புதுச்சேரியில்
நேற்று முன் தினம் இரவு மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்ற
வம்பாகீரப்பாளையம் மீனவர்களின் வலையில் மர்மப் பொருள் ஒன்று சிக்கியது.
நள்ளிரவு என்பதால் அது என்ன என்று தெரியாமல் குழம்பிய நிலையில் மீனவர்கள்
அதை வெளியே இழுக்க முயற்சி செய்தனர்.
ஆனால்,
அந்தப் பொருள் மிகவும் கனமாக இருந்ததால் கரையில் இருக்கும் மீனவர்களை
தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தனர். அதன்பின் மற்ற மீனவர்களின் உதவியோடு
சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அதைப் படகில் கட்டி கரைக்கு
இழுத்து வந்தனர்.
செயற்கைக்கோளின்
உதிரிப்பாகம் போலிருந்த அந்தப் பொருளைப் பார்த்து அச்சமடைந்த மீனவர்கள்
காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த காவல்துறை
அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் 2019 மார்ச்
22 என என்றும் PSOM XL என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரோ
இணையதளத்தில் PSOM XL என்றால் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச்
செல்லும் எரிகலன் என்றும், புவியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கோளை
நிலைநிறுத்தும் வாகனமான பி.எஸ்.எல்.விக்குள் (Polar Satellite Launch
Vehicle) இத்தகைய எரிகலன்கள் சுமார் 6 பொருத்தப்படும் என்றும்
குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும்
தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் PSMO XL என்ற மோட்டர் அந்த வகையைச்
சேர்ந்தது என்றும், 13.5 மீட்டர் நீளமும், 1.6 டன் எடையும் கொண்ட இந்த
மோட்டார் மூலமாக 12.4 டன் எடையுள்ள செயற்கைக் கோளை விண்ணுக்கு எடுத்துச்
செல்லலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை புதுச்சேரிக்கு வந்த இஸ்ரோ அதிகாரிகள்
கரைக்கு இழுத்து வரப்பட்ட PSOM XL மோட்டாரை ஆய்வு செய்தனர். அப்போது அதில்
வட்ட வடிவத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட வெடிபொருள் நிரப்பிய பாகத்தை
(Polimer explosive) இஸ்ரோ குழு அகற்றினார்கள். நேற்று பத்திரிகைகள்
மற்றும் ஊடகங்களில் வெளியான படங்களில் வெடிபொருள் நிரம்பிய பாகம் முழுமையாக
இருந்தது. ஆனால் இன்று அதில் சுமார் 1 அடி நீளமுள்ள பாகத்தைக் காணவில்லை.
அதில் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வெப்பம் அதிகமானால் அது வெடிக்கும்
தன்மை கொண்டது என்றும், மீனவர்கள் யாராவது எடுத்திருந்தால் அதை உடனே
ஒப்படைக்கும்படியும் எச்சரித்து வருகிறார்கள். அதனால் செயற்கைக்கோளின்
எரிகலன் வைக்கப்பட்டிருக்கும் வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே
அந்த எரிகலனை இஸ்ரோ அதிகாரிகள் எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் ”அதை
கரைக்கு இழுத்து வரும் முயற்சியில் எங்கள் வலைகள் வீணாகிவிட்டன. அதற்கு
உரிய இழப்பீடு கொடுத்தால் மட்டுமே அதை எடுத்துச்செல்ல அனுமதிப்போம்.
இல்லையென்றால் அது எங்களிடமே இருக்கட்டும். அது எங்களுக்குத்தான் சொந்தம்”
என்று உப்பளம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக