மாலை மலர் : 10 வயது சிறுமியை வீட்டுப் பணிக்கு நியமித்து, சித்திரவதையும் செய்ததாக கூறி ஒரு பெண் விமானியும், விமான ஊழியரான அவரது கணவரும், ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் அந்த பெண் விமானியை அந்த கும்பலில் பலர் பலமுறை அறைகிறார்கள். அவள் தலையில் தாக்கப்பட்ட நிலையில், உதவிக்காக அழுகிறார். பல பெண்களால் ஒரே நேரத்தில் அவர் அடிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மன்னிப்பு கேட்டு அலறுகிறார். ஆனாலும் தாக்குதல் தொடர்கிறது.
அவரது கணவர் மற்றொரு குழுவினரால் தனியாக தாக்கப்படுகிறார். அவரும் தனது மனைவியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த தாக்குதல்களை தடுக்க சிலர் முற்படுகின்றனர். ஒருவர் "அவள் இறந்துவிடுவாள்" என்று அலறுகிறார்.
தகவல்களின்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு, அத்தம்பதியினர் ஒரு 10 வயது சிறுமியை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தியுள்ளனர். இன்று, அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் அச்சிறுமியின் கைகளில் காயங்களைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
அந்த சிறுமியை அத்தம்பதியினர் அடித்து துன்புறுத்துவார்கள் என அப்பகுதி மக்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இப்பின்னணியில் சிறுமியின் கைகளிலும், கண்களின் கீழும் காயங்களை கண்டதனால் ஒரு கூட்டம் கூடி அத்தம்பதியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அத்தம்பதியை கைது செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தியாவில் குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கோ வேறு பணிகளுக்கோ அமர்த்துதல் சட்டப்படி குற்றம். ஆனாலும் பல இடங்களில் இது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக