சனி, 31 அக்டோபர், 2020

கட்டும்போதே இடிந்து விழுந்த அரசு மருத்துவக் கல்லூரி!

minnambalam : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த மார்ச் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது நாமக்கல் மருத்துவக் கல்லூரி. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்பக்கம், புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தின் முன்புறப் பகுதி நேற்று (அக்டோபர் 30) திடீரென இடிந்து விழுந்தது. 25 ஏக்கர் பரப்பளவில் ரூ. 336 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தை சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திறப்பு விழா செய்ய வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டதால் பணிகள் வேகமாக நடைபெற்றதாகக் கூறுகிறார்கள். பல வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த கட்டுமானப் பணியில் நேற்று காலை 6 மணிக்கு வேலையாட்கள் பலரும் இல்லாத நிலையில் கான்க்ரீட் இடிந்து விழுந்துள்ளது.

 கட்டும்போதே இடிந்து விழுந்த அரசு மருத்துவக் கல்லூரி!

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர் மெகாராஜ், "போர்டிகோ கட்டுவதற்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்துக்கு வைக்கப்பட்ட கம்புகள் சரியான முறையில் இல்லாததால் பொறியாளர்கள் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனால்தான் அது இடிந்து விழுந்தது. வேறு ஒரு பிரச்சினையும் இல்லை” என்றார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் பி. தங்கமணியும் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,

“நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது. மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது. சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது.

நினைவிருக்கட்டும்... நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா”என்று கடுமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: