஹஜ் யாத்திரைக்கு மானியம் அல்லது நிதியுதவி பெறுவது முஸ்லிம் மதத்துக்குரியது அல்ல என்று தீர்ப்பாகியுள்ளதையும் ஆற்காடு இளவரசர் சுட்டிக்காட்டியிருந்தார்.  ஹஜ் மானியம் தேவையில்லாதது என்று சொல்லும் முஸ்லிம் மதத் தலைவர்கள், இந்தப் பெருந்தொகையை சிறுபான்மையினர் நலனுக்காக, கல்விக்காகப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர். 2011-ஆம் ஆண்டில் ரூ.685 கோடி ஹஜ் மானியம் செலவிடப்பட்டுள்ளது. இதில் பயனடைந்தவர்கள் 1.14 லட்சம் பேர்தான். ஆனால், இதனை சிறுபான்மையினர் நலத் திட்டத்துக்காகப் பயன்படுத்தியிருந்தால் மிகப் பெரும் அளவிலான முஸ்லிம்கள் பயன்பெற்று இருப்பார்கள் என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது.  இதைவிட, 11,000 பேர் விஐபி ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டு, ஹஜ் மானியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும், நல்லெண்ணத் தூதுக்குழு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் சுமார் 27 பேர் ஒவ்வோராண்டும், (சிலர் பல ஆண்டுகளாக) இதில் இடம்பெற்றிருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி கடுமையாகக் கண்டித்திருப்பதைப் பார்க்கும்போது, இதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பயன்பெறுவதுதான் அதிகம் என்று எளிதில் சொல்லிவிட முடியும். ஆட்சியாளர்களின் சிபாரிசின் பேரில் "ஹஜ்' மானியம் பெற்றுப் புனித யாத்திரை நடத்தியவர்கள் யார் எவர் என்று பட்டியலிட்டால் மூன்றில் இரண்டு பங்குபேர் அதில் அடங்கினாலும் வியப்படைவதற்கில்லை.  மேலும், ஹஜ் செல்லும் யாத்ரிகர்களுக்கு பிற விமான நிறுவனங்கள் ரூ. 20,000-ம் சலுகைக் கட்டணம் அறிவிக்கும்போது, ஏர்இந்தியா நிறுவனம் ரூ.45,000 வசூலிப்பதையும், இந்த ஹஜ் மானியம் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்டத்தான் பயன்படுகிறது என்பதையும் முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிடுவதைப் பார்த்தால், ஹஜ் மானியத்தில் பயன்பெறும் ஏழை முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும்போலும்!  ஹஜ் மானியத்தை, நீதிமன்றம் குறிப்பிடுவதைப்போல, 10 ஆண்டுகளுக்குள் நீக்கிவிட முடியுமா என்பது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கின்றது. முஸ்லிம் மதத் தலைவர்கள் பலர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தாலும்கூட, ஆளும் கட்சியினர் மிகவும் தயக்கம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, நீதிமன்றத்தின் கருத்தை முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஒரு குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசு துணிச்சலுடன், இந்த மானியத்தை நிறுத்தும்.  இந்தியாவில் ஜைனம், பௌத்தம், பல்வேறு மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பார்க்க வேண்டிய புனிதஸ்தலம் ஒன்று இருக்கவே செய்கிறது. எல்லோருக்கும் அரசு மானியம் வழங்குவது இயலுமா? நியாயமா? "ஹஜ்' யாத்திரைக்கான மானியத்தைப் பொருத்தவரை, இது ஏழை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பயன்படுவதாகத் தெரியவில்லை. மானியம் இல்லாவிட்டாலும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வசதி படைத்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து மானியம் வழங்குவானேன்?  இந்த விவகாரத்தில் சட்டம் சொல்வதும், மதத் தலைவர்கள் கருத்தும் நியாயமானதாக இருந்தாலும்கூட, இந்த விவகாரத்தை சிக்கலாக மாற்றியவர்கள் நம் அரசியல்வாதிகள்தான். இந்த விவகாரம் மிகவும் மென்மையானது. யாருடைய மனமும் புண்படாமல் இருக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவும் வேண்டும்.  இந்த விவகாரம் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை போன்றது. முள்ளாய் இருப்பவர்கள் அரசியல்வாதிகள்தான்

கருத்துகள் இல்லை: