மாலை மலர் : புதுடெல்லி: சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் என்பவர் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் கடந்த 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25, 26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.
சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்ததும் நீதிபதிகள், "இந்த வழக்கை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏன் தலையிட வேண்டும்" என்று கேட்டனர்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "நீங்கள்தான் முதன்மையான கோர்ட்டாக இருக்கிறீர்கள். நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.
அதற்கு நீதிபதிகள், 'இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஐகோர்ட்டுகள் உள்ளன. நீங்கள் எந்த ஐகோர்ட்டில் வேண்டுமானாலும் இந்த விவகாரத்துக்காக அணுகலாம்.
இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.
அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், குறிப்பாக சனாதனத்தை வேரறுப்போம், சனாதனத்தை ஒழித்து விடுவோம் என்று கொசுவோடு சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது, கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது ஆகிய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருந்தார்.
அதன்பிறகு வழக்கு மனுவை மீண்டும் ஒருமுறை பார்த்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் நோட்டீசு அனுப்புகிறோம். அவர்கள் பதில் அளிக்கட்டும் என்று கூறினார்கள். அதன்பிறகு சனாதனம் பற்றிய பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அமைச்சர் சேகர் பாபு, சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம் ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா? என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? என்றும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு பங்கேற்றது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக