RS Prabu : தமிழ்நாட்டு விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களிடமும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும்தான் இனி வரும் காலத்தில் விதை வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது அரசு ஆணையாக வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறை கடந்த மாதம் வெளியிட்ட அரசாணை எண் 249 இதை உறுதி செய்துள்ளது.
இந்த அரசாணை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டியின்றி ஏகபோகமாக விதை வியாபாரம் செய்வதற்கும், தமிழ்நாட்டு விவசாயிகள் கலப்பின விதைகளுக்காக அவர்களை நிரந்தரமாகச் சார்ந்திருக்கச் செய்வதோடு மட்டுமல்லாது சிறுகுறு நிறுவனங்களை மொத்தமாக விதை வணிகத்தில் இருந்து வெளியேறவும் கட்டாயப்படுத்துகிறது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலுக்கு case study ஆக இது அமைவது துயரம் என்பதோடு திமுக ஆட்சியில் இப்படி ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஆகப்பெரும் அவலம்.
இதன் பின்னணியையும் இந்த அரசாணையின் நோக்கத்தையும் கொஞ்சம் விலாவரியாக அலசுவோம்.
Unofficially, தமிழ்நாட்டு விதைச் சந்தை ஆண்டொன்றுக்கு தோராயமாக 1500 கோடி வியாபாரம் கொண்டது. பெரும் கார்ப்பரேட் விதை நிறுவனங்களிடம் இதில் 40% இருக்கும். மீதம் சிறு குறு நிறுவனங்களால் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. விதைகளுக்கு GST கிடையாது என்பதால் நிகர வருமானத்துக்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது.
"முன்னணி விதை நிறுவனங்களின் விதைகள் மாற்றுப் பெயர்களில் சந்தையில் வராமல் கண்காணித்து விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைக்கச் செய்யும் வகையில் புதிய பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்" என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எத்தனை முன்னணி விதை நிறுவனங்கள் தங்களது இரகங்கள் சிறு நிறுவனங்களால் களவாடப்பட்டு மாற்றுப்பெயரில் சந்தைப்படுத்தப்படுகின்றன என்று வேளாண்மைத்துறையிடம் புகார் செய்துள்ளனர், அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன என்கிற அடிப்படைத் தரவுகள் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
ஒரு முன்னணி விதை நிறுவனத்தின் இரகங்கள் மாற்றுப்பெயர்களில் சந்தைப்படுத்தப்படும்போது அதைவிட விலை குறைவாகத்தான் விற்க முடியும். இதனால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது என்று தெரியவில்லை. இதுவரை அபபடிப்பட்ட ஒரு சம்பவத்தை முன்வைத்து எந்த விவசாயியும் புகார் கொடுத்ததாகவும் தரவுகள் இல்லை.
உதாரணமாக தக்காளிச்செடியின் Morphological characters மூலம் இரண்டு இரகங்களின் வேறுபாடுகளைத் துல்லியமாகக் கண்டறிய ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அதே வேலையில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் அதே நிபுணரால் நெல்லிலோ, பருத்தியிலோ இரண்டு இரகங்களைத் துல்லியமாகப் பிரித்தரிய முடியாது. ஒவ்வொரு பயிருக்கும் அத்தகைய நீண்ட நெடிய அனுபவம் தேவை.
DNA fingerprinting மூலமாகக் கண்டறிய முடியும் எனில் ஐந்து விழுக்காடு வேறுபாடு இருந்தாலே ஒரு நிறுவனத்தால் இன்னொரு நிறுவனத்தை சட்டப்பூர்வமாக தங்களுடைய இரகத்தை விற்பதாகச் சொல்லிக் கட்டுப்படுத்த இயலாது. இதுகுறித்து நமது வேளாண்மைத்துறையிடம் விரிவான guidelines இல்லை.
ஒரு நிறுவனத்தின் இரகத்தை மற்றொரு நிறுவனம் களவாடிவிட்டது எனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களுக்குள் பேசியோ அல்லது நீதிமன்றத்திலோ பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் முறை. அதில் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது என்று யாருக்குமே புரியவில்லை.
தற்சமயம் வேளாண்மைத்துறை ஒரு இரகத்தின் morphological characters அடிப்படையில் Truthfully labelled seeds-க்கு மட்டும் Letter of Enrolment வழங்குகிறது. மற்றபடி அந்த இரகத்தில் எந்தப் பிரச்சினை வந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு என்று 100 ரூபாய் பத்திரத்தில் நோட்டரி சான்றுடன் எழுதி வாங்கி வைத்துக்கொள்கிறது.
Letter of Enrolment என்பது ஒரு இரகத்தைத் தமிழ்நாட்டில் விற்பதற்குத் துறையிடம் பெற்ற அனுமதிக் கடிதம்தானேயன்றி அது ஒரு இரகத்தைப் பதிவு செய்த உறுதிமொழி சாசனமோ அல்லது Intellectual Property சான்றிதழோ அல்ல.
தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தகப் பிரச்சினைகளில் நமது வேளாண்மைத்துறை ஏன் பெரிய நிறுவனம் என்றால் நல்லவன் சின்ன நிறுவனம் என்றால் அயோக்கியன் என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறது என்று தெரியவில்லை.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார நலன்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை செயல்படத் தொடங்கியிருப்பது துறைசார் stakeholders மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல் தமிழ்நாட்டில் விதை வணிகம் செய்ய வேண்டுமெனில் கார்ப்பரேட் கம்பெனியாக இருந்தால் மட்டுமே இரகங்களைப் பதிவு செய்ய முடியும் என்பதையும் வேளாண்மைத்துறை கட்டாயமாக்கியுள்ளது.
ஒரு தொழில் காலப்போக்கில் தாமாகவே modernize ஆகிவிடும். அதிலுள்ள MSME நிறுவனங்களும் காலத்துக்கேற்ப மாறிவிடுவார்கள் என்பதை நாம் பார்க்காத துறைகளில்லை.
ஆனால் சிறு குறு நிறுவனங்களை மொத்தமாக வெளியேற்றி சந்தையைக் கைப்பற்ற வேண்டும், புதிய நிறுவனங்கள் வருகையை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் எனில் அதற்கென அரசாங்கம் மூலமாக வழிகாட்டு நெறிமுறைகள், நவீன மயமாக்கல், தரம் உயர்த்துதல் என்ற பெயரில் entry barrier உண்டாக்குவது லாபியிங் கும்பல்கள் மூலம் செய்யப்படும்.
அப்படிப்பட்ட ஒரு அற்புதமான entry barrier-தான் தமிழ்நாட்டில் இனிமேல் கலப்பின விதைகள் விற்க விரும்பும் நிறுவனங்கள் Dept of Scientific and Industrial Research (DSIR) அல்லது Indian Institute of Horticulture Research (IIHR) அங்கீகாரம் பெற்ற inhouse R&D unit வைத்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது.
ஒரே கல்லில் பல மாங்காய்களை இதை வைத்து அடித்திருக்கிறார்கள்.
DSIR அல்லது IIHR அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி அலகு கொண்ட நிறுவனங்கள் ஆராய்ச்சிக்குச் செய்யும் முதலீட்டுக்கு வரிவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தாண்டி பெரிய பலன்கள் இல்லை. வெளிநாட்டு அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி ஆராய்ச்சிக்காக கணிசமான தொகையை முதலீடு செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு வரிவிலக்குப் பெற DSIR accreditation தேவை.
வேளாண்மைத்துறையில் DSIR அல்லது IIHR அங்கீகரிக்கப்பட்ட R&D unit வைத்திருப்பதில் வரிவிலக்கும் ஓருசில அரசு நிதி நல்கைகளைப் பெறுவது தாண்டிப் பெரிய பலனில்லை. வெற்றிகரமான ஒரு இரகத்தைக் கண்டுபிடிப்பதற்கும் DSIR அங்கீகாரத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.
பொதுவாகவே பெருநிறுவனஙகளின் பங்குதாரர்கள் அரண்மனை கட்டும் செலவையும் R&D expenditure என்று கணக்கு எழுதவே DSIR accreditation பயன்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
DSIR, IIHR அங்கீகாரம் என்பது பிரைவேட் லிமிடெட் அல்லது லிமிடெட் கம்பெனிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் நிறுவனம் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் இலாபகரமாக இயங்குவதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
இதன் மூலம் Propritor, Partnership, LLP ஆக விதை நிறுவனம் வைத்திருந்தவர்களுக்கு புதிய இரகங்களைப் பதிவு செய்ய அனுமதி இல்லாததால் செல்லாக்காசு ஆக்கி விடப்பட்டுள்ளனர்.
தனிநபர் அல்லது கூட்டாண்மை நிறுவனமாக வியாபாரம் செய்பவர்களை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்ய நமது வேளாண்மைத்துறை ஏன் மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறது என்று தெரியவில்லை.
Propritor, Parnership firm பதிவு செய்து வியாபாரம் செய்து வந்தவர்கள் வேளாண்மைத்துறையின் எதேச்சதிகாரப் போக்கினால் அதை பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றினால் புதிய GST, PAN எண் அடிப்படையில் DSIR-க்கு மூன்று ஆண்டுகள் இலாபகரமாக கம்பெனி நடத்திய கணக்கு காட்ட வேண்டும்
ஆனால் DSIR அங்கீகாரம் இல்லாமல் புதிய கலப்பின இரகங்களின் பதிவுகள் நமது வேளாண்துறையால் தரப்பட மாட்டாது.
அதாவது விதை நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் ஆக ஆரம்பித்து ஒரு பொட்டலம் கூட விற்காமல் மூன்றாண்டுகள் இலாபகரமாக நடத்திக் காட்டி அரசுக்கு வரி செலுத்தியிருக்க வேண்டும்.
அகில உலக வரலாற்றில் மட்டுமல்லாது பால்வெளி மண்டலத்தில் உள்ள அத்துனை கிரகங்களிலும் இல்லாத இந்த நடைமுறையைப் பார்த்து ஏலியன்கள் கூட ஆச்சரிப்படுகிறதாம்!
DSIR பதிவுக்காக அதன் அலங்கார விதிமுறைகளின்படி ஏற்கனவே இருக்கும் பத்து ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணையைத் தயார் செய்ய வேண்டுமெனில் குறைந்தது 15 இலட்சம் செலவு பிடிக்கும். அதுபோக இன்று மிகக்குறைந்த அளவாக மூன்று இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை டெல்லியிலிருந்து வரும் அதிகாரிகள் "அன்பளிப்பு" பெறுகிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம்.
ஆக, இனிமேல் படித்து முடித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விதை வியாபாரம் செய்ய நுழையவே முடியாது என்பதையும், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களும் DSIR அங்கீகாரம் வாங்கி வரும் வரை புதிய இரகங்களை சந்தைக்குக் கொண்டுவர இயலாது என்கிறதையும் வைத்துப் பார்க்கும்போது Entry barrier மற்றும் Stangulation of existing MSMEs என்பது அரசாங்க ஆதரவுடன் செயல்படுத்தப்படுவது தெளிவாகிறது.
அடுத்து புதிய இரகங்களை வெளியிட M. Sc., Plant Breeding and Genetics படிப்பு கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது.
தமிழ்நாட்டில் பதிவு செய்த நிறுவனங்களில் B. Sc Agriculture அல்லது Horticulture படித்திருப்பவர்கள் பயிர் இரகங்கள் உற்பத்தியில் பத்தாண்டுகள் அனுபவம் இருப்பின் புதிய இரகங்களைப் பதிவு செய்ய அனுமதி உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
காய்கறிப் பயிர்களில் கிட்டத்தட்ட 99.9% தமிழ்நாட்டுக்கு வெளியே நடக்கிறது என்பதால் B. Sc Agri படிப்புடன் தொழில்துறைக்கு வந்தவர்களும் ஒரு சான்றிதழுக்காக M. Sc., Plant Breeding and Genetics படித்தவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
Seeds Act, Seed control order, Protection of Plant Varieties and Farmers Rights Act என எதிலும் ஒரு இரகத்தை வெளியிட M. Sc., Plant Breeding & Genetics கட்டாயம் என்று சொல்லப்படவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயிகள் Pureline Selection மூலம் சேகரித்து தரம் உயர்த்தி வந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் உயர்கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே சொந்தமாக்குவது அறமற்ற செயலாகும்.
தமிழ்நாட்டு சமவெளிப் பகுதிகளை ஐந்து காலநிலை மண்டலங்களாகப் பிரித்து இரண்டு மண்டலங்களில் விற்க வேண்டுமெனில் ஐந்து மண்டலங்களில் கட்டாயமாக 50 சென்ட் பரப்பளவில் இரண்டு பருவ பரிசோதனைத் திடல் அமைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக பீட்ரூட் இரகம் ஒன்றை கிருஷ்ணகிரியிலும் கோவை மாவட்டத்திலும் விற்க வேண்டுமெனில் அந்தப் பகுதிகளில் பரிசோதித்தால் மட்டும் போதாதாம். தஞ்சாவூர் டெல்டா, இராமநாதபுரம், திருவள்ளூர் பகுதிகளிலும் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையில் ஒரு பயிர் எங்கெங்கு வளரும் என்கிற அடிப்படைப் புரிதல் இல்லாமையா அல்லது மேலிருந்து வரும் அழுத்தம் காரணமாக நமக்கு எதுக்கு வம்பு என்று நீட்டுகிற தாளில் கையெழுத்துப் போட்டார்களா என்று தெரியவில்லை.
இந்த விசயத்தை விளக்கி எழுதுவதே எரிச்சல் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டு சமவெளிப் பகுதிக்கு ஒரு இரகம் வெளியிடப்படும்போது அது எங்கெங்கு வளரும் என்பது விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும். தஞ்சாவூரில் கேரட் பயிரிட ஒரு விவசாயி விரும்புகிறார் எனில் அந்த ரிஸ்க் தெரிந்துதான் அதில் இறங்குகிறார். நன்றாக வந்தால் பலர் அதைப் பயிரிடுவார்கள். இல்லாவிட்டால் ரிஸ்க் எடுத்தவர் அதை அனுபவமாகக் கருதி வெளியேறிவிடுவார்.
ஒவ்வொரு விவசாயி வீட்டு வாசலிலும் விதைக் கம்பெனிகளோ, வேளாண்மைத்துறையோ இலாபம் எடுத்துத் தருகிறேன் என்று கியாரண்டி கொடுத்து அமர்ந்திருக்க முடியாது.
அடுத்து இந்த பொருந்தாத சூழலில் பரிசோதனைத் திடல் அமைத்தபிறகு அதை ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு வநது பார்த்துவிட்டு பரவாயில்லை என்று சொன்னால்தான் இரகம் பதிவு செய்து தருவார்களாம். இந்த நடைமுறை எதற்காக என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒரு இரகத்தை வெளியிட M. Sc Plant Breeding and Genetics கட்டாயம் என்று சொல்லும் விதிமுறைகள் இந்தக் குழுவினரின் competance குறித்து வரையறுக்கவில்லை.
Deputy Director, Asst Director, TNAU Scientist, இரண்டு முன்னோடி விவசாயிகள் சேர்ந்து ஒரு புதிய இரகத்தை சந்தையில் விற்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டுமெனில் அவர்களுக்கு இதே வேலையில் நீண்ட நெடிய அனுபவம் இருக்க வேண்டும்.
நாற்பதுக்கும் மேற்பட்ட பயிர்களை வயல்வெளியில் பரிசோதித்து முடிவு எடுத்து சந்தைப்படுத்தும் நிபுணத்துவம் கொண்ட வல்லுநர்கள் இந்தியாவிலேயே யாருமில்லை. இது அவ்வளவு பெரிய subject. ஆனால், கற்றது கைம்மண் அளவு என்பதை விதைச் சான்றளிப்புத்துறை ஏற்றுகொள்ளாதே!
பொருந்தாத ஊர்களில் அமைக்கப்பட்ட சோதனைத்திடல்களை இரண்டுமுறை பார்வையிட்டு அந்த இரகங்கள் குறித்து முடிவு செய்யக்கூடிய ஆல் இன் ஆல் அழகுராசா நிபுணர்கள் கமிட்டி அங்கீகரித்த பிறகுதான் அதை விற்க அனுமதி கிடைக்கும் என்ற விதிமுறையை படிக்கும்போது 'எதுக்கு சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு, எத்தனை இலட்சம் வெட்டணும்னு வெளிப்படையா சொல்லியிருக்கலாமே' என்று சாமானியர்களுக்கும் தோன்றுவது இயல்புதானே.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இரகங்களை உற்பத்தி செய்து விற்பதற்கும் பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருப்பதோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்கணிப்புத் திட்டம் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
வருகின்ற ஐந்தாண்டுகள் நாம் நினைத்த காரியமெல்லாம் நடக்கும் தொட்டதெல்லாம் துலங்கும் என்ற உத்தரவாதம் ஏதாவது இருக்கிறதா? ஐம்பது டன் விதை நெல் விற்ற ஒருவர் ஐந்தாண்டுகள் கழித்து குறிப்பிட்ட இரகத்தில் நானூறு டன் விற்குமா அல்லது நாற்பது டன் விற்குமா என்று எப்படி கணிக்க முடியும்? குறிப்பிட்ட ஒரு இரகம் 2029-இல் சந்தையில் தாறுமாறாக விற்கும் என்ற கியாரண்டி யாரால் கொடுக்க முடியும்?
சந்தையின் போக்கை நெல், உளுந்து, எள், அவரை போன்ற பயிர்களுக்கு ஓராண்டுக்கு கணிக்கலாமே தவிர ஐந்தாண்டுகளுக்கு கணிக்க வேண்டுமெனில் அதற்கென ஒரு மென்பொருளை வேளாண்மைத்துறையே வெளியிட வேண்டும். அதில் பதிவு செய்தவாறு உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் விற்பனையாகவில்லையெனில் வேளாண்மைத்துறையே வாங்கிக்கொள்ளும் என்று கியாரண்டி வழங்க ஒப்புக்கொள்ளுமா என்று தெரியவில்லை.
இவ்வளவு கடுமையான சோதனைகளுக்குப் பிறகு விற்கப்படும் விதைகளில் பிரச்சினை வராதா என்றால் நிச்சயமாக வரும். இது இயந்திரத்தால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதிக மழை அல்லது வெயில் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள், கட்டுப்பாடில்லாமல் சந்தையில் விற்கப்படும் ஹார்மோன் மருந்துகள், தவறான உரப் பயன்பாடு, திடீரென ஒரு பூச்சி அல்லது பூஞ்சாணத்தின் பெருக்கம் என பல காரணிகளால் பாதிப்பு வரத்தான் செய்யும்.
இந்தத் தொழிலில் ஆங்காங்கே localized issues வந்துகொண்டேதான் இருக்கும். இன்று அதைப் பெரிதுபடுத்தி கம்பெனிக்காரர்களிடம் காசு வாங்கித் தருகிறேன் என்று மிரட்டிப் பணம் பறிக்கும் யூடியூப் கும்பல்கள், வழக்கறிஞர்கள், விவசாய ஆர்வலர் என்ற பெயரில் சுற்றும் ஒரு சில ரவுடிகள் ஆங்காங்கே பெருகிவிட்டனர்.
விபத்தில் சிக்காத வாகனம், ஓட்டுநர் என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதற்கு யாராலும் உத்தரவாதம் கொடுக்க இயலாது. அந்த ரிஸ்க் தெரிந்துதான் அதில் பயணிக்கிறோம். அது வேண்டாமெனில் நடந்துதான் செல்ல வேண்டும். அதிலும் பாம்பு கடித்தோ, தலையில் மரம் விழுந்தோ விபத்து ஏற்படாது என்ற கியாரண்டி இல்லை.
ஒரு இரகத்தைப் பயிரிடும்போது அதற்கான ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். அந்த ரிஸ்க் வேண்டாமென்று நினைக்கும் விவசாயிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமோ, வேளாண்மைத்துறையோ பரிந்துரை செய்யக்கூடிய பிரச்சினைகளே இல்லாத, மகசூல் கியாரண்டி கொண்ட இரகமாகப் பார்த்து வாங்கி பயிரிட்டுக் கொள்ளலாம்தானே?!
இனிமேல் ஒரு இரகத்தைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிடும்போது அதில் எந்தப் பிரச்சினை வந்தாலும் நாங்களே பொறுப்பு, இழப்பீடு தர வேண்டி இருப்பின் அதை மறுபேச்சில்லாமல் தந்து விடுவோம் என்று 100 ரூபாய் பத்திரத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை வாங்கி வைத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை.
இவ்வளவு நீளமாகச் சொன்னது போதும். Interpretation of the G. O என்னவென்று சொல்ல இயலுமா என்று கேட்பது புரிகிறது. துறைசார் நிபுணர்கள், விதை உற்பத்தியாளர்கள், வேளாண்மைத்துறையில் கள யதார்த்தம் புரிந்த அதிகாரிகள் என பலரிடமும் உரையாடிக் கிடைக்கப்பெற்ற
புரிதல்கள்:
1) தமிழ்நாட்டில் இனிமேல் விதை வணிகத்தில் யாரும் புதிதாக நுழையவே முடியாது.
பிரைவேட் லிமிடெட் கம்பெனி பதிவு செய்து, ஓடாத கம்பெனிக்கு மூன்றாண்டுகள் இலாபம் காட்டி DSIR அங்கீகாரம் வாங்கி முடித்து, enrolment விண்ணப்பம் போடுவதற்கு மட்டுமே குறைந்தது 50 இலட்சம் தேவை.
2) ஐந்து இடங்களில் 50 சென்ட் பரப்பளவில் ஒரு பயிருக்கான பரிசோதனைத் திடல் ஓராண்டில் இருமுறை அமைக்க செலவு 15 இலட்சம். ஒரு திடலுக்கு இருமுறை, ஐந்து இடங்களில் தலா இரண்டு சீசன் வீதம் ஓராண்டில் இருபது தடவை கமிட்டி உறுப்பினர்களை வரவழைத்து பயிர் இரகங்களின் ஒப்புதல் வாங்க வேண்டும். எல்லோரும் நல்லவர்கள்தான் ஆனாலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்துபோன வகையில் லேனாதேனா செலவு 10 இலட்சம்.
இந்தப் பணத்துக்கெல்லாம் வட்டி, ஊழியர்கள் சம்பளம் இதர நிர்வாக செலவுகள் எல்லாம் சேர்த்து முதல் enrolment வாங்கி முடிக்கும்போது குறைந்தது ஒன்றரை கோடி ரூபாய் தேவைப்படும்.
3) பத்து பயிர்களில் பத்து enrolment வாங்கி முடிக்கவே இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். Enrolment letter வாங்கிய பிறகு அந்த இரகம் சந்தையில் விற்பனையில் அள்ளும் என்பதற்கு எந்த கியாரண்டியும் கிடையாது என்பதால், துணிந்து இரண்டு மூன்று கோடி போட்டவர்களில் பாதிப் பேர் மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பார்கள்.
4) DSIR, Central Insecticides Board போன்றவற்றில் ஒப்புதல் வாங்கித்தர கன்சல்டன்டுகள் இருப்பது போல தமிழ்நாட்டில் புதிய இரகங்களைப் பதிவு செய்து தர கன்சல்டன்டுகள் முளைப்பார்கள். காசு கொடுத்தால் வேலை நடக்கும் என்பது எழுதாத விதியாக மாறும்.
5) பஸ் ரூட் பெர்மிட் மாபியா போல பயிர் இரக Enrolment பெர்மிட் மாபியா உருவாகும். புதியவர்கள் யாரும் நுழைய முடியாது என்பதால் இலவசமாக பெறப்பட்ட enrolment தாள்கள் கோடிக்கணக்கில் விலை போகும். பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு மட்டுமே அனுமதி என்பதால் Merger & Acquisition மூலமாக எளிதாக வாங்கிக்கொள்வார்கள்.
6) ஏற்கனவே இருக்கும் MSME விதை நிறுவன உரிமையாளர்கள் வயதுமூப்பு காரணமாக, நிதிநிலைமை காரணமாக வியாபாரத்தை விட்டு வெளியேறும்போது புதியவர்கள் வருகை இல்லாமல் போவதால் 100% பெரிய கார்ப்பரேட் நிறுவனஙகள் மட்டுமே ஏகபோகம் செலுத்தும்.
பெரும் கார்ப்பரேட் மட்டுமே இருக்கும் என்பதால் அவர்கள் சொல்லும் விலையில் மட்டுமே தமிழக விவசாயிகள் விதைகளை வாங்கியாக வேண்டும்
7) இதுவரை இல்லாத வகையில் போலி விதைச் சந்தை உருவாகும். பிரபல கம்பெனி பெயர்களில் அப்பட்டமாக பாக்கெட் அடித்து பில் இல்லாமல் விற்பனை செய்துவிட்டு செல்லும் counterfeit market மிகப்பெரிய அளவில் வரும். First copy, D stock, Factory excess என்று ஒவ்வொரு தொழிலிலும் இதற்கு ஒரு பெயர் உண்டு.
மொத்தத்தில் தமிழ்நாட்டுத் தாவர இனங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஏகபோக சொத்து என்று அரசாணை சொல்லாமல் சொல்லிவிட்டது.
எது நடக்கவே நடக்காது, இப்படியெல்லாம் பண்ணவே முடியாது, சாத்தியமே இல்லை என்று நினைத்தோமோ அதையெல்லாம் பொய்யாக்கி, நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
இவ்வளவு வெளிப்படையாக பிரபல நிறுவனங்களின் வர்த்தக நலன்களை வேளாண்மைத்துறை பாதுகாக்கும் என்று சட்டசபையிலேயே அறிவித்து அதற்கென இரகசிய குழுக்கள் அமைத்து பொதுவெளியில் எந்தக் கலந்துரையாடலும் இல்லாமல் அரசாணை வெளியிட்டு MSME-களை மொத்தமாகக் காலி செய்து, தமிழ்நாட்டு விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவன வாடிக்கையாளர்களாக மாற்றியிருக்கும் வேகத்தைப் பார்க்கும்போது மக்களாட்சியில்தான் வாழ்கிறோமா என்ற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக