ஞாயிறு, 4 ஜனவரி, 2015

நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கை மேயராக வெற்றி பெற்றுள்ளார்


நாட்டிலேயே முதன்முறையாக ஒரு நகரத்தின் மேயராக திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர் (வயது 35) என்ற திருநங்கை தன்னை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீர் குருஜியை விட 4,537 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். தலித் வகுப்பைச் சேர்ந்த மது கின்னர் இந்த சாதனை வெற்றி பற்றி குறிப்பிடுகையில், 'மேயர் தேர்தலில் போட்டியிட்ட நான் பிரசாரத்தின்போது எனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்தேன். முதல் முறையாக என்னை இந்த தேர்தலில் போட்டியிட வைத்ததும், வெற்றி பெற வைத்ததும் உள்ளூர் மக்கள்தான். அவர்களின் ஆதரவால் தான் இந்த தேர்தலில் என்னால் வெற்றியடைய முடிந்தது’ என்று கூறினார்.


இது மது கின்னருக்கு கிடைத்த வெற்றியல்ல; பா,ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வி என்பதை அக்கட்சி உணர வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில் மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், இது தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளதாகவும் ராய்ப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மது கின்னர் பல்வேறு வேலைகளை செய்தும் ரெயில்களில் ஆடிப்பாடி பணம் சேகரித்தும் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com  

கருத்துகள் இல்லை: