வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் எங்கே? விலகும் மர்மம்!

மின்னம்பலம் -monisha :  அசோக் எங்கே? விலகும் மர்மம்!
 “கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தனது கஸ்டடியில் வைத்து விசாரித்தது.
அதற்குப் பிறகு ஆகஸ்ட் 12ஆம் தேதி அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அன்றே அமலாக்கத்துறை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.
அதாவது, ‘செந்தில் பாலாஜி இந்த கஸ்டடி விசாரணையில் ஒத்துழைப்பு வழங்கவே இல்லை. பல கேள்விகளுக்கு நழுவலான பதில்களையே அளித்தார்.
போக்குவரத்துக் கழக வேலைகளுக்கு பணம் வாங்கிய வழக்கில் கூட்டுச்சதி நடைபெற்றிருக்கிறது.
எனவே இந்த வழக்கை எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று அமலாக்கத் துறை கோரியிருந்தது.


அதன்படியே இன்று இவ்வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார் சென்னை முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் எங்கே என்று கேள்வி தான் ஊடக வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அசோக் கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார் என்று தகவல் பரவியது. ஆனால் ஒரு நாள் கழித்து அந்த தகவலை அமலாக்கத்துறை முற்றிலுமாக மறுத்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி விவகாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். இந்த கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பாக அமலாக்கத் துறை வட்டாரங்களில் விசாரித்த போது… ‘அசோக் குமாரை அமலாக்கத்துறை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறது. அவர் இருப்பிடத்தையும் தொடர்பு எண்களையும் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறார். ஆனாலும் ஒரு சில துப்புக்களை வைத்து அவரை அமலாக்கத்துறை நெருங்க முயலும் போது எப்படியோ அவர் தப்பித்து விடுகிறார்.

இது சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஒருவேளை தமிழ்நாடு அரசின் போலீஸ் அசோக்குக்கு உதவியாக இருக்கிறதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுகிறது. ஏனென்றால் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது… அவரது தம்பி அசோக்கும் அங்கே சில நாட்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது செந்தில் பாலாஜியும் அசோக்கும் முக்கியமான சில விஷயங்கள் பற்றி கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதாவது, ‘நான் விடுதலையாகி வெளியே வரும் வரை நீ அமலாக்கத்துறையிடம் சிக்கி விடக்கூடாது’ என்பது தான் அசோக்குக்கு செந்தில் பாலாஜி இட்ட கட்டளை. அதை தமிழக போலீஸ் ஆதரவோடு அசோக் ஒருவேளை இன்று வரை நிறைவேற்றி வருகிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது என்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் செந்தில் பாலாஜிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை பற்றி நீதிமன்றத்தில் எப்படி எல்லாம் பேசினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர்களின் கற்பனைக்கு அளவே இல்லை’ என்கிறார்கள்.

இதே நேரம் செந்தில் பாலாஜி, அசோக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை தமிழ்நாடு போலீசும்… தமிழ்நாடு போலீசின் நடவடிக்கைகளை அமலாக்கத்துறையும் ஒன்றை ஒன்று கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: