அம்மா (முதல்வர் ஜெயலலிதா) வுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அவரை நான் நேரில் போய் பார்க்காவிட்டாலும், எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்வார் அவர், என்று கூறியுள்ளார் அஜீத்குமார்.
திமுக ஆட்சியின் போதே ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்டவர் நடிகர் அஜீத். தேர்தலில் அவர் சொல்லாமலேயே அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர் பெரும்பாலான அவரது ரசிகர் மன்றத்தினர். சிலர் மட்டும் திமுகவை ஆதரித்தனர். இது காதுக்கு வந்ததும், உடனடியாக மன்றங்களையே கலைத்துவிட்டார் அஜீத்.
இந்த நிலையில் தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வரானார். தேர்தலின்போது அமைதியாக இருந்த விஜய் கூட, ஓடிப் போய் ஜெயலலிதாவைச் சந்தித்து, 'நான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றேன் அப்படியே நடந்துவிட்டது' என அதிமுக வெற்றிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார்.
இன்னொரு பக்கம் கமல்ஹாஸன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மங்காத்தா படம் வெளியாவதையொட்டி, குறிப்பிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும் ஆங்கில சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து வருகிறார் அஜீத்.
சமீபத்தில் ஒரு டிவி பேட்டியின் போது, ஏன் நீங்கள் முதல்வரைப் பார்க்கப் போகவில்லை என்று கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், "முதல்வர் மேடம் எந்த அளவு பிஸியாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களை அநாவசியமாக தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இன்று அவரை நான் ஏன் பார்க்கப் போகவில்லை என்று கேட்பவர்கள், ஒருவேளை நான் போய் பார்த்தாலும் ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிப்பார்ரகள். மங்காத்தா படத்தை சிக்கலில்லாமல் ரிலீஸ் செய்ய ஜெயலலிதாவை நான் போய் பார்த்தாகக் கூட கூறுவார்கள். இவங்க பேசறதுக்கேத்த மாதிரி நான் ஆட வேண்டுமா என்ன?
அம்மாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். எது உண்மை எது உண்மை இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர் அம்மாதான். எனவே என்னைப் பற்றி குறை கூறுபவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. இவர்கள் என்ன எனது அடுத்த படத்தை தயாரிக்கவா போகிறார்கள்?", என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக