ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஜேர்மனியில் 5 புலிச் சந்தேக நபர்களும், நெதர்லாந்தில் எட்டு பேரும் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு எதிராக புதிய நகர்வு: ராஜா, அச்சுதனுக்கு எதிராக இன்டர்போல் எச்சரிக்கை அறிவிப்பு
புலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாக முடக்கும் வகையில் இன்டர்போல் ஊடாகவும் சர்வதேச புலனாய்வு முகவர் அமைப்பின் ஊடாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் இரு முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இன்டர் போல் (சர்வதேச பொலிஸ்) நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரான காஸ்ட்ரோவின் வன்னி அலுவலகத்தில் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஐயா அல்லது ராஜா எனப்படும் பொன்னையா ஆனந்த ராஜாவை இன்டர்போல் பொலிஸார் தேடி வருகின்றனர். 60 வயதான இவர், யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்தவரா வார்.

இவர் 2003ம் ஆண்டிலிருந்து புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவிலும், கப்பல் வலையமைப்பிலும் செயற்பட்டுள்ளார்.ன்டர்போலால் தேடப்படும் மற்றவரான அச்சுதன் சிவராஜா அல்லது பிருந்தாவன் அச்சுதன் என்பவர் பிரான்சிலுள்ள விமான பயிற்சிப் பாடசாலையில் விமானியாக பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் பிரான்ஸ் பிரஜா உரிமை பெற்ற இவர், திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகிறார்.
இவர், புலிகளுக்கு விமானங்களைக் கொள்வனவு செய்வதில் பொறுப்பு வகித்திருக்கிறார். அதேநேரம், புலிகள் இயக்கத்தில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். மேற்படி அச்சுதன் என்பவர் வன்னிக்கு முன்பு அனுப்பி வைத்திருந்த ஒளிப்பதிவு நாடாக்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
புலிகளின் தற்கொலையாளிகளுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளமையும் வன்னி ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விருவரையும் தவிர ஐரோப்பாவைச் சேர்ந்த நரேந்திரன், தென் கிழக்காசிய நாடுகளில் செயற்படும் ரூபன் மற்றும் பவீந்திரன் ஆகியோரும் புலிகள் இயக்கத்திற்கு கப்பல் மற்றும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் கைப்பற்றிய புலிகளின் ஆவணங்களின் அடிப் படையான விசாரணைகளையடுத்து புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்படலாமென நம்பப்படுகிறது.
பிரிட்டன், நோர்வே, அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயற்படும் புலிகளின் மூன்று பிரிவுகளின் தகவல்களையும் பெற்றுத்தருமாறு புலனாய்வுப் பிரிவு ஊடாக அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த அருட் தந்தை இமானுவேல் பிரிட்டனிலும், நெடியவன் பிரிவினர் நோர்வேயிலும், உருத்திரகுமாரன் பிரிவினர் அமெரிக்காவிலும் செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்த வருடத்தில் ஜேர்மனியில் 5 புலிச் சந்தேக நபர்களும், நெதர்லாந்தில் எட்டு பேரும் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகள் அவற்றின் புலனாய்வு வலயமைப்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: