திங்கள், 17 ஜூலை, 2023

சவுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற மலையக பெண்ணின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு

tamilmirror.lk : சவுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றவரின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு
லிந்துலை கிளனிகல்ஸ் தோட்டத்தில் 30 வயதுடைய இளம் தாய் ஒருவர் குடும்ப வறுமை காரணமாகவும் சொந்தமாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் கொள்ளும் நோக்கிலும் கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு அந் நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளர் மூலம் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சவுதியில் தொழில் வழங்கிய வீட்டு உரிமையாளரின் மனைவி குறித்த பெண், தான் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வரும்போது குறித்த வீட்டின் எஜமானி இவரை கடுமையாக தாக்கிய குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.


கணவன் மற்றும் அவரின் உறவினர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவர் மற்றும் உபமுகவர் இருவரிடமும் இச்சம்பவம் தொடர்பாக பல முறை தெரிவித்த போதிலும். பணம் கொடுத்தால் மீண்டும் நாட்டிற்கு எடுத்து தருவதாகவும் உபதரகர் அச்சுறுத்தியதாக கணவன் தெரிவிக்கின்றார்.

சவுதி நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இலங்கைக்கு கடும் உடல் சுகயீனமுற்ற நிலையில் வந்ததால் உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது உடம்பில் அதிகமான குண்டு ஊசிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.உடம்பில் இருந்து இதுவரை நான்கு குண்டு ஊசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் நான்கு ஊசிகள் உடம்பில் இருப்பதுடன் இதனை அகற்ற வைத்தியர்களால் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் “எங்களுக்கு வீடு இல்லை. வெளிநாடு சென்றால் வீடு ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணத்துடன் சென்றேன் என்னை லிந்துலை கேம்பிரி தோட்டத்தில் இருக்கின்ற தரகர் எனது வீட்டுக்கு வருகைதந்து கணவருடன் பேசிய பின்பு கொழும்பில் உள்ள தரகர் மூலம் அனுப்பிவைத்தனர்.

எனக்கு பயிற்சிகள் வழங்கவில்லை. அந்த நாட்டு மொழி தெரியாது என கூறியபோது, அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அந்த நாட்டுக்கு சென்ற பின் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். அங்கு சென்றவுடன் மெடம் கதைத்தார் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சொல்வது அவருக்கு புரியவில்லை. எப்படியோ சமாளித்து கொள்ளலாம் என நினைத்தபோது என்னால் அவர்கள் கூறுவதை புரிந்துகொள்ள முடியவில்லை இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் வேலைகளை செய்து கொண்டிருந்த போது என்னை தவறாக பேசியதோடு ஒவ்வொரு நாளும் அடித்து கன்னத்தில் அறைவது சாப்பாடு கொடுக்காமல் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

பின்னர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்ற போது அங்கு பலவந்தமாக கதவை திறந்து கொண்டு என்னை தாக்கியதோடு எனது உடம்பு பகுதியில் குண்டூசிகளை குத்தினார்கள். நான் எவ்வளவு கெஞ்சி கேட்ட போதிலும் தாக்கினார்கள்.

நாங்கள் வறுமை காரணமாக தான் வெளிநாடு செல்கின்றோம். அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இலங்கையில் உள்ளவர்கள் பொய்யான தகவல்களை கூறி எங்களை போன்றவர்களை அனுப்பினாலும் எந்த பாதுகாப்பும் வழங்குவதில்லை. இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது” என கண்ணீர் மல்க இவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: