vinavu.com : கார்ப்பரேட்களால் விழுங்கப்படும் பாரம்பரிய மருத்துவம்!
சமீபத்தில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் செங்காந்தள் (Gloriosa superba) என்னும் தாவரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறிந்து அதற்கு காப்புரிமம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கு (tuber) பகுதியில் இருக்கும் கொல்கிசின் (Colchicine) எனப்படும் வேதியியல் மூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 31 அன்று மத்திய அரசு இதற்கு காப்புரிமம் வழங்கியுள்ளது. இது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற உயிர் காக்கும் மருந்துகளின் காப்புரிமம் கார்பரேட்களிடம் விற்கப்படும் போது, மருந்துகளின் விலையை கார்பரேட்டுகள் தங்கள் லாபவெறிக்கு ஏற்றவாறு உயர்த்தி கொள்ளையடிக்கவே வழிவகுக்கும். இதனால் பாதிக்கப்படப் போவது பொருளாதாரத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களே. இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் அடைந்த பின்னரும் காசு இல்லாதவர்கள் நோயினால் இறந்து போகும் அவலம் இருக்கும் சமூகம் எவ்வாறு முன்னேறிய சமூகமாக இருக்க முடியும்?
தற்போது, கோவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபடித்த புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டு மூலக்கூறு போன்ற பல மருந்துகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக மக்களின் பாரம்பரிய மருத்துவம் இருந்திருக்கிறது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளில் இந்த செங்காந்தள் செடி பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. அதன் அடிப்பையிலேயே இந்த தாவரத்தில் கொல்கிசின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, புற்றுநோய்க்கான மருந்துகளாக Vinblastine, Vincristine, Taxol, இருமலுக்கான மருந்தான வாசலின், வலிநிவாரணியான Morphine, மலேரியாவுக்கான Quinine போன்ற நூற்றுக்கணக்கான மருந்துகள் பாரம்பரிய மருத்துவத்தின் பங்களிப்பினால் கண்டறியப்பட்டவை.
சீன பாரம்பரிய மருத்துவத்தை அடிப்படையாக வைத்து மலேரியா நோயாளிகளை சாவில் இருந்து பாதுகாக்கும் அருமருந்தான ”Artemisinin” என்னும் மருந்து ”Artemisia annua” என்னும் தாவரத்தில் இருந்து கண்டறியப்பட்டதாகும். ஆனால் இப்படி உயிர்காக்கும் மருந்துகளை நவீன மருத்துவத்திற்கு அறிமுகம் செய்த பாரம்பரிய மருத்துவத்தின் நிலை இந்த நாட்டில் என்னவாக இருக்கிறது? குறிப்பாக, தமிழர்கள் வாழ்வியலோடு கலந்திருக்கும் சித்த மருத்துவத்தின் நிலை தமிழகத்தில் என்னவாக இருக்கிறது?
சித்த மருத்துவத்தில் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டால் பல மருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவை நவீன அறிவியலின் துணைகொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும்.
ஆனால் சித்த மருத்துவத்துறை பார்ப்பனியத்தாலும் கார்பரேட்டுகளாலும் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா நோய்த்தொற்றுக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட “நிலவேம்புக் குடிநீர்” மற்றும் கொரோனா நோய்த்தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட “கபசுரக்குடிநீர்” போன்ற மருந்துகள் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும் அருமருந்தாக இருந்தது. இது சித்த மருத்துவத்தின் தரத்திற்கான நடப்புகாலச் சான்றுகளாகும். ஆனால், சித்த மருத்துவத்தில் புதிய ஆராய்ச்சிகளை செய்வது, புதிய மருந்துகளை கண்டு பிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதெல்லாம் கானல் நீராகவே உள்ளது. ஏனெனில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 60 ஆண்டுகளாக இயங்கிவரும் பாரம்பரிய மிக்க சித்தா கல்லூரி, உயர்ந்த ஆய்வுகளுக்கான வசதி மட்டுமல்ல குறைந்தபட்ச அடிப்படை வசதி கூட இல்லாமல் இயங்கிவரும் நிலையில் எப்படி புதிய மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி பற்றிச் சிந்திக்க முடியும்?
இந்த பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி தற்காலிகமாகவே இங்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் வெறும் 4 ஏக்கர் நிலத்தில் போதுமான இடவசதி, கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் 60 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலை, பழமையான விரிசல் விழுந்த கட்டிடங்களின் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுவது, மாணவிகளுக்கான பாதுகாப்பற்ற விடுதி வசதி, அதிக கட்டணம் வசூலிப்பது, போதுமான கழிப்பறை வசதி இல்லாத நிலை, மாணவர்களுக்கான விடுதி வசதி இல்லாதது, குடிப்பதற்கும் மற்றத் தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் வசதி இல்லாதது போன்ற மாணவர்களின் மிக அடிப்படையான பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்யச் சொல்லி வெவ்வேறு காலகட்டங்களில் மாணவர்கள் நிறைய போராட்டங்களை நடத்திய பின்னரும், இந்த பிரச்சினைகளையும் கல்லூரி நிர்வாகம் வெறும் ‘patch work’ மட்டும் செய்து மாணவர்களை ஏமாற்றி வருகிறது.
இதனால், சி.சி.ஐ.எம்-ஆல் (Central Council of Indian Medicine) குறிப்பிடப்பட்ட கட்டமைப்பு தகுதிகளை பூர்த்தி செய்யாததால் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக அனுமதி பெற்று மாணவர் சேர்கையை நடத்தி வருகிறது. சமீபத்தில் என்.சி.ஐ.எஸ்.எம் (National Commission for Indian System of Medicine) வெளியிட்ட விதிகளின்படி எந்த விதிக்கும் பொருந்தாமல் தகுதியற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
பரந்து விரிந்த மூலிகை தோட்டங்கள், நவீன ஆய்வகங்கள், விலங்குகளிடம் மருந்துகளைப் பரிசோதிப்பதற்கான ஆய்வகங்கள், பாதுகாப்பான விடுதி வசதி, அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, மாணவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைக் கொண்டுவந்தால் மட்டுமே அந்த கல்லூரியின் மாணவர்கள் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்குவதோடு மக்களுக்கும் பயனுள்ள கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள்.
ஆனால் இந்த வசதிகளை ஏற்படுத்த போதுமான இடவசதி பாளையங்கோட்டையில் கிடையாது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை 2016-ஆம் ஆண்டில் வழங்கிய உத்தரவில் இக்கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி, செட்டிகுளத்தில் பயன்பாடின்றி இருந்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதிய கல்லூரியை கட்டிக்கொள்ளுமாறு கூறியிருந்தது. ஆனால் அரசோ, கல்லூரி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுமார் 7 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த பல்வேறு பேராசிரியர்கள், ஆர்வலர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், அரசியல் இயக்கங்களின் நீண்ட போராட்டங்களின் பலனாக தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் மேம்பாட்டிற்காக ₹40 கோடியை ஒதுக்கியது. ஆனால் கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட இடத்திற்கு கல்லூரியை மாற்றாமல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால், சித்த மருத்துவ கல்லூரியின் மேம்பாட்டிற்காக அரசு ஒதுக்கிய நிதியை திரும்ப ஒப்படைக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவு, சமூகத்தின் அடிப்படை சுகாதாரம், நோய்த் தடுப்பு, விரிவான மருத்துவ சேவைகள், மருத்துவப் படிப்பு போன்றவை எல்லாம் ஒன்றோடொன்று பிணைந்தது. மருத்துவர்களின் நலன், மருத்துவத் துறையின் முன்னேற்றும், மக்கள் நலன் இவையெல்லாம் வெவ்வேறு அல்ல. ஆனால், அரசு மக்களின் பாரம்பரிய மருத்துவத்தைக் கைவிடும் போது, அவை பழமைவாத சக்திகளால் நாசம் செய்யப்படுவது மட்டுமன்றி வெகுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ சேவைகள் லாபவெறி பிடித்த கார்ப்பரேட்களிடம் சென்றுவிடும் அபாயமும் உருவாகிறது. எனவே, மக்களும் மாணவர்களும் களப் போராட்டங்களின் மூலம் சித்த மருத்துவத்திற்கான தடைகளை உடைத்தெறிந்து அதை அனைத்து மக்களுக்கானதாக மாற்ற வேண்டும்.
சித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக