சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிஷானா நஃபீக்கை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பில் உள்ள சவுதி தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒரு குழந்தையைக் கொன்றதாக ரிஷானா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தான் நிரபாராதி என்று ரிஷானா கூறிவருகிறார். அத்துடன் அந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தர்ப்பத்தில் ரிஷானாவே ஒரு சிறுமிதான் என்று அவருடைய பெற்றோர் கூறுகிறார்கள். பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் முஸ்லிம்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கலாக சுமார் நூறு பேர் இந்த ஆர்ப்பாட்டத்ததில் கலந்துகொண்டனர். ரிஷானா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவருக்கு மரண தண்டனையில் இருந்தும் விலக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள். அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உட்பட ரிஷானாவின் ஆதரவாளர்கள் அவர் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்றும் 2005 ஆம் ஆண்டு அந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் தருணத்தில் ரிஷானாவுக்கு வெறுமனே 17 வயதுதான் என்றும் கூறுகிறார்கள். சவுதியில் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பணிப்பெண் அங்கு தலை வெட்டி மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து இலங்கையயில் ரிஷானா குறித்த கவலை அதிகரித்துள்ளது. ஆனால் ரிஷானா நஃபீக்கின் மரண தண்டனை தற்போதைக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா அவர்கள் தாம் இன்னமும் அவரைக் காப்பாற்றவும் மன்னிப்புப் பெறவும் முயற்சி செய்துவருவதாகக் கூறினார். வறுமை காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடிச் செல்கிறார்கள். ஆனால் பல பெண்கள் குறிப்பாக மத்திய கிழக்கில் மோசமாக நடத்தப்படுவது இலங்கையில் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. B.B. C
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக