வெள்ளி, 9 ஜூலை, 2010

வெற்றிக்கூட்டணியில்தான் பாமக எப்போதும் இருக்கும். அதுதான் நாங்க திமுகவோடு?

சென்னை: பாமக மாநிலத் தலைவராக 7வது முறையாக இன்று ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

பாமக தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடந்தது. அதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் பாமக மாநிலத் தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பொருளாளராக அக்பர் அலி செய்யது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இளைஞர் அணி தலைவர் அன்புமணி:

மாநில பாமக இளைஞர் அணித் தலைவராக டாக்டர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியின் செயலாளர்களாக இரா. அருள், அறிவு செல்வன், செந்தில்,சைதை சிவா, பொதுச் செயலாளராக ஞானசேகரன் ஆகியோர் தேர்வாயினர்.

கூட்டத்தில் தமிழில் படித்தவர்களுக்கு மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

-தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை டாக்டர் ராமதாசுக்கு வழங்குவது.

-மத்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

-மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

-உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

-மண்ணெண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். -பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகளைக் குறைக்க வேண்டும்.

-இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள 3 நபர் கொண்ட விசாரணைக் குழுவை பாமக வரவேற்கிறது. ஐ.நா. சபையின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று செயல்படும் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசிடம் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

-இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியா தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு உறுதியுடன் வற்புறுத்த வேண்டும்.

-தனியார் பள்ளிகளில் கட்டண சீரமைப்பு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழுவினரால் அறிவிக்கப்பட்ட கட்டண விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

-காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த சிக்கல் தீர்க்கப்படாத வரை மத்திய மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனை உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கர்நாடக அணைகளில் இருந்து இடைக்கால தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 comments:
பதிவு செய்தவர்: avs
பதிவு செய்தது: 09 Jul 2010 6:52 pm
ஒருவாரம இவர்கள் காமடியவே கானமேன்னு பார்த்தேன் ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். திமுக வுக்கு ஒரு அன்பழகன் அதிமுக வுக்கு ஒரு பன்னீர்செல்வம் பாமக வுக்கு ஒரு மனி நாடு வெலங்கும்

பதிவு செய்தவர்: அன்பு
பதிவு செய்தது: 09 Jul 2010 6:41 pm
திமுக காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி. வெற்றிக்கூட்டணியில்தான் பாமக எப்போதும் இருக்கும். அதுதான் நாங்க திமுகவோடு கூட்டணி சேர்கிறோம்.

கருத்துகள் இல்லை: