வேறுபாடுகளை மறக்க வேண்டும் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் வடக்கில் இருக்கும் மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து, அந்தப் பகுதியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை அமைச்சரவையின் கூட்டம் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகம் என்று கருதப்பட்ட கிளிநொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பிறகு பொதுமக்களை சந்தித்த போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார். கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாக வென்றதாக இலங்கை அரசு தெரிவித்த பிறகு கிளிநொச்சியில் இந்த அமைச்சரவைக் கூட்டம இடம் பெற்றது.
வட இலங்கையில் நிரந்தர இராணுவ முகாம்கள் இருக்கும் என இந்தக் கூட்டத்தில் அரசு உறுதி செய்தது. இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்த வடக்கு பகுதி மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை நிகரற்ற வேகத்தில் செய்தது என்று கூறிய ஜனாதிபதி, அரச அதிகாரிகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்ட சுமார் இரண்டாயிரம் பொதுமக்களை சந்தித்த ஜனாதிபதி அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
கிளிநொச்சியில் தமது அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளதன் மூலம், நாடு முழுவதும் தனது அதிகாரம் செல்லுபடியாகிறது என்பதையும், பிரிவினைவாத நாட்கள் ஒழிந்து விட்டன என்பதையும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது என்று செய்தியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால், நாட்டில் பேதங்கள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும், அமைச்சர்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் எனும் நோக்கில்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக