திங்கள், 14 ஆகஸ்ட், 2023

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளிடம் கொள்ளை

maalaimalar : சென்னை:ஆந்திராவில் அடுத்தடுத்து 2 சென்னை ரெயில்களை நிறுத்தி மர்ம கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்-சென்னை இடையே ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல இந்த ரெயில் ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
நள்ளிரவு 1.20 மணிக்கு ரெயில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராய கொண்டா மற்றும் கவாலி ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டு இருந்தது.


இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சிக்னல் கிடைக்காததால் என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.
அந்த சமயம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் கத்தியுடன் ரெயில் பெட்டிகளில் திபு திபு என ஏறினார்கள். அவர்கள் எஸ்-2,எஸ்-4,எஸ்.5-எஸ்6-எஸ்.-7 மற்றும் எஸ்.8 ஆகிய பெட்டிகளில் புகுந்தனர். மர்ம மனிதர்களை பார்த்ததும் தூங்கி கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர்.

உடனே கொள்ளையர்கள் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்தனர். நகை-பணத்தை கொடுக்க மறுத்த பயணிகளை அடித்து உதைத்தனர். பயணிகள் வைத்து இருந்த விலை உயர்ந்த செல்போன்களையும் பிடுங்கினார்கள். இதனால் பயணிகள் . பயத்தில் அலறினார்கள்.

கொள்ளையர்கள் கையில் கத்தி வைத்து இருந்ததால் பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். சிலர் தங்களது நகை, பணத்தை திருப்பி தருமாறு கொள்ளையர்களிடம் கெஞ்சினார்கள். பெண்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.

ஆனாலும் அவர்கள் மனம் இறங்க வில்லை. பயணிகளிடம் முடிந்த வரை நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு இறங்கி ஓடிவிட்டனர்.

பின்னர்அந்த கும்பல் சிறிது நேரத்தில் அந்த வழியாக செகந்திராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி வந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி எஸ்-1 மற்றும் எஸ்-2 பெட்டிகளில் தூங்கி கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பி கத்தி முனையில் நகை பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதற்குள் இது பற்றி அறிந்ததும் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மர்ம கும்பல் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்கள். போலீசார் அவர்களை சிறிது தூரம் விரட்டி சென்றனர். அப்போது கொள்ளையர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கி விட்டு இருட்டுக்குள் மறைந்து தப்பி விட்டனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களும் நள்ளிரவு 1.20 மணியில் இருந்து 1.50 மணிக்குள் நடந்ததாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

மர்ம கும்பல் சிக்னலை உடைத்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் 2 ரெயில்களும் கவாலி ரெயில் நிலையத்துக்கு சென்றது. பயணிகள் இது தொடர்பாக கவாலி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தனர்.

கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்ற விவரம் தெரியவில்லை. எத்தனை பேரிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள் என்பதும் தெரியவில்லை. மொத்தம் 30 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 

கருத்துகள் இல்லை: