வியாழன், 28 ஜனவரி, 2021

திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு மான கூட்டணியின் இன்றைய நிலவரம்...

Minnambalam : இன்றைய கூட்டணி நிலவரம்... திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற எதிர்பார்ப்பு சம்பந்தப்பட்ட கூட்டணிக் கட்சியினருக்கு மட்டுமல்ல திமுகவினருக்கும் அதிகமாகவே உள்ளது.கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திமுக தனக்குப் போதுமான இடங்களில் போட்டியிடாமல் இருந்துவிடக்கூடாது என்பதுதான் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் கருத்து. திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு வர இருக்கிற தேர்தல் வலிமையான வெற்றியை கொடுக்கும், அதனால் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலினிடம் கருத்து கூறியிருக்கிறார்.இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்...   "கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் தங்கள் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தங்களது சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்துவது வழக்கம் தான். அதே நேரம் நாங்கள் எங்கள் தனித்துவத்தை இழக்காமல் கூட்டணியின் வெற்றிக்கும் பாதிப்பு ஏற்படாமல் நல்ல முடிவெடுப்போம்" என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திமுக தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதியாக ஒரு முக்கியமான நபர் சந்தித்திருக்கிறார்.

அப்போது அவர் , "2016 சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக ஆட்சி அமைத்து கலைஞர் முதல்வராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் முக்கியப் பங்கு வகித்த மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட முக்கிய காரணங்களால் திமுக ஆட்சி அமைக்க முடியாமல் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டது. கலைஞர் இறக்கும்போது முதல்வராக இல்லையே என்ற வருத்தம் தலைவர் ஸ்டாலினுக்கு நிறையவே இருக்கிறது. அந்த வருத்தம் இருந்தபோதும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்பி தொகுதிகளை திமுக தலைவர் ஒதுக்கி ஜெயிக்க வைத்தார்.

இந்த சூழலில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் தான் ஒதுக்கப்படும். இதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். அந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவை திமுக பார்த்துக்கொள்ளும்" என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு திருமாவளவன் அதிர்ச்சி அடைந்துவிட்டார். "நாங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருக்கிறோம். கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறோம். இப்போதே என்னிடம் பல தம்பிகள் சட்டமன்ற தொகுதிக்காக கடுமையாக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டு என்பது எப்படிப் போதுமானதாக இருக்கும்? குறைந்தபட்சம் 10 சீட்டுகள் எங்களுக்கு வேண்டும்" என்று தன்னை சந்தித்த நபரிடம் கூறியிருக்கிறார்.

மேலும் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவும் அவர் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு மான கூட்டணியின் இன்றைய ஜனவரி 28 நிலவரம் இதுதான்.

வேந்தன்

 

கருத்துகள் இல்லை: