தினமலர் : கொழும்பு: ஆசிய கோப்பை 'சூப்பர்-4' போட்டியில், கடைசி பந்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற, பைனல் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் அணி. இதனையடுத்து வரும் 17ம் தேதி நடக்கும் பைனலில், இந்தியாவுடன், இலங்கை அணி மோத உள்ளது.
இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடக்கும்'சூப்பர்-4' போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன..
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளி பெற்றிருந்தன. இப்போட்டியில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறலாம் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கின.
மழை தாமதம்
ஆனால் மழை காரணமாக 2 மணி நேரம், 15 நிமிடம் தாமதமாக, தலா 45 ஓவர்கள் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பேட்டிங் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப், இமாம் உல் ஹக் உட்பட ஐந்து பேர் நீக்கப்பட்டனர். பகர் ஜமான், அப்துல்லா சபிக் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். ஜமான் கான் அறிமுகம் ஆனார். இலங்கை அணியில் குசல் பெரேராவுக்குப் பதில் பிரமோத் மதுஷன் இடம் பெற்றார்.
சுமார் துவக்கம்
பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான், அப்துல்லா ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஜமான் 4 ரன் மட்டும் எடுத்து, மதுஷன் வேகத்தில் போல்டானார். பாபர் ஆசம், அப்துல்லா இணைந்து அணியை மீட்டனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் எடுத்த போது பாபர் (29), வெல்லாலகே சுழலில் 'ஸ்டம்டு' ஆனார்.
தனஞ்ஜெயா பந்தில் சிக்சர் அடித்த அப்துல்லா, ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். இவர் 52 ரன் எடுத்து, பதிரானா 'வேகத்தில்' சரிந்தார். தொடர்ந்து மிரட்டிய பதிரானா, ஹாரிசையும் (3) விரைவில் வெளியேற்றினார். தீக் ஷனா சுழலில் நவாஸ் (12) போல்டானார்.
ரிஸ்வான் அரைசதம்
பாகிஸ்தான் அணி 27.4 ஓவரில் 130/5 ரன் எடுத்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. 20 நிமிடத்துக்குப் பின் மீண்டும் போட்டி துவங்கிய போது, 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இம்முறை வேகமாக ரன் சேர்த்த ரிஸ்வான், அரைசதம் அடித்தார். இப்திகார் 47 ரன் எடுத்தார். பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன் எடுத்தது. ரிஸ்வான் (86), ஷாகின் ஷா அப்ரிதி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
குசால் மெண்டிஸ் அபாரம்:
சற்று கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு, துவக்க வீரர்கள் நிசாங்கா(29 ரன்), குசால் பெரேரா (17) சுமாரான துவக்கம் தந்தனர். பின் இணைந்த குசால் மெண்டிஸ், சமரவிக்ரமே ஜோடி, பாகிஸ்தான் பவுலர்களை எளிதாக சமாளித்து ரன்கள் குவித்தனர். இப்திகார் சுழலில் சிக்கிய சமரவிக்ரமே(48 ரன்) அரைசத வாய்ப்பை நழுவவிட்டார்.
கடைசி பந்தில்..
பின் அசலங்காவுடன் இணைந்த குசால் மெண்டிஸ், ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். அரைசதம் அடித்த குசால் மெண்டில் (91 ரன்), முக்கிய நேரத்தில் அவுட் ஆக, டென்சன் எகிறியது. கடைசி இரு பந்தில் 6 ரன் எடுக்க வேண்டிய சூழலில், 5வது பந்தில் பவுண்டரி அடித்த அசலங்கா, கடைசி பந்தில் 2 ரன் எடுத்து, இலங்கை அணி வெற்றி பெற உதவினார். 42 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அசலங்கா (49 ரன்) அவுட்டாகாமல் இருந்தார்.
தோல்வியால் பைனலுக்கு முன்னேற முடியாமல், பாகிஸ்தான் அணி வெளியேறியது. வரும் 17ம் தேதி நடைபெறும் பைனலில், இந்திய அணியுடன், இலங்கை அணி மோத உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக