புதன், 27 டிசம்பர், 2023

தமிழருவி மணியனும் மூன்று லட்சம் தொண்டர்களும்!

May be an image of 1 person and smiling

 Suba.Veerapandian :  தமிழருவி மணியனும் மூன்று லட்சம் தொண்டர்களும்!   
அரசியல் துறவரத்தை மீண்டும்  துறந்து விட்டு, களத்திற்கு வந்திருக்கிறார் தமிழருவி மணியன்!  அன்றாடம்  தி.மு.கழக ஆட்சியை, திமுக கழகத்தைக் கடுமையாகத் தன் காணொளிகள் மூலம் விமர்சித்து வருகிறார். அது அவர் விருப்பம், அவர் உரிமை!  
அவருடைய பேச்சில் தவறாமல்  மூன்று கூறுகள் இடம்பெறுகின்றன. 1. தற்பெருமை  2.  காழ்ப்புணர்வு  3. விரக்தி!
உலகத்தில் உள்ள வரலாற்று நூல்களை எல்லாம், தேடித்தேடி துருவித் துருவிப் படிக்கிறவன் நான் என்று சொல்கிறார்.
அவரிடம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை அவர் பேச்சு எடுத்துக்காட்டுகிறது.
மகிழ்ச்சி, படிப்பது நல்ல பழக்கம்தான்.
ஆனால் அதைத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது அவ்வளவு நல்ல பழக்கமில்லை!


உலக வரலாற்றையெல்லாம் படித்தவன் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் அவர், 2015 இல் தமிழ்நாட்டில் எடப்பாடி முதல்வராக இருந்தபோது என்கிறார்.
ஒருவேளை உள்நாட்டு வரலாற்றை அவர் படிப்பதில்லை போல் இருக்கிறது!  

அது ஒரு சிறிய பிழை அல்லது நாவின் தடுமாற்றமாக ( tongue slip) இருக்கலாம். எனினும் தன்னைப் பற்றி அவ்வளவு பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் அவர், கூடுதல் கவனத்தோடு பேச வேண்டும் இல்லையா!  
போகட்டும், திமுகவின் அரசியல் குறித்தும், கலைஞர் குறித்தும், இன்றைய முதல்வர் குறித்தும், அவ்வளவு கடுமையாக அவர் விமர்சனம் செய்யும் போது, அவர் அரசியல் குறித்தும் அவருக்கு நினைவூட்ட வேண்டிய தேவை எழுகிறது!  
காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த அந்த நாள் தொடங்கி, காமராஜரைக் கொலை செய்ய முயன்ற ஒரு கூட்டத்தை ஆதரிக்கும் இன்றைய நிலை வரையில், அவர் எத்தனை கட்சிகளில் இருந்திருக்கிறார், யார் யாரை முதல்வராக்கியே தீருவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார், எத்தனை முறை அரசியல் துறவறம் பூண்டிருக்கிறார் என்பதை எல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது!  
காங்கிரஸ், ஜனதா, ஜனதா தளம், லோக்சக்தி, தமிழ் மாநில காங்கிரஸ், மீண்டும் காங்கிரஸ், பிறகு காந்திய மக்கள் கட்சி, இப்போது காமராஜ் மக்கள் கட்சி  இன்று அண்ணாமலைக்கும். மோடிக்கும் ஆதரவு என்று எத்தனை எத்தனை நிலைப்பாடுகள்!
சரி இதுவும் அவர் விருப்பம், அவர் உரிமை! ஆனால் ஒரு காசுக்கும், ஒரு பதவிக்கும் ஆசைப்படாதவன் என்று தன்னை பற்றி அடிக்கடி தானே சொல்லிக் கொள்ளும் அவர், அண்மையில் ஒரு காணொளியில், தனக்கு அறிவு இருக்கிறது - ஆற்றல் இருக்கிறது, ஸ்டாலின் உட்காரும் முதல்வர் நாற்காலியில் நான் உட்காரக் கூடாதா என்று கேட்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல், கடந்த 18 ஆண்டுகளாகச் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை, எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னையே நம்பி இருக்கும் 3 லட்சம் தொண்டர்களுக்காகவாவது நான் ஏதேனும் செய்ய வேண்டும் அல்லவா என்று கூறி ஆதங்கப்பட்டிருக்கிறார்.
இங்குதான் நமக்கு ஓர் அதிர்ச்சியும், வியப்பும் உண்டாகிறது. எதற்கும் ஆசைப்படவில்லை என்று சொல்லிவிட்டு, முதல்வர் பதவிக்கு அல்லவா ஆசைப்படுகிறார். அது சரி, அந்த மூன்று லட்சம் தொண்டர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என்றும் தெரியவில்லை.
2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருடைய காந்திய மக்கள் கட்சி போட்டியிட்டது! எந்த ஒரு தொகுதியிலாவது 2000 வாக்குகளுக்குக் குறைவாக வாங்கினால், தான் அரசியல் துறவறம் பூண்டு விடுவேன் என்று கூறினார். அடடா, இவர் அரசியல் துறவறம் பூண்டு விட்டால் நாடு என்ன ஆகுமோ என்று மக்கள் எல்லாம் உண்ணாமல், உறங்காமல் கவலைப்பட்டார்கள்.  
தேர்தலில் அவர் கட்சி 40 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. அவர் கணக்குப்படி 80 ஆயிரம் வாக்குகள் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 11683 மட்டுமே!  மீதமுள்ள 2 லட்சத்து 88 ஆயிரம்  தொண்டர்கள் வாக்களிக்காமல் விட்டுவிட்டார்கள்.  
மதுரை வடக்கு தொகுதியில்தான் அவருடைய கட்சி மிக அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது அது 892. எந்தத் தொகுதியிலும் 2000 வாக்குகள் கிடைக்கவில்லை. சென்னை துறைமுகம் தொகுதியில் அவர் கட்சி பெற்ற வாக்குகள் வெறும் 71.
இந்த உண்மைகளை எல்லாம் புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்வதற்குக் காரணம் அவரை இழிவு படுத்துவதற்காக இல்லை. தன்னை உணர்ந்து, தன் வலிமை உணர்ந்து பொது அரங்கில் பேச வேண்டும் என்பதும், அவர் அடிக்கடி குறிப்பிடும் "அறம் சார்ந்த வழிமுறை" அல்லவா!  
இறுதியாக ஒன்று -  கலைஞரைப் பற்றி மிகத் தரக்குறைவாக இன்று பேசும் அவர், திட்டக் குழு உறுப்பினராக இருந்தபோது, ஒரு முறை அறிவாலயத்தில் கலைஞரை எவ்வளவு புகழ்ந்து பேசினார் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். மறந்து போயிருக்குமானால் அந்தப் பேச்சை அப்படியே எடுத்து மறுபடியும் வெளியிட நாம் தயார்!
அன்புடன்
சுப. வீரபாண்டியன்

கருத்துகள் இல்லை: