நக்கீரன் : 'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர் பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது.
நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை நாங்களே போட்டிருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.
சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும். நீங்கள் போகும் வண்டி, நான் போகும் வண்டி என நாளுக்குநாள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்பொழுது என்ன செய்ய முடியும் சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்பொழுது நிலத்தை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறார் சம்பந்தப்பட்ட மந்திரி சாலை போட வேண்டும் என்று சொல்கிறார் என்று எங்கேயாவது நிரூபியுங்கள்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக