வியாழன், 28 டிசம்பர், 2023

உடல்நலம்: உங்கள் மலம் நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா? -

மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

bbc.com - , ரிச்சர்ட் கிரே  - பிபிசி ஃபியூச்சர் :  சில நேரங்களில் நாம் கழிக்கும் மலம் கழிவறை நீரில் மூழ்காமல் நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும். அப்படி நடந்தால், அது உங்கள் செரிமான அமைப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பதைக் குறிப்பதாகும் என்ற அறிவியல் உண்மை சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு முன், நாகராஜ கண்ணன் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.
"உங்களது கழிவு மிதக்கிறதா அல்லது கழிவறை நீரில் மூழ்குகிறதா?"
மின்னஞ்சல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் ஒருவரிடம் இவ்வாறு கேட்பது ஆச்சரியமாக இருக்கலாம்.


ஆனால், மினசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கின் ஸ்டெம் செல் மற்றும் புற்றுநோய் உயிரியல் ஆய்வகத்தின் இயக்குநருக்கு இந்தச் சிந்தனையே ஒரு லட்சியத் திட்டத்திற்கு வழிவகுத்தது.
மனித மலம் குறித்த ஆய்வு

மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு
கண்ணனின் நாளின் பெரும்பகுதி மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு வழிமுறைகளைப் படிப்பதில் செலவிடப்படுகிறது.

ஆனால் அரிதாக, வேலை இல்லாமல் இருக்கும் தருணங்களில், கண்ணன் இன்னொரு புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்க முயன்றார். அந்தப் புதிர், சில நேரங்களில் மலம் ஏன் மிதக்கிறது?

நம்மில் பெரும்பாலோர் இதை எதிர்கொண்டிருக்கலாம். சில நேரங்களில் மனிதக் கழிவு கழிவறையில் முழுதாக ஃபிளஷ் ஆகாமல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். ஆனால், மற்ற நேரங்களில் முழுதாக ஃபிளஷ் ஆகிவிடும். இது ஒரு வகையான மர்மம்தான்.

இந்தப் புதிருக்கான பதில்தான் நம் உடலுக்குள் என்ன நடக்கிறது, அங்கு வாழும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியம் ஆகியவை பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை வழங்குகிறது என கண்ணன் நம்புகிறார்.
மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

அதிக கொழுப்பு காரணமா?
எப்போதாவது கழிவு மிதப்பதற்கு, அதிலிருக்கும் கொழுப்பு அளவுகள் காரணம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் 1970களின் முற்பகுதியில் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் இரண்டு இரைப்பைக் குடலியல் நிபுணர்கள் அதிக நேரம் செலவிட்டு, தொடர்ச்சியான சோதனைகள் மூலம் இதைக் கண்டறிய முடிவு செய்தனர்.

இந்தச் சோதனைகளில் 39 தன்னார்வலர்களின் மலத்தை மற்றும் நிபுணர்களின் சொந்தக் கழிவுகளில் சிலவற்றையும் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு, அவர்கள் சொன்ன பதில், அது கொழுப்பு அல்ல, வாயு என்பதுதான்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால், மலத்தில் காணப்படும் வாயுவின் அளவுகளைப் பொறுத்து, கழிவு மேற்பரப்பில் மிதக்கும் அல்லது சில நேரங்களில் மூழ்கவும் கூடும். மிதக்கும் கழிவுகளில் உள்ள வாயுவை வெளியேற்றினால், அவை மூழ்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வித்தியாசத்திற்கான காரணம், அதிகப்படியான மீத்தேன் உற்பத்தி தான் என்று அவர்கள் முடிவு செய்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிகப்படியான வாய்வு.

மேலும் இங்குதான் கண்ணன் விறுவிறுப்பான ஒரு தலைப்பிற்குள் நுழைகிறார். இடைப்பட்ட ஆண்டுகளில், உடல் பருமன் முதல் இதய நோய் வரை, நமது ஆரோக்கியத்தின் பல அம்சங்களில் நமது மைக்ரோபயோட்டா வகிக்கும் மகத்தான பங்கை மருத்துவ அறிவியல் வெளிப்படுத்தியுள்ளது.

நம் குடல்களில் இருக்கும் 100 டிரில்லியன் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் தான் நமது கழிவு மிதக்குமா அல்லது மூழ்குமா என்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்ணன் சந்தேகித்தார்.

"பெரும்பாலான மலப் பொருட்களில் உருமாறிய உணவுத் துகள்கள் இருக்கின்றன. அவை ஒரு பாக்டீரியா கூட்டத்தை உருவாக்குகின்றன," என்று அவர் கூறுகிறார்.

எலிகள் மூலம் சோதனை
மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

இந்தக் கோட்பாட்டை சோதனைக்கு உட்படுத்த, அவரும் மயோ கிளினிக்கில் உள்ள அவரது சகாக்களும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட எலிகளின் கழிவுகளை ஆய்வு செய்தனர். கிருமிகள் அற்ற இந்த கொறித்துண்ணிகளின் குடலில் நுண்ணுயிரிகள் இல்லை.

குழுவால் உருவாக்கப்பட்ட மல மிதவை சோதனைகளில், இந்த எலிகளின் மலம் உடனடியாக நீரில் மூழ்கியது. அதே நேரத்தில் குடலில் நுண்ணுயிரிகள் இருந்த எலிகளின் கழிவுகளில் சுமார் 50% மிதந்து, இறுதியில் கீழே நகர்ந்தது. அவர்கள் கூர்ந்து கவனித்தபோது, ​​அதற்கான காரணம் தெரிந்தது.

"கிருமி இல்லாத மலம், சிறிய செரிக்கப்படாத உணவுத் துகள்களால் நிரம்பியுள்ளது மற்றும் நுண்ணுயிர்கள் நிரம்பிய மலத்தைவிட அதிக அடர்த்தி கொண்டதாக உள்ளது" என்கிறார் கண்ணன். பின்னர், சில கிருமி இல்லாத எலிகளுக்கு மலம் குழு மாற்று சிகிச்சையைச் செய்தது. அதாவது அவற்றின் குடலில் பாக்டீரியாவை செலுத்தினார்கள். இப்போது அந்த எலிகளும் மிதக்கும் கழிவுகளை உற்பத்தி செய்யத் தொடங்கின.

மனித தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட பாக்டீரியா எலிகளுக்கு கொடுக்கப்பட்டபோதும், அப்போது வெளியான கழிவும் மிதந்தது.

"அந்த நுண்ணுயிரிகள் குடலில் குடியேறியவுடன், யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், எலிகளின் கழிவுகள் உடனடியாக மேற்பரப்பிற்குச் சென்று விடுகின்றன," என்கிறார் கண்ணன்.

அவரும் அவரது சகாக்களும் எலிகளில் இருந்து பெறப்பட்ட மிதக்கும் மலத்தில் உள்ள பாக்டீரியா இனங்கள் குறித்துப் பெரிய அளவிலான மரபணு பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர். மேலும் அவற்றில் வாயுவை உற்பத்தி செய்யும் 10 பாக்டீரியா இனங்கள் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

அவற்றில் ஆதிக்கம் செலுத்துவது 'பாக்டீராய்டுகள் ஓவாட்டஸ்' ஆகும், இவை கார்போஹைட்ரேட்டுகளின் நொதித்தல் செயல்முறை மூலம் வாயுவை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. மனிதர்களின் அதிகப்படியான வாயுவுடனும் இதற்குத் தொடர்புள்ளது.

முகம் சுழிக்காமல் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்
எலிகள் மூலம் கிடைக்கும் சோதனை முடிவுகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும், அவை மனிதக் கழிவுகள் மிதப்பது மற்றும் மூழ்குவதுடன் தொடர்புடையவைதான் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நமது கழிவுகள் மிதப்பது என்பது நமது செரிமான அமைப்பில் பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் மாற்றங்களின் அறிகுறியாக இருக்கலாம் என கண்ணன் நம்புகிறார்.

"நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ளும்போது, வழக்கமாக மிதக்கும் மலம் மூழ்கலாம் என்று நினைக்கிறேன்," என்று கண்ணன் கூறுகிறார். ஆனால் யாரும் இதைப் பற்றி ஆய்வு செய்வதைக் காண முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

"துரதிர்ஷ்டவசமாக, மலம் மிதப்பது குறித்த ஆய்வுக்கு நிதியைப் பெறுவது எளிதாக நடக்காது," என்கிறார்.

நமது உணவு, புகைப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் நாம் உட்கொள்ளும் பலவிதமான மருந்துகள் உட்படப் பல காரணிகள் நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் அமைப்பை மாற்றும். கண்ணன் இப்போது வாயுவை உருவாக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளர எது வழிவகுக்கிறது என்பதை ஆராய்வதில் ஆர்வமாக உள்ளார்.

"நீங்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அல்லது ஒரு விண்வெளிப் பயணத்தில் இருந்தாலும், இந்த வாயு நுண்ணுயிர்கள் நிறைந்த குடலை உடைய ஒருவர் அருகில் அல்லது அடிக்கடி வாயுவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவர் அருகில் அமர நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா," என்று கேட்கிறார் கண்ணன்.
இது சற்று சங்கடத்தை ஏற்படுத்தும் வேலைதான், ஆனால் யாராவது ஒருவர் செய்துதானே ஆக வேண்டும்!

கருத்துகள் இல்லை: