புதன், 28 ஆகஸ்ட், 2013

2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சீரமைக்க மோடிக்கு நீதிமன்றம் உத்தரவு !

காந்தி நகர்: குஜராத்தில் 2002-ம் ஆண்டு கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளின் சீரமைப்புச் செலவை அரசே ஏற்கத் தயார் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன. சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்த வேண்டுகோளை குஜராத் அரசு முதலில் நிராகரித்து விட்டது. இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம், 'மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு ஆகும் செலவை குஜராத் அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. மக்களையும், மக்களின் சொத்துகளையும் பாதுகாக்க தவறியதற்காக நீதிமன்றம் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, குஜராத் மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாநில அரசின் சார்பில் மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அந்த திட்டம் என்ன? என்பதை கோர்ட்டுக்கும், குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டிக்கும் மாநில அரசு தெரிவிக்கும்' என கூறினார். இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து கூறிய அந்த கமிட்டியின் தலைவர் ஷகில் அகமத், 'அரசு என்ன திட்டத்தை அறிவிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக பொறுத்திருப்போம். ஆனால் எப்படியிருந்தாலும் இந்த முயற்சி, மோடி மீதான கறையைத் துடைத்துக் கொள்ளவதற்காகவே என்பதில் சந்தேகமில்லை,' என்றார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: