செவ்வாய், 19 செப்டம்பர், 2023

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்ன? - பி பி சியின் அலசல்

BBC News தமிழ்  :மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்ன?
பெண்களுக்கு இடஒதுக்கீடு
நாடாளுமன்றத்தின் தற்போதைய சிறப்பு கூட்டத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து எழுந்த ஊகங்கள் உண்மையாகியுள்ளன. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் அந்த மசோதா கொண்டு வரப்படுவதை பிரதமர் மோதி உறுதிப்படுத்தியுள்ளார். வாஜ்பாய் அரசு பலமுறை முயன்றும் நிறைவேற்ற முடியாமல் போன ஒன்றை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது என்ன? அதன் முக்கிய அம்சங்கள் எப்படி இருக்கும்? நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அது எப்படி மாற்றி அமைக்கும்? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - மோதி அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், விநாயக சதுர்த்தியையொட்டி, நாட்டின் எம்.பி.க்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை பிரதமர் மோதி வெளியிட்டார். அவர் பேசுகையில், "மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் நீண்ட காலம் நடந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா பல முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை இல்லாததால் அந்த கனவு முழுமையடையாமல் இருந்தது. அதனை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பை கடவுள் எனக்கு அளித்துள்ளார். இரு அவைகளிலும் பெண்களின் பங்கேற்பு குறித்த புதிய மசோதாவை எங்கள் அரசு இன்று கொண்டு வருகிறது." என்று அறிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

ஆளும் பாரதிய ஜனதா கட்சி 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் குறிப்பிட்டிருந்தது.

நாட்டில் பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் இந்த மசோதா உண்மையில் என்ன சொல்கிறது? தற்போது, ​​நாட்டில் எந்தெந்த மாநிலங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை எப்போது இருந்து வருகிறது மற்றும் இந்த மசோதாவின் எந்த விதிகள் எதிர்க்கப்படுகின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா


பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய விதிகள் என்ன?

சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக அரசு அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் அரசு எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை வழங்குகிறது.

இந்த மசோதாவின்படி, சுழற்சி முறையில் பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு, டிரா முறை மூலம் முடிவு செய்யப்படும். தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே அதிகார மட்டத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை இருந்து வருகிறது.

நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களின்படி பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களில் இருக்கும் வெவ்வேறு தொகுதிகளில் சுழற்சி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் வரலாறு என்ன?

செப்டம்பர் 1996 இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச். டி. தேவகவுடாவின் ஆட்சிக் காலத்தில், இந்த மசோதா முதன்முதலில் 81வது சட்டத்திருத்த மசோதாவாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால், பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 1996 இல் சமர்ப்பித்தது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெறுவதற்கு முன்பே மக்களவை கலைக்கப்பட்டு மசோதா ரத்து செய்யப்பட்டது.

பின்னர் 12வது மக்களவையில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது.

அப்போதைய சட்ட அமைச்சர் எம். தம்பிதுரை நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தார், மேலும் ஆர்ஜேடி (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) எம்பி ஒருவர் மக்களவையின் அரங்கிற்கு வந்து மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார். அதே ஆண்டில், இந்த மசோதாவுக்கு எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியவில்லை.

அதன்பிறகு, 1999, 2002, 2003ல், இந்த மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டாலும், ஒருமுறை கூட, இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. சுவாரஸ்யமாக, காங்கிரஸ், பாஜக மற்றும் பல இடதுசாரி உறுப்பினர்கள் ஆதரவு அளித்த போதிலும், இந்த மசோதாவை அங்கீகரிக்க முடியவில்லை.

2008 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ராஜ்யசபாவில் மசோதாவை அறிமுகப்படுத்தியது, அது 186 க்கு 1 என்ற வாக்குகளில் 9 மார்ச் 2010 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஆனால் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படும் பட்டியலில் இந்த மசோதா ஒருபோதும் எடுக்கப்படவில்லை, மேலும் 15 வது மக்களவை கலைக்கப்பட்டவுடன், இந்த மசோதாவும் காலாவதியானது.

அப்போது லாலு பிரசாத் யாதவின் RJD, JDU (Janata Dal United) மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை இந்த மசோதாவை பிரதானமாக எதிர்த்தன.

அப்போது ஜே.டி.யு தலைவர் ஷரத் யாதவ் கேட்ட கேள்வி மிகவும் பிரபலமான பேசுபொருளானது. கிராமங்களில் வாழும் எங்கள் மகளிரை இங்கே இருக்கும் உயர் சாதிப் பெண்கள் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்தமுடியும் என அவர் கேட்டிருந்தார்.

நாடு விடுதலையாவதற்கு முன்பே எழுந்த கோரிக்கை

தி இந்துவின் கூற்றுப்படி , சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலும் பெண்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் 1931 இல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமருக்கு புதிய அரசியலமைப்பில் பெண்களின் நிலை குறித்து கடிதம் எழுதினர்.

அவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒரு பதவிக்கும் பெண்களை நியமிப்பது ஒரு வகையான அவமானமாக இருந்திருக்கும், எனவே பெண்களை நேரடியாக நியமிக்காமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினையும் வந்தது. ஆனால் இது பற்றிய விவாதம் தேவையற்றது என்று தவிர்க்கப்பட்டது.

அரசியல் நிர்ணய சபையிலேயே நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்தும் பேசப்பட்டது. ஆனால் அது தொடர்பான விவாதம் தேவையற்றது என தவிர்க்கப்பட்டது.

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகும் பெண்களுக்கு அரசியலில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

எனவே, கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பெரிய விவாதங்கள் நடந்துள்ளன.

உதாரணமாக, 1971 இல் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்தியாவில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து வரும் சூழ்நிலை மற்றும் சரிவு குறித்து கருத்து தெரிவித்தது.

இந்தக் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தனர், ஆனால் இந்த உறுப்பினர்களில் சிலர் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஆதரித்தனர். பின்னர் படிப்படியாக பல மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவிக்கத் தொடங்கின.

உள்ளாட்சி அமைப்புகளில் 33% இடஒதுக்கீடு வழங்கிய நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவானது. பின்னர் இந்த வரம்பை 50% ஆக உயர்த்தியது.

1988ல் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பரிந்துரைகள் அரசியலமைப்பின் 73 மற்றும் 74 வது திருத்தங்களை வரலாற்று ரீதியாக செயல்படுத்த வழி வகுத்தன. இது அனைத்து மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அதிகார மட்டங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

ஊரக உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்ட விதிகளை உருவாக்கியுள்ளன.

சிறப்பு அமர்வின் முதல் நாள் என்ன நடந்தது?

தற்போது நடைபெற்று வரும் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள போதிலும், இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால், வழக்கம்போல் இந்த விவகாரங்களில் எதிர்க்கட்சிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே வாதங்களும், பிரதிவாதங்களும் தொடர்கின்றன.

கூட்டத்தொடரின் தொடக்கத்தில், பாஜக எம்பி ராகேஷ் சிங், இந்த விஷயத்தில் கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பாராமதி எம்பி சுப்ரியா சுலே, "இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியை இந்த நாட்டிற்கு காங்கிரஸ் கட்சி தான் அளித்தது என்றார்.

நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் எப்போதுமே ஆதரவளித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்களவையின் முதல் பெண் சபாநாயகரான மீரா குமாரும் காங்கிரஸின் உறுப்பினராவார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் காங்கிரஸ் கட்சியால் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் எம்.பி.க்கள் பலம் இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அன்றைய மகாராஷ்டிர முதல்வர் சரத் பவார் தலைமையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முதலில் 33% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது," என்றார்.

"இதுபோன்ற முடிவை எடுத்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா என்பதில் நான் பெருமைப்படுகிறேன்."

மேலும் பேசிய அவர், "பின்னர் இந்த இட ஒதுக்கீடு வரம்பை 50 சதவீதமாக உயர்த்தினோம். புதிய நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுத்தால், அதற்கு நாங்கள் அனைவரும் ஆதரவளிப்போம். பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்," என்றார்.
சோனியா காந்தி

பெண்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைமை ஆண்களின் கையில் இருப்பதால், நாட்டில் பெண்களின் நிலையை மேம்படுத்த இந்த மசோதா அவசியம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெண்களின் நிலை குறித்து சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தாலும், இன்னும் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதே யதார்த்தம்.

எனவே, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், எப்போதும் புறக்கணிக்கப்படும் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தும் வலிமையான சக்தியை பெண்கள் உருவாக்குவார்கள் என்பதும் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் பாலின சமத்துவம் மேம்படும் என இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெண்கள் இடஒதுக்கீடு குறித்து சமூக ஆர்வலர் கிரண் மோகே பேசியபோது, ​​“இது பெண்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் குறித்த விஷயமாக இருக்கிறது.

எனவே, பெண்கள் உரிமைக்காக, ஒவ்வொருவரும் தங்களின் அரசியல் சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க முயற்சிக்க வேண்டும்," என்றார்.

இன்று, இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. வேலைகளில் பெண்களின் பங்களிப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. பெண்களின் உணவு கூட குறைந்த ஊட்டச்சத்து உள்ள உணவாகவே தொடர்கிறது. பாலின ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் நீங்கவில்லை. அதனால் அதிகாரம் செலுத்தும் இடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முக்கியத் தேவையாக உள்ளது என ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

உண்மையில் பெண்கள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களின் பங்கு என்ன?

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவக் கோட்பாட்டை மீறுவதாக இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், தகுதியின் அடிப்படையில் பெண்கள் போட்டியிட முடியாது என்றும், இறுதியில் அவர்களின் சமூக அந்தஸ்தை சீரழித்து விடுவார்கள் என்றும் மசோதாவை எதிர்ப்பவர்கள் கருதுகின்றனர்.

பெண்கள் ஒரு சாதிக் குழு அல்ல, எனவே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கான வாதங்களை இந்தக் கோரிக்கையில் பொருத்த முடியாது என சிலர் வாதிடுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், வாக்காளர்களுக்கு தாங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்காது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், அவர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

பெண்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பேசிய கிரண் மோகே, இதுபோன்ற புதிய கோரிக்கைகளால் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதில் புதிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன என்றார்.

"அரசியலமைப்புச் சட்டம் சாதி அடிப்படையிலாக அளித்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சாதிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு தானாகவே இடஒதுக்கீடு தானாகவே வழங்கப்படும்.

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு இதிலும் கிடைக்கும். ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பொது இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்."

மேலும் பேசிய அவர், "இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பெண்களுக்கு இடஒதுக்கீடு கோருபவர்கள் அவர்களுக்கு அரசியல் இடஒதுக்கீட்டை நேரடியாகக் கோருவதில்லை. மகளிர் இடஒதுக்கீட்டில் மட்டும் இதைக் கோருவதால் செயல்முறை தாமதப்படுத்தப்படுகிறது" என்றார்.

இந்திய அரசியலில் பெண்களின் தற்போதைய நிலை என்ன?

1952ல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இது காலப்போக்கில் ஏற்ற இறக்கத்துடனே தொடர்ந்தது. ஆனால் மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதத்திற்கு மேல் சென்றதில்லை.

தற்போதைய 17வது மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதம்.

நமது நாட்டில் கடந்த காலத்தில் 62 பெண் எம்பிக்கள் இருந்த நிலையில் தற்போது 78 பெண் எம்பிக்கள் உள்ளனர். வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் சதவீதம் குறைவாக உள்ளது.

இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் என்ன ஆகும்?

தற்போது மக்களவையில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. அவர்களில் 78 பேர் பெண் எம்பிக்கள். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர் அவர்களில் 11 பேர் பெண் எம்பிக்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது.

மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கினால், மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 179 ஆக உயரும் என்பதுடன், 81 பெண்களை மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கலாம்.

“பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தாலும் பெண்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடாது.

எந்தக் கட்சி, எந்த சித்தாந்தத்தில் பெண்கள் நாடாளுமன்றத்திலோ அல்லது பிற சபைகளிலோ பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதும் முக்கியம்,” என்று மோகே கூறினார்.

முதலில் இடஒதுக்கீட்டைப் பெறுவோம்.. பிறகு முடிவு செய்வோம்

பெண்கள் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சமூக ஆர்வலர் மேதா குல்கர்னி பேசுகையில், “இப்போது ஒவ்வொரு பிரச்சினையும் மதத்தின் கண்ணோட்டத்தில் அணுகப்படுகிறது.

சாதி, மதப் பிரச்னையில் தீவிரம் காட்டுவதால், பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் கிடப்பில் போடப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது," என்றார்.

"தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டாலும், ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் வெளிப்படையாக இல்லை.

பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படலாம். ஆனால் எங்களின் நிலைப்பாடு என்னவென்றால், என்ன விலை கொடுத்தாவது பெண்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படவேண்டும் என்பதுதான்."

கருத்துகள் இல்லை: