மின்னம்பலம் - christopher : நாங்குநேரி சம்பவம்… உதயநிதியை கைது செய்யவேண்டும் : கிருஷ்ண சாமி
தமிழ்நாட்டில் ஜாதி மோதலை தூண்டி விடும் விதமாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்
நாங்குநேரியில் பட்டியலின மாணவன் மற்றும் அவனது தங்கையை சக மாணவர்கள் வீடு புகுந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சிபிஎஸ்சி, மெட்ரிகுலேசன் போன்ற பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஏன்? இதற்கு சாதி மனநிலை கொண்ட ஆசிரியர்களும் காரணம் என்பது எனது கருத்து.
சாதி பெயர் கொண்ட பள்ளிகள் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. அதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர், அதேநேரத்தில் கடந்த மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படமும் நாங்குநேரி சம்பவத்திற்கு முக்கிய காரணம்.
மாமன்னன் திரைப்படத்தில் பகத் ஃபாசில் கதாபாத்திரம் மூலம் சமூக சீர்க்கேட்டிற்கு களம் அமைத்து கொடுத்துவிட்டனர். அந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பலவும் சாதி வெறியர்களை தூண்டி விடுவதாக இருந்தது. எப்படி தணிக்கைத்துறை இவற்றையெல்லாம் அனுமதித்தது?
மாமன்னன் திரைப்படம் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழ்நாட்டில் ஜாதி மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்.
எனவே முதலில் மாமன்னன் போன்ற அஜெண்டா திரைப்படங்களுக்கு தடைவிதிக்க வேண்டும். அந்த படத்தில் நடித்த உதயநிதிஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக