செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஜெ., மரணத்தை ஏன் முன்னிறுத்துகிறது தி.மு.க? – அதிர்ச்சி கொடுக்குமா 5 சி.டி-க்கள்?

.vikatan.com ஆ.விஜயானந்த் :  ஆறுமுகசாமி ஆணையம் என்பது அ.தி.மு.க அரசால் நியமிக்கப்பட்டது. அந்த ஆணையம், `இந்த அரசு வேகமாகச் செயல்படவில்லை’ என்று சொன்னால், கமிஷன் நியாயமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். `ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தர வேண்டிய ஆறுமுகசாமி ஆணையம், 37 மாதங்களாகத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. `அப்போலோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மேலும் ஐந்து சி.டி-க்கள் இருக்கின்றன. அவை வெளியே வரும்போது மொத்த மர்மமும் விலகும்’ என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த புகழேந்தி.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையம், எட்டாவது முறையாக காலநீட்டிப்பு கோரியிருக்கிறது. வரும் 24-ம் தேதியோடு ஆணையத்தின் கால அளவு நிறைவடைவதால், இது தொடர்பாக அரசுக்குக் கடிதம் எழுதயிருக்கும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையத்தின் விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பெற்ற தடை உத்தரவை நீக்கக் கோரும் மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை, இதற்குக் குறைந்தபட்ச ஆட்சேபனைகூட தெரிவிக்காமல் அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்த்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். அ.தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட ஆணையமே அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டியது அரசியல் வட்டாரத்தில் உற்று கவனிக்கப்பட்டது.

ஆறுமுகசாமி

இதைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ` தற்போதுள்ள அ.தி.மு.க அமைச்சர்களோ, ஜெயலலிதா மறைவால் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமோ, இப்போது முதல்வராக இருக்கும் பழனிசாமியோ தங்களின் பதவிச் சுகத்துக்காக இந்த விசாரணை ஆணையத்தை முடக்கிவைத்திருக்கிறார்களே தவிர, ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள சதியைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டுவரத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. அந்தச் சதி பற்றி விசாரித்தால், போயஸ் தோட்டம், அப்போலோ மருத்துவமனை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ராஜ்பவன் என ஒரு நீண்ட அத்தியாயமாக மாறிவிடும்.

அதுதான் அ.தி.மு.க அரசு காட்டும் தயக்கத்துக்கான காரணம் எனப் பொதுமக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் தலைவியின், ஒரு முதல்வரின் மரணத்திலுள்ள சதியை மறைக்க, அரசியல் விளையாட்டு நடத்திவருகிறார்கள். தி.மு.க ஆட்சி அமைந்ததும், நான் ஏற்கெனவே தேர்தல் பிரசாரங்களில் கூறியபடி, மறைந்த ஜெயலலிதா மரணத்திலுள்ள சதியை விசாரித்து, மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.


மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், தி.மு.க கையில் எடுத்திருக்கும் இந்த ஆயுதம், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. `அ.தி.மு.க தொண்டர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்காக தி.மு.க முன்னிறுத்தும் யுக்தி இது’ என்ற பேச்சுக்களும் வலம்வருகின்றன.

இது தொடர்பாக, தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். “ ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலேயே, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக கேள்வியெழுப்பினோம். அப்போது தி.மு.க தலைவர் கலைஞரும், முதல்வரின் உடல்நிலை குறித்து பொதுவெளியில் சொல்லப்பட வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவுவதாகவும் அறிக்கை வெளியிட்டார். மருத்துவச் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை ஆளுநராலும் பார்க்க முடியவில்லை. ஆனால், காவிரிப் பிரச்னை தொடர்பாக அவர் விவாதித்ததாகத் தகவல் வெளியானது. பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஜெயலலிதா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்திருக்க வேண்டும்.

ஒரு முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்கள் வெளியில் வர வேண்டும் என்பதுதான் இதில், தி.மு.க-வின் நிலை. ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, சசிகலா தொடர்பான செய்திகளே மக்கள் மத்தியில் பிரதானப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 2017, பிப்ரவரி 5-ம் தேதியன்று தர்மயுத்தத்தைத் தொடங்கிய பன்னீர்செல்வம், `10 சதவிகிதம்தான் சொல்லியிருக்கிறேன். மீதமுள்ள 90 சதவிகிதத்தைச் சொல்லவில்லை’ என்றார்.

இப்போது மூன்று ஆண்டுகளாக அவர் எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறாரென்றால் என்ன அர்த்தம்? ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, தனக்கு எதுவும் தெரியாது என்று அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் சொன்னால், நிர்வாகம் அவர் கையில் இல்லை என்று அர்த்தம். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. ஆனால், யாரிடம் கேட்டாலும் பதில் இல்லை.

வழக்கறிஞர் கண்ணதாசன்
வழக்கறிஞர் கண்ணதாசன்

ஆறுமுகசாமி ஆணையம் எட்டாவது முறையாக காலநீட்டிப்பு கேட்டிருக்கிறது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்போலோ போட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். இவர், `கலைஞருக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடியவர். ஆணையத்துக்கு எதிராக அவர் வாதாடியபோது, தமிழக அரசின் வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அரசுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லையென்றால், உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்தின் மீதான தடையை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது, ஒரு சாதாரண தொண்டர்கூட அவரைச் சென்று சந்திக்க முடிந்தது. ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாமல் தடுத்த சூப்பர் பவர் யார்… இதுதான் எங்களுடைய கேள்வி. அதனால்தான், `தி.மு.க ஆட்சிக்கு வரும்போது விசாரணை நடத்துவோம்’ என தி.மு.க தலைவர் சொன்னார். இந்த விவகாரத்துக்கும் தேர்தல் பலன்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்றார் உறுதியாக.

தி.மு.க தலைவரின் அறிக்கை குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.கவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, “ மக்கள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் சசிகலா மீது சந்தேகம் எழுந்தது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட ஆறு சி.டி-க்கள் இருக்கின்றன. அதில், `ஒரு சி.டி-யை வெளியில் விடுவோம்’ என அ.ம.மு.க-வில் இருக்கும்போது பேசினேன். அதேபோல், ஒரு சி.டி வெளியே வந்தது. இன்னும் 5 சி.டி-க்கள் இருக்கின்றன. அவை வெளியே வரும்போது சந்தேகங்கள் நீங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேநேரம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்யவில்லை என்பது கேள்வியாக வரும். இதற்கு அப்போலோ நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். இதை முன்வைத்துத்தான் ஓ.பி.எஸ்., விசாரணை ஆணையம் கேட்டார்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

அதன்படியே ஆணையம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ள தடை உத்தரவை நீக்குவதற்கு எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. விரைவில் தடை நீக்கப்பட்டுவிடும். ஆறுமுகசாமி ஆணையம் என்பது அ.தி.மு.க அரசால் நியமிக்கப்பட்டது. அதில் அங்கம்வகிக்கும் நீதிபதியும், இந்த அரசால் நியமிக்கப்பட்டவர். அவர், `இந்த அரசு வேகமாகச் செயல்படவில்லை’ என்று சொன்னால், இந்தக் கமிஷன் நியாயமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

அவர் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை எனத் தெரிகிறது. அதேநேரம், ஸ்டாலின் பேசுவதில் உள்நோக்கம் இருக்கிறது. இவருக்கு என்ன அக்கறை… என்றைக்காவது கலைஞரைப் பற்றி நாங்கள் தவறாகப் பேசியிருக்கிறோமோ? எதையாவது சொல்லி ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க-வின் வாக்குவங்கியை ஈர்க்கப் பார்க்கிறார். அவரது நோக்கம் நிறைவேறாது” என்றார் கொதிப்புடன்.

கருத்துகள் இல்லை: