|
|
minnambalam : இயக்குனர் சீனு ராமசாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட சமூகப் பார்வையுள்ள அனைவரும் பாராட்டத் தக்க திரைப்படங்களை எடுத்தவர். ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என திரைத் துறையிலிருந்து முதலாவதாக எழுந்த குரல் இவருடையதுதான். இந்த நிலையில்
இன்று (அக்டோபர் 28) காலை சீனு ராமசாமி திடீரென தனது ட்விட்டர்
பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா
உதவ வேண்டும். அவசரம்” என்று பதிவிட்டிருந்தார். இது திரைத் துறையினர்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர்
தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தவர், தனக்கு அரசியல் சினிமா
எடுக்கத் தெரிந்த அளவுக்கு சினிமாவில் அரசியல் தெரியாது எனக்
குறிப்பிட்டார். விஜய் சேதுபதியின் நலன் கருதி தமிழர்களின் எதிர்ப்பை
சம்பாதிக்கக் கூடாது என்பதால் 800 பட விவகாரம் தொடர்பாக என்னுடைய
கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்கு எதிராக
இருப்பதாக தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது என்றார்.
நன்றி, வணக்கம்
எனக் கூறியதற்கான பொருள் பற்றி தான் விஜய் சேதுபதியிடம் கேட்டதாகத்
தெரிவித்த அவர், “அந்த கதை பிடித்ததாலும், உலகம் முழுவதும் சென்று சேரும்
என்பதாலும்தான் அதில் நடிக்க சம்மதித்தேன் என விஜய் சேதுபதி என்னிடம்
தெரிவித்தார். அதன்பிறகுதான் அதில் சில அரசியல் இருக்கிறது, தமிழர்களின்
உணர்வுகளை புண்படுத்துவது போல இருக்கிறது என தெரிந்துகொண்டதாகவும், என்ன
செய்வது எனத் தெரியாமல் இருந்தபோது, அதனை தயாரிப்பு நிறுவனமே
புரிந்துகொண்டு விலகிக் கொள்ளச் சொன்னதாகவும், அதற்கு நன்றி வணக்கம்
சொன்னதாகவும் அவர் என்னிடம் கூறினார். அந்த பிரச்சினையும் முடிந்துவிட்டது”
என்று தெரிவித்தார்.
மேலும், “ஆனால், வாட்ஸ் அப் மூலமும், போனிலும்
தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச
வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததால்
எனக்கு மனப் பதட்டம் உருவானது. அதனால், உடனே தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காக சொன்னேன். விஜய் சேதுபதி ரசிகர்கள் என்னுடைய தம்பிகள். அவர்கள்
என்னை மிரட்டுவதற்கு வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.
4-5 நாட்களாக இதுபோன்ற மிரட்டல்கள் வருவதாகவும், இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் சீனு ராமசாமி.
எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக