திங்கள், 23 பிப்ரவரி, 2026

முன்னாள் பெண் போராளியின் வாக்குமூலம் .. கேடுகெட்ட புலிகள் இயக்கத்தின் வண்டவாளம்

 Arulanandam Arun :  இந்த ஒலிப்பதிவில் பேசும் பெண் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். 2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தக் காலத்தில், 
18 வயது நிரம்பாத சிறுமியாக இருந்த போது, 
புலிகளால் அவரது வீட்டிலிருந்து வெள்ளை வானில் பலவந்தமாக கடத்தப்பட்டு 
குழந்தைப் போராளியாக மாற்றப்பட்டார். கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், 
அவர் யுத்தத்தின் முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டார். 
பின்னர் அவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டார்.
அவர் என்னைத் தொடர்புகொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்தபோது, 
நான் பலமுறை கண்ணீர் வடித்தேன். அவர் அனுபவித்த வேதனை, 
அவர் எதிர்கொண்ட துயரம், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தைப் பருவம், புலிகளால் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
இவை அவரது சாட்சியத்தின் சில பகுதிகள்.



* ஆனந்தசுதாகரன் 10 வயதில் இருந்து எங்கள் வீட்டிலேயே வளர்ந்தவன். புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்த அந்த நபர் எமது பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்து, அந்தப் பெண்ணை ஏமாற்றியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார். பொது மக்களைக் கொன்ற ஆனந்த சுதாகரன் போன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை போதாது. மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய நபர் அவர்.
• 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் என்னைப் புலிகள் கடத்திச் சென்று கட்டாயப் பயிற்சி அளித்து யுத்த முனைக்கு அனுப்பினர். என்னைக் கடத்தும் போது, எனது அம்மாவை அவர்கள் கடத்திய வானிலிருந்து வெளியே தள்ளிவிட்டனர். அவர் இடுப்பு உடைந்த நிலையில் நடக்க முடியாமல் இருந்தார்.
•கடத்தப்படும் எங்களைப் போன்ற பிள்ளைகளின் தலைமுடிகள் வெட்டப்பட்டு பங்கருக்குள் போடப்பட்டோம். தப்பி ஓடி பிடிபடும் பிள்ளைகளுக்கு குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்காமல், மொட்டையடித்து கருக்குமட்டையால் அடித்து, உடம்பில் உப்பு தடவி வெயிலில் சுடுமணலில் குந்தியிருக்கச் செய்வார்கள்.
•நாய் இறைச்சி, குரங்கு இறைச்சி சாப்பாடு தரப்படும். சாப்பிடாமல் விட்டால் சுடுமணலில் உட்கார வைத்து அடிப்பார்கள்.

•16, 17 வயதுப் பிள்ளைகளை யுத்த முனையில் விட்டுவிட்டு தலைவர்கள் பின்னால் சொகுசாக இருந்தனர். நாம் சேற்றுத் தண்ணீர் குடித்த போது அவர்கள் “மினரல் வாட்டர்” எனப்படும் போத்தல்  தண்ணீர் குடித்தனர். நாம் பல் விளக்காமல் பசியுடன், மாதவிடாய் வந்த இரத்தக்கசிவை நிறுத்த ஒரு pad கூட இல்லாமல், அந்த இரத்தம் எமது காற்சட்டைகளில் ஒட்டி உலர்ந்து, எமது மணத்தை எம்மால் கூடத் தாங்க முடியாமல் இருந்த போதும், தலைவர்கள் குளித்து பல் விளக்கி எமக்கு முன்னால் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பிரபாகரன் A/C அறையில் இருந்தார்.

•களமுனையில் நிற்க முடியாமல் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு மருந்து கட்டாமல் விட்டு, புண்ணில் புழு வைத்து கை அழுகியது.
•காயப்பட்டவர்களுக்கு ஒரு ஊசி மருந்து புலிகளால் ஏற்றப்படும். அந்த மருந்து ஏற்றியதும், நாம் களமுனையில் நடந்த அனைத்து விடயங்களையும் உளறுவோம்.
•நவம் அறிவுபுரம் என்னும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த அங்கவீனர்களான பிள்ளைகளை ரோசா பஸ் ஒன்றில் ஏற்றி குண்டு வைத்து கொன்றனர். அந்தப் பிள்ளைகளை அவர்களது தாய் தந்தையரிடம் கொடுத்திருந்தால் அவர்கள் பராமரித்திருப்பார்கள்.

•தப்பி ஓடி பிடிபடும் பிள்ளைகள் உடனடியாக யுத்த முனைக்கு சாகடிப்பதற்காகவே அனுப்பப்படுவார்கள். அவர்கள் நிச்சயமாகச் சாவடைவர்.
•செஞ்சோலையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அனைவரும் பலிக்கடாக்கள். அவ்வளவு பிள்ளைகளையும் இயக்கத்தில் சேர்த்து கொன்றார்கள்.
 •சனங்களைச் சுட்டு முள்ளிவாய்க்கால் கடலில் மிதக்கவிட்டார்கள்.
•பொதுமக்களுக்கிடையில் நின்று இராணுவத்தைத் தாக்குவார்கள். இராணுவம் மீளத் தாக்கியதும், சிறிலங்கா இராணுவம் பொதுமக்களைக் குண்டு வீசி தாக்கியது எனப் பிரச்சாரம் செய்வார்கள்.
 •இசைப்பிரியாவுடன் பிடிபட்டவர் காட்டிக்கொடுத்தே ஐரோப்பா போனார்.

 •“தமிழன், தமிழன், தமிழன்” என்றார்கள். ஆனால் சிங்களவன் ஆன இராணுவமே எங்களைக் காப்பாற்றியது. குடிக்கத் தண்ணீர் தந்து, சாப்பாடு தந்து, எங்களை மனிதர்களாக நடத்தி ஒவ்வொரு உயிரையும் இராணுவமே காப்பாற்றியது. இன்று நாங்கள் உயிருடன் இருப்பதற்கு இராணுவமே காரணம்.
•நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. பிரபாகரன் நடத்தியது நாட்டுக்கான போராட்டம் அல்ல. அது பிரபாகரன் என்னும் தனிமனிதனின் சுயநலத்துக்காக நடத்தப்பட்ட போராட்டம்.
•உன்னுடைய போராட்டத்துக்கு மக்கள் விரும்பி வந்து சேர வேண்டும். நீ ஏன் எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களை பலவந்தமாகப் பிடித்துச் சென்றாய்? உனது மகள் டொக்டராகப் படிக்கும் போது எங்களை நடுக்காட்டில் யுத்த முனைக்கு அனுப்பினாய்.?
•பிரபாகரனுக்கு மக்கள் ஆதரவு குறைவு. ஆனால் அதை அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள். மக்கள் வலியோடு இருக்கின்றார்கள்.

•கஜேந்திரகுமார், சிறிதரன் போன்ற அரசியல்வாதிகள் போராடினார்களா? சிறிதரனின் பிள்ளையை கொண்டு போய் சுட்டிருந்தால் அவனுக்கு எங்கள் வலி புரியும்.
•இன்று பிரபாகரன் என்ற ஒருவன் இல்லாததால் தான் மக்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். கொழும்பில் உள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அங்கு குண்டு வைத்ததும், தற்கொலைத் தாக்குதல் நடத்தியதும்தான் அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாமல் போனதற்குக் காரணம். இன்று எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றார்கள்.

•சில மணித்தியாலங்களில் வவுனியா போகின்றீர்கள். யாழ்ப்பாணத்தில் டைல்ஸ் போட்டு வீடு கட்டுகின்றீர்கள். பிரமாண்டமான கடைகள் திறக்கின்றீர்கள். விரும்பிய நாடுகளுக்குச் செல்கின்றீர்கள். புலிகள் இருந்த போது வீடு கட்டினீர்களா? கிளிநொச்சியில் கட்ட விடுவார்களா? கார் வேண்டுமா? இன்று ஓட்டுகின்றீர்கள். ஆனால் புலிகளின் காலத்தில் சைக்கிள் மட்டும் தான் நீங்கள் ஓட்ட முடியும். அவர்கள் மட்டும் தான் வாகனங்களில் ஓடுவார்கள். பிரபாகரன் என்ற ஒருவன் அழிந்ததால் தான் இன்று நீங்கள் நன்றாக இருக்கின்றீர்கள்.
•“இராணுவம் பிடித்து கொண்டு போனார்கள்” என்று போட்டோ பிடித்துக் கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என நிற்பவர்கள், இயக்கம் பிடித்து கொண்டு போனவர்களுக்கு எங்கு போய் நீதி கேட்கப் போகின்றீர்கள்?
•இவர்கள் சொல்கிறார்கள் ஆயுதம் மௌனிக்கப்பட்டது என்று. ஆயுதம் எங்கு மௌனிக்கப்பட்டது? மௌனிக்கப்பட்ட ஆயுதம் என்ன திரும்ப சத்தம் போடப் போகின்றதா? ஆயுதம் மௌனிக்கப்படவில்லை. ஆயுதம் அழிக்கப்பட்டது.

•புலிகள் மீண்டும் உருவாக மாட்டார்கள். உருவாக விடவும் கூடாது. இவர்கள் அழிந்தது அழிந்ததாகவே இருக்கட்டும். இவர்கள் மீண்டும் துளிர்க்க கூடாது. துளிர்க்க விடவே கூடாது. இவர்கள் அழியவே வேண்டும்.
•வெளிநாட்டில் வாழ்பவர்கள் தாம் அங்கு வாழ்வதற்காக இங்கு சில MP-மார்களைப் பிடித்து மீண்டும் மீண்டும் இதைக் (புலிகளை) கிளப்ப முயற்சிக்கின்றார்கள்.
•நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. நாங்கள் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போய் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள். நான் A/L-இல் நல்ல பெறுபேறு எடுத்தேன். எங்களைப் படிக்க விட்டிருந்தால் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போய் இன்று நன்றாக வாழ்ந்திருப்போம். இன்று எனது தலைக்குள் ஷெல் பீஸ் (shell piece) உள்ளது. அதை எடுத்தால் நான் இறந்து விடுவேன். சில சமயம் மண்டைக்குள் ஏதோ ஓடுவது போல தாங்க முடியாமல் இருக்கும்.

•எமது வலியும் வேதனையும் இழப்பும் சொன்னால் புரியாது. இழந்தவனுக்கே இழப்பின் வலி தெரியும். ஆயுதம் ஏந்தியவன் இன்று இங்கு காயப்பட்டு கண் இழந்து, கை இழந்து பிச்சை எடுக்கின்றான். இயக்கம் என்று சொல்லி சொகுசாக வாழ்ந்தவன் இன்றும் சொகுசாக இருக்கின்றான். உண்மையாக சண்டை போட்டவன், உண்மையாக காயப்பட்டவன் கனடா, சுவிஸில் வாழவில்லை. அவன் இங்கு துன்பத்தில் வாழ்கின்றான்.
•கருணா அம்மானைத் துரோகி என்கின்றனர். அவர் துரோகி அல்ல. கருணா அம்மான் இதை முடித்து வைத்ததே சந்தோஷம். இனி வரும் சந்ததிகளாவது நிம்மதியாக வாழட்டும். இயக்கம் அப்படி, இயக்கம் இப்படி எனப் புலிகளைப் புகழ்பவர்கள் புலிகளைச் சாட்டி சொகுசாக வாழ்பவர்களே. இவர்கள் இவ்வாறு பேசும் போது எங்கள் மனம் கொந்தளிக்கிறது. ஆனால் எம்மால் பொதுவெளியில் இவற்றைக் கூற முடியவில்லை. இன்று எமக்கு குடும்பம் உள்ளது. இவற்றைக் கூறினால், ஒரு பெண்ணாக எம்மை எவ்வளவு வசைபாடுவார்கள் என்பது எமக்குத் தெரியும். இயக்கம் (புலிகள்) இல்லாதது எவ்வளவு நல்லது? புலிகள் இனிமேல் என்னத்துக்கு? மிச்ச மக்களையும் சாகடிப்பதற்கா?

•மாவீரர் தினங்கள் கொண்டாட அனுமதிக்க கூடாது. ஒவ்வொரு மாதமும் ஒரு பிரச்சினையை கிளப்புகிறார்கள். சில அரசியல்வாதிகளை, MP-மார்களைப் பிடித்து வைத்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தாம் அங்கு வாழ்வதற்காக இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.
 •மீண்டும் புலிகள் துளிர்க்க அனுமதிக்க கூடாது.
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
22/02/2026
+94774842464

கருத்துகள் இல்லை: