மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் அவலம், நாடு சுதந்திரம் அடைந்து 65
ஆண்டுகள் ஆகியும் முற்றுப் பெறவில்லை. இது, இந்திய ஜனநாயகத்தில் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கும் மாபெரும் கொடுமை.
கடந்த 1993ம் ஆண்டு, மனித கழிவுகளை மனிதர்கள் அப்புறப்படுத்த, மத்திய அரசு
தடை விதித்தது.
இதுபற்றிய விழிப்புணர்வை, போர்கால அடிப்படையில், விளிம்பு
நிலை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என, அறிவுறுத்தியது. ஆனால்,
அதுபற்றிய எந்த விழிப்புணர்வும், இன்று வரை ஏற்படுத்தப் படவில்லை.முறைகேடு:உள்ளாட்சி அமைப்புகளில், கழிவு நீர் தொட்டி அடைப்பு, மழை நீர் வடிகால் போன்றவற்றில் ஏற்படும் அடைப்புகளுக்கு, இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என, உத்தரவிடப் பட்டது. ஆனால், இத்தகைய வேலைகளில், துப்புரவு தொழிலாளர்களே அதிகளவில், முறைகேடாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.சென்னையில், கடந்த ஆண்டில், கழிவு நீர் தொட்டியில் வேலை செய்யும்போது இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 25ஐ தாண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும், இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும், சமூக சிந்தனையாளருமான நாராயணன்
கூறியதாவது:விஷ வாயு தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்கள் குறித்து, எந்த புள்ளி விவரமும் இல்லை. பணியின் போது இறக்கும் பணியாளரின் வாரிசுதாரர் வேலை பெறுவது, தென் மாநிலங்களில் அதிகளவில் நடக்கின்றன. இதிலிருந்து, அதிக துப்புரவு பணியாளர் இறப்பது உறுதிபடுத்தப் படுகிறது.துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு சலுகைகள் அனைத்தும், அரசாணைகளில் மட்டுமே உள்ளது; நடைமுறைக்கு வருவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.வழக்கு:மேலும், "ரயில்வே பணிகளில், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே, துப்புரவு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காகவே, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில், பொதுநல வழக்கை தொடுத்திருக்கிறேன்,'' என்றார். சென்னையில், கழிவு நீரகற்றும் வாரியும், பாதாளச் சாக்கடை சுத்தம் செய்ய, மோட்டார் இணைப்புடன் கூடிய தோண்டு கருவி கொண்ட இயந்திரத்தை அறிமுகம் செய்திருப்பதால், பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பரிதாப நிலை, குறைந்து வருகிறது. ஆனால், பெரிய அளவிலான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி பணியாளர்கள் இறக்கும் சம்பவம் தொடர்கிறது.- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக