சென்னை: வருங்கால வைப்பு நிதித் தொகையில் முறைகேடு செய்ததாக எழுந்த
புகார் தொடர்பாக சவீதா கல்வி நிறுவனம், கல்லூரி தலைவர் வீடு, அலுவலகம்
மற்றும் நிர்வாகிகளின் வீடு என 18 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
மேற்கொண்டனர். அப்போது கல்லூரியில் உள்ள லாக்கரில் இருந்த ரூ. 5 கோடியை
சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் மருத்துவக் கல்லூரி உள்பட பல
கல்லூரிகளை நடத்தி வருகிறது சவீதா கல்வி குழுமம். இந்நிலையில், அந்த
நிறுவனம் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால
வைப்பு நிதி தொகையை செலுத்தாமல் கோடிக் கணக்கில் முறைகேடு செய்ததாக
சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தது.
Raid in Saveetha college
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. அப்போது, தங்களுக்கு சாதகமாக
செயல்படக் கூறி, கடந்த 18ம் தேதி வருங்கால வைப்பு நிதி ஆணையர் துர்கா
பிரசாத், வைப்பு நிதி அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏழுமலை, மணிகண்டன்
ஆகியோருக்கு சவீதா கல்வி குழும அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க முயன்றனர்.
ரூ. 25 லட்சத்தை சவீதா கல்லூரியின் அலுவலர்களான செங்கோட்டையன் மற்றும்
சூரிய நாராயணன் ஆகியோரிடம் இருந்து வைப்பு நிதி அமலாக்க அதிகாரிகள் ஏழுமலை,
மணிகண்டன் ஆகியோர் வாங்கி உள்ளனர். பின்னர் அந்த பணத்தில் ரூ. 14.5
லட்சத்தை மண்டல கமிஷனரிடம் கொடுத்தனர். அப்போது அவர்கள் சிபிஐ
அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்
இது தொடர்பாக துர்கா பிரசாத், ஏழுமலை, மணிகண்டன், சுடலைமுத்து, ராஜா,
செங்கோட்டையன், சூரிய நாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன்
தொடர்ச்சியாக சவீதா கல்வி குழுமங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. அதில்
பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்காக கல்லூரி
தலைவர் வீடு, அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் என 18
இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கல்லூரி
லாக்கரில் இருந்த ரூ. 5 கோடியை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கல்லூரி ஊழியரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை 3 நாள் சிபிஐ காவலில் விசாரணை நடத்த
நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணைக்கு பின்னர் மேலும் பல
தகவல்கள் வெளிவரும் என சிபிஐ அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
://tamil.oneindia.com/
://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக