செவ்வாய், 14 மே, 2024

புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு

 தினமலர் ; புதுடில்லி:இந்தியாவில், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991ல், நம் நாட்டின், முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்தனர்.
அதன் பின், நம் நாட்டில், புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்,
 புலிகள் அமைப்பின் தலைவர், பிரபாகரன், 2009ல், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின், இலங்கையில், அவர்களது நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

ஆனால், புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள், இலங்கையில் தனி நாடு அமைக்கும் முயற்சியை தொடர்ந்து வருகின்றன. புலிகளுக்கான ஆதரவை, தமிழகத்தில் அதிகரிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

இவர்களது நடவடிக்கைகள், இந்திய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளை விக்க கூடியவை. நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்க கூடியவை.எனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: