புதன், 15 மே, 2024

கொள்கை அறம் அற்றவர்களின் ஒரே ஒரு புகலிடம் திராவிட ஒவ்வாமை!

Sathyaperumal Balusamy : சிறுபத்திரிகைகள் என்று சொல்லிக்கொண்ட பலவும்,
 எங்கெங்கோ இருந்த இசங்கள் பலவற்றையும் இங்கே இறக்குமதி செய்து,
 அவற்றைப்பற்றியெல்லாம் விரிவான‌ உரையாடல்களை முன்னெடுத்தன.
எங்கோ லத்தீன் அமெரிக்காவில் நடந்துகொண்டிருந்த இலக்கியப் போக்குகளை எல்லாம்,
 தமிழின் மீது ஏற்றி ஓயாது உரையாடிய வண்ணமிருந்தன.
ரியலிசம் சர்ரியலிசம் மேஜிகல்ரியலிசம் மார்டனிசம் போஸ்ட்மார்டனிசம் நியோபோஸ்ட்மார்டனிசம் என்று நீளும் அந்த இசங்களின் வரிசையில்,
 ஒருநாளும் பெரியாரிசம் என்பது முற்றமுழுதான பேசுபொருளாக இருந்ததில்லை.

பெரியாரிசத்தைப் பற்றி எப்போதாவது முனகிய வேளைகளிலும் அதைப்பற்றிய எதிர்மறையான உரையாடல்களையே முன்வைத்தார்கள்.
பெரியாரிசத்தால் இந்தத் தமிழ்மொழியும் தமிழ்நாடும் மிகப்பெரிய நன்மைகளை அடைந்துகொண்டிருந்த காலங்களிலெல்லாம்,
 இந்தச் சிறுபத்திரிகைகள் என்பவை பெரியாரிசத்தை வசைபாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தன.

தமிழ்மக்கள் கிழக்கைப் பார்த்து நடந்தால் இவர்கள் மேற்கே பார் மேற்கே பார் என்று இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
இதற்குக் காரணம் என்ன என்பது அத்தனை இரகசியமானது அல்ல.
ஒன்றை நன்றாக எண்ணிப்பாருங்கள். பெரியாரியத்தை மிக மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டிருந்த இவர்கள் தான், பெரியாரியத்தை மக்கள் விரோதம் என்று கட்டமைத்துக் கொண்டிருந்த இவர்கள் தான், தலித்தியம் என்ற ஒன்று முளைவிட்டதும் அதை மிகவும் கவனமாகப் போற்றிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள்.

தலித்தியர் என்று சொல்லிக்கொண்டு பெரியாரைத் திட்டித்தீர்த்த நல்லவர்களுக்கெல்லாம் மேடையிட்டு மைக்சசெட் கட்டி அல்லையில் நின்று கவரிவீசியதுதான் பெரும்பாலான சிறுபத்திரிகைகளும் செய்த முக்கியமான‌‌ வேலை.

அரசியல் ரீதியாகப் பெரியாரியமும் தலித்தியமும் இணைந்து பயணிக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள் இந்த நல்லவர்கள்.
பெரியாரியத்திற்கு வெகுகாலத்திற்குப் பின்னால் உருவான தலித்தியத்தின்  அரசியல் சமூகத் தேவைகளைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டதாகப் பம்மாத்துக் காட்டிய இவர்கள், என்றைக்குமே தமிழ்ச் சமூகத்தில்  பெரியாரியத்தின் தேவைபற்றி அக்கறை காட்டியதேயில்லை.

இடதுசாரி இலக்கியவாதிகளுக்கும், தலித்திய இலக்கியவாதிகளுக்கும் மேடையமைத்துக் கொடுத்த இவர்கள்,
திராவிட இலக்கியவாதிகளை ஒரு பொருட்டாகக்கூட மதித்ததில்லை.
 ஏனென்றால், இவர்களுக்கு எப்போதுமே பெரியார்மீதும் திராவிடத்தின்மீதும் தீராத காழ்ப்பும் வெறுப்பும் வஞ்சமும் இருந்தது.
இதற்கான காரணம் என்ன‌ என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப் போன்றது.
தமிழின் அரசியல் பொருளாதாரம் பண்பாடு ஆகியவற்றை வளர்க்காமல் என்றைக்குமே தமிழை வளர்க்க முடியாது.
ஆனால் நமது சிறுபத்திரிகைகளில் பலவும் தமிழின் அரசியலை பொருளாதாரத்தை பண்பாட்டை எதிரிகளிடம் காவுகொடுத்துவிட்டுத் தமிழை மட்டும் வளர்ப்பதில் தான் குறியாக இருந்தன.
- Sathyaperumal Balusamy

கருத்துகள் இல்லை: