வெள்ளி, 1 ஜூலை, 2011

திமுக கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்வோம்- ராமதாஸ்

சென்னை: திமுகவுடனான கூட்டணியை உள்ளாட்சித் தேர்தலில் தொடருவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மட்டும் மோசமான தோல்வியைத் தழுவவில்லை. மாறாக காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே மகா அடியை வாங்கியுள்ளன.

தங்களது தோல்விகளுக்கு இந்தக் கட்சிகள் படு ஈசியான ஒரு பதிலை வைத்துள்ளன. அது திமுகவுடன் சேர்ந்ததால்தான் வீணாய்ப் போனோம் என்ற பதில்.

நன்றி கொஞ்சம் கூட இல்லாத காங்கிரஸ்காரர்கள் இப்போது திமுகவால்தான் தோற்றோம் தோற்றோம் என்று ஊர் ஊராகப் போய்த் தம்பட்டம் அடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் கூட திமுகவால்தான் தோல்வியைச் சந்தித்தோம் என்றார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பொதுக்குழு கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறினார் அவர்.

சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 31 இடங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் ஒன்று பிடுங்கப்பட்டு, 30 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 3 இடங்களில் மட்டுமே பாமக வென்றது.

பாமகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் பனிப்போர் மூண்டு வந்த நிலையில்தான் அவர்கள் தேர்தலை சந்தித்தனர். இந்த நிலையில் ஒருவரை ஒருவர், சரியாக பணியாற்றாமல் கவிழ்த்து விட்டுக் கொண்டதாக தேர்தலுக்குப் பின்னர் இருதரப்பிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி கல்விக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை மாதகால அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு கல்வி பிரச்சனையே உதாரணம். மற்றப்படி பாராட்டும்படி பெரிய அளவில் ஒன்றும் இல்லை.

பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட வேண்டும் என்றார் அவர்.
 

English summary
PMK founder Dr. Ramadoss has said that the party will decide on the alliance with DMK in general council meeting soon. He released the shadow budget in Chennai today.

கருத்துகள் இல்லை: