சனி, 21 மே, 2011

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கோரும் 140 வீத சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது : உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க ஒன்றியம் கோரும் 140 வீத சம்பள அதிகரிப்பை அரசினால் வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதென்றால் நாம் அத்தியாவசிய பொருட்களுக்கு வரியினை அதிகரிக்க வேண்டியேற்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே உயர்கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அமைச்சர் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க ஒன்றியம் சம்பள உயர்வுகோரி மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்துதெரிவிக்கையில், அரசு, அரச ஊழியர்களுக்கு 5 சதவீத சம்பள உயர்வினை வழங்க உள்ள அதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 36.2 சத சம்பள உயர்வை வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் மொத்தமாக 140 சதவீத சம்பள உயர்வு கோருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வுகள் பல கலந்துரையாடல்களின் பின்பே வழங்கப்பட்டன. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒன்றியத்தின் தொழிற் சங்க நடவடிக்கை பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை குழப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, விரிவுரையாளர்கள் இந்த தொழிற்சங்கத்தின் சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ள வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை 140 வீதமாக அதிகரிப்பதென்றால் அதற்காக நிதியினை பெற பல்கலைக்கழகங்கள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றம் பெறவேண்டும். இதனாலேயே வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதன் மூலம் தேவையான வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
அப்பல்கலைக்கழகங்களில் எமது மாணவர்களுக்கு 20% இலவச அனுமதியையும் பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாறான ஒரு நிலையில் விரிவுரையாளர்கள் மாதம் 5 இலட்சம் ரூபாய் அளவில் வேதனமாகப் பெறும் வாய்ப்பும் ஏற்படும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தாம் கோரும் சம்பள உயர்வு நியாயமானதா என்று சிந்திக்க வேண்டும். எமது நாட்டின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்திவிட்டு சம்பள உயர்வு வழங்குவதா என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: