சனி, 12 மே, 2012

இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சம்

புதுக்கோட்டை: ""சங்கரன்கோவில் இடைத்தேர்தலைப் போன்று, புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும், தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது,'' என, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார். புதுக்கோட்டையில், மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த, "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பிலான கண்டனக் கூட்டத்தில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழக சட்டசபையில், தொகுதி பிரச்னைகளை பேச எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுப்பதால் தான், மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு வருகிறது.


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போலீசார் உதவியுடன் வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதை, தேர்தல் கமிஷனும் வேடிக்கைப் பார்த்தது. அதே பார்முலாவை தான் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., பின்பற்றும் என்பதை நன்கு உணர்ந்து தான், தி.மு.க., தேர்தலை புறக்கணித்தது.
இதை, நடக்கக்கூடாத ஒன்று நடந்துவிட்டதாக சிலர் மிகைப்படுத்தியும், விமர்சித்து வருகின்றனர். இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல்களை, அ.தி.மு.க., புறக்கணித்தபோதும் சரி, பென்னாகரம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., டிபாசிட் இழந்தபோதும் சரி, பத்திரிகைகள் விமர்சிக்கவில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலைப் போன்று, புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இதை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை: