மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: நான்கு அமைச்சர்களின் கட்சிப் பதவி பறிப்பு… ஸ்டாலின் முடிவு!
வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில போட்டோக்களை அனுப்பியிருந்தது. ‘15 மாசெக்கள் மாற்றம் ஸ்டாலின் கையில் ரெட் லிஸ்ட் என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் வெளியான செய்தியை அப்படியே பிற ஏடுகளும் எடுத்தாண்டிருப்பதை சுட்டிக் காட்டியது இன்ஸ்டாகிராம். அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘நம் கடமையை செய்வோம்’ என்றபடியே டெலிகிராம் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சென்னை போன்ற மாநகரங்களில் பகுதிச் செயலாளர் தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அதைவிட அடுத்தகட்டத் தகவல் என்னவெனில் அந்த 15 பேர்களில் 4 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.
அமைச்சர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்களின் நான்கு பேரின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இதன் அடிப்படையில் அவர்களின் அமைச்சர் பதவியை அகற்றலாமா அல்லது கட்சிப் பதவியை அகற்றலாமா என்ற ஆலோசனை முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் நடந்திருக்கிறது. அமைச்சர் பதவியை அகற்ற முடிவெடுத்தால் ஒரே நேரத்தில் நான்கு அமைச்சர்கள் வரை மாற்றப்படுவது ஆட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்திவிடும். மேலும் மாவட்டச் செயலாளர்கள் என்ற அடிப்படையில்தான் அந்த நான்கு அமைச்சர்களும் சிகப்பு நிற பட்டியலுக்குள் வந்துள்ளனர். எனவே அவர்களின் மாசெ பதவியை பறிப்பதுதான் சரியாக இருக்கும் என்று ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின்.
இந்த ஆலோசனையில் இன்னொரு கேள்வி முளைத்திருக்கிறது. அமைச்சராக இருப்பவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அங்கே இன்னொரு மாவட்டச் செயலாளரை கொண்டுவந்தால், புதிதாக வரும் மாவட்டச் செயலாளர் எப்படி செலவு பண்ணுவார்? கட்சி செயல்பாடுகளுக்கு அவர் அமைச்சரை நம்பிதானே இருக்க வேண்டும்? இது மேலும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தாதா? இதுதான் சாக்கு என மாசெ பதவியில் இருந்து அகற்றப்பட்ட அமைச்சர்கள் கட்சிக்கு செலவு பண்ணுவது மிச்சம் என்று ஒதுங்கிக் கொள்ள மாட்டார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு அதுபற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் என இரு பதவிகளில் இருக்கும் நபர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால் அவரது அமைச்சகத்தில்தான் அவருக்கு செல்வாக்கு இருக்கும். மாவட்ட அளவில் கட்சியில் அவருக்கு செல்வாக்கு இருக்காது. மேலும் மாவட்ட அளவில் அனைத்து துறைகளின் மூலம் பெறப்படும் வருவாய் மாவட்டச் செயலாளராக வருகிறவருக்கே செல்வதற்கான ஏற்பாடுகளை தலைமை செய்துவிடும் என்று விளக்கமும் தரப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் விரைவில் நான்கு அமைச்சர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட இருக்கின்றன என்பதுதான் திமுகவில் இப்போதைய ஹைலெவல் ஹாட்.
நாளை ஆகஸ்டு 29 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான ஆணைய அறிக்கை , பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்தும் பணிகள் போன்றவை விவாதிக்கப்பட இருக்கின்றன. பொதுவாகவே அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு சார்ந்த இதுபோன்ற கொள்கை முடிவுகள் விவாதிக்கப்படும்போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இருப்பார்கள். இந்த விவாதம் முடிந்த பிறகு அதிகாரிகளை அனுப்பிவிட்டு அமைச்சர்களோடு மட்டும் தனியாக சில நிமிடங்கள் விவாதிப்பது முதல்வர் ஸ்டாலினின் வழக்கமாகவே இருக்கிறது. ஏற்கனவே நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் அதிகாரிகள் இல்லாமல் கடைசியில் சில நிமிடங்கள் அமைச்சர்களோடு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய விஷயங்களைப் பற்றி விசாரித்திருக்கிறார், சில முக்கிய வாய்மொழி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். இந்த வகையில் நாளை ஆகஸ்டு 29 அமைச்சரவைக் கூட்டம் முறைப்படி முடிந்த பிறகு அதிகாரிகள் இல்லாமல் அமைச்சர்களிடம் கட்சி செயல்பாடுகள் பற்றிய விஷயங்களையும் விவாதிக்க இருக்கிறாராம் முதல்வர்.
கோவை மாவட்டத்தில் அண்மையில் மாவட்டப் பொறுப்பாளர்களை சந்தித்தபோது, ‘ஒற்றுமையா இருங்க. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுங்கள்’ என்று சொன்னது மாதிரி அமைச்சர்களுக்கும் சில எச்சரிக்கைகள் காத்திருக்கிறது என்கிறார்கள் திமுக தலைமை வட்டாரத்தில். அனேகமாக கட்சிப் பதவி பறிபோகும் அந்த நான்கு அமைச்சர்கள் யார் யார் என்பது பற்றி நாளைய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் சில அறிகுறிகள், சமிக்ஞைகள், சிக்னல்கள் இருக்கலாம் என்பதுதான் இப்போதைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது டெலிகிராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக