செவ்வாய், 17 டிசம்பர், 2024

ஜார்ஜியாவில் விஷ வாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழப்பு-

மாலை மலர்  :  ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஒரு உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதில 11 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்ததை அடுத்து, ஜார்ஜிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இறந்தவர்கள் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 12 பேரும் பணிபுரிந்த இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து திபிலிசியில் உள்ள இந்தியத் தூதரகம், "ஜார்ஜியாவின் குடாரியில் துரதிர்ஷ்டவசமாக பதினொரு இந்தியர்கள் உயிரிழந்திருப்பதை அறிந்து வருத்தமடைகிறது. மேலும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது" என குறிப்பிட்டிருந்தது.

மேலும், இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் கொண்டு, உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவித்து வருகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்றும், சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளோம்" என்றும் ஜார்ஜியாவில் உள்ள இந்திய மிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 14 அன்று ஜார்ஜிய உள்நாட்டு விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, "பாதிக்கப்பட்டவர்கள் மீது வன்முறை அல்லது உடல் காயங்கள் எதுவும் இல்லை.

ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் 116 வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, அறையின் ஒன்றின் உட்புறப் பகுதியில், படுக்கையறைகளுக்கு அருகில் மூடப்பட்ட இடத்தில், ஒரு மின் ஜெனரேட்டர் இருந்துள்ளது. இது டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை, மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், விஷ வாயு வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: