விடுதலையாகி வரும் சசிகலாவை வரவேற்க ஆயிரக்கணக்கான வாகனங்களை அவரது சொந்தங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒரு வாரம் முன்னதாகவே பெங்களூரு ஒயிட் ஃபீல்டு ஏரியாவில் உள்ள ஹோட்டல் கீஸ் என்ற தங்கும் விடுதி புக் ஆகத் தொடங்கி விட்டது. இதற்கிடையே, 100% அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லை என்ற எடப்பாடியின் டெல்லி பேட்டி, சசியை ரொம்பவே பாதித்ததாம். ஓ.பி.எஸ் துரோகம் செய்தார் என எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஜெ.வின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்து சிறைக்கு சென்றவர் சசிகலா. விடுதலையாகி வரும்போது, தன்னால் முதல்வரான எடப்பாடி இப்படி ஒரு பேட்டி கொடுத்ததை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பா.ஜ.க.விடம் சமரசம் பேசி வந்த தினகரனிடமும் திவாகரனிடமும் எடப்பாடி பேட்டியின் பின்னணி பற்றி சிறையிலிருந்த சசிகலா விசாரித்துள்ளார். 4 நாட்கள் முன்னதாகவே என்னை விடுவிக்க பா.ஜ.க முன்வந்த நிலையில், மோடி சொல்லித்தான் எடப்பாடி பேசுகிறாரா? எனக் கேட்டுள்ளார். டெல்லியில் எடப்பாடியிடம் மனுவை மட்டும் வாங்கிக்கொண்டார் பிரதமர். எதுவும் பேசவில்லை. முதல்வர் பதவியிலேயே நீடிக்கப்போவதாக கற்பனையில் இருக்கிறார் எடப்பாடி. அந்த கற்பனைக்கு உங்களால் ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என பயந்து வெறுப்பை உமிழ்கிறார் என்று சசியிடம் விளக்கியவர்கள், எடப்பாடி மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கையில்லை என்பதன் அடையாளம்தான் குட்கா வழக்கில் சி.பி.ஐ.யின் குற்றபத்திரிகை என்றும் தெரிவித்துள்ளனர்.
திவாகரன், தினகரன், டாக்டர் வெங்கடேசன் மூவரிடமும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பேசி வருவது பற்றியும் சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. உங்களுக்கு வரவேற்பு அளிக்கும்போது 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பெரிய வெள்ளி வாள் ஒன்றை கொடுக்கத் தயாராகி விட்டார். அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் வெளிப்படையாகவே உங்களை ஆதரிக்கிறார்கள். இதுதவிர எடப்பாடியின் சொந்த மண்டலமான கொங்கு மண்டலத்திலேயே சிவசாமி போன்றோர் எடப்பாடிக்கு எதிராக உங்களை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள். இவர்களை தவிர செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் போன்றோர் எடப்பாடியை எதிர்ப்பதா உங்களை ஆதரிப்பதா என ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள்.
எடப்பாடியிடம் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, கே.சி.வீரமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன் போன்ற அமைச்சர்களும், பொன்னையன், வளர்மதி, மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற நிர்வாகிகளும் இருக்கிறார்கள். தினகரன் தனியாக கட்சி துவங்கும்போது எடப்பாடிக்கு எதிராக 35 எம்.எல்.ஏ.க்கள் திரண்டு வந்தார்கள். பின்பு, பாஜ.க அவர்கள் பக்கம் இருந்ததால் அது சுருங்கி 18 ஆனது. இப்போது எடப்பாடியை பா.ஜ.க விரும்பாத நிலையில், 30 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக திரண்டாலே போதுமானது. மற்ற எம்.எல்ஏக்கள் தானாக வந்துவிடுவார்கள்” என சசிகலாவுக்கு களநிலவரத்தை விளக்கியுள்ளனர்.
பொறுமையாக கேட்டுக்கொண்ட சசிகலா, "நான் 30 ஆண்டு காலம் அரசியலில் இருந்தவள். நான் வெளியில் வந்தால் சும்மா இருப்பேன் என எடப்பாடி நினைக்கிறாரா?'' என கோபத்துடன் கேட்டுவிட்டு, "நான் வெளியே வந்தவுடன் அக்காவின் சமாதிக்கு செல்ல வேண்டும். அங்கு மீண்டும் புதிய சபதங்களை ஏற்க இருக்கிறேன்'' என சொல்லிவிட்டு "அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்'' என உத்தரவிட்டார்.
சசிகலாவின் புதிய அரசியல் வியூகங்களைப் பற்றி கேள்விப்பட்ட எடப்பாடி, "யாரும் சசிகலா பக்கம் போய் விடாதீர்கள். நீங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள்மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன். மேலும் தேவையென்றால் நான் தருகிறேன்'' என வாக்குறுதி அளித்துவருகிறார். அ.தி.மு.க.வை எடப்பாடி தலைமையிலிருந்து மீட்பது, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவது, தேவைப்பட்டால் அதை முடக்குவது, எம்.எல்.ஏக்களை இழுப்பது, அதன்மூலம் கவர்னர் ஆட்சி கொண்டுவருவது என அனைத்து விதமான ஏவுகணைகளுடனும் சசிகலா புறப்பட்டு வருகிறார். அதற்கான ஆலோசனைகள் அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே தொடங்கிவிட்டது என்கிறார்கள் அவரது சொந்தபந்தத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக